வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்த ஒருவர் கைது !

by smngrx01

வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்த ஒருவர் கைது ! on Wednesday, October 16, 2024

மஹகும்புக்கடவல – ஜெயராஜபுர பிரதேசத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலவிய விமானப்படை முகாமின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (16) குறித்த இடத்தை சோதனையிட்ட போது விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த மான் இறைச்சியை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு, சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், 56 கிலோ மான் இறைச்சியையும், இறந்த மானின் தோலையும், வன விலங்குகளின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

இது தவிர, இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​பிரதான சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், மதுரங்குளிய பிரதேசத்தில் இருந்து இறைச்சி கொள்வனவுக்காக வந்த நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் பயணித்து வந்த லொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற சந்தேகநபர் அரசுக்கு உரித்தான வனப்பகுதிக்குள் மான், காளை, காட்டுப்பன்றிகள் போன்ற வன விலங்குகளை வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வனவிலங்கு அதிகாரிகளால் கைது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, அப்போது அவரிடமிருந்து வன விலங்கு இறைச்சிகள், இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வெடிமருந்துகளை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடுவதும் தெரியவந்துள்ளது.

சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அது தொடர்பான இறைச்சி மற்றும் ஏனைய பொருட்கள் புத்தளம் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன

தொடர்புடைய செய்திகள்