திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலை ஒன்றின் இரண்டு மாடிக் கட்டிடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
நேற்று (15) பிற்பகல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு, சந்தமிட்டதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனால், அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலை வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி உயிரிழந்தது.
இக்கட்டிடத்தில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள் மற்றும் கதிரைகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (16) பிற்பகல் வந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம், கட்டிடத்திற்கு ஏதோ ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இக்கட்டிடத்தில் பாடசாலையின் 5 வகுப்புகள் உள்ள நிலையில் தற்போது பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதில் பாடசாலை அதிகாரிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி ஒரு வருடத்திற்கு முன்னர் மண்சரிவு ஏற்பட்டதால் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.