இந்தியா – கனடா உறவில் விரிசல் சரியாகுமா? ட்ரூடோ அறிக்கையின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா?
- எழுதியவர், ஆனந்த் கே.சஹாய்
- பதவி, மூத்த பத்திரிக்கையாளர், பிபிசி ஹிந்தி
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட நாட்டு பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். அதனை இந்தியா முழுமையாக நிராகரித்தது. அதன் பிறகு இரு நாடுகளும் அவரவர் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த உறவை சீராக்க சிறிய அளவில் சாத்தியம் இருப்பதாகவும் தோன்றுகிறது.
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானிய இயக்கத்தை ஆதரித்து, கனடாவில் வாழும் சீக்கியர்கள் வன்முறையை தூண்டிவருவதாக இந்தியா நம்புகிறது. இது தான் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்னை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாபில் ஏற்பட்ட வன்முறையின் ஒரு மோசமான தருணத்தில் இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதன் பிறகு 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வரலாற்றின் பின்னணியில், காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் நபர்கள் என்று இந்தியா குற்றம்சாட்டும் நபர்களுக்கு எதிராக கனடா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை இந்த கோரிக்கையை கனடா நிராகரித்து வந்துள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு “காலிஸ்தான் பயங்கரவாதி” என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால் கனடா, கருத்து சுதந்திரத்திற்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் ஆதரவளிக்கும் ஒரு நாடாக தன்னை முன்னிறுத்தி வருகிறது. ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதை தடுத்து நிறுத்தாது என்றும் கனடா கூறுகிறது.
இந்தியா, “கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களின் வாக்குகளை கணக்கில் வைத்து இவ்வாறு பேசுகிறார்” என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியது. அவருடைய அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் நிராகரிக்கிறது என்ற கேள்வியையும் இந்தியா எழுப்புகிறது.
இரு நாட்டிலும் உள்ள சீக்கியர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இந்தியாவைக் காட்டிலும் கனடாவில் அதிக சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எந்த மேற்கத்திய நாட்டுடனும் இவ்வளவு மோசமான உறவு இல்லை
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டு வரும் விரிசல் ஆச்சரியம் அளிக்கிறது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு எந்த மேற்கத்திய நாட்டுடனும் இந்தியாவின் உறவு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை.
பனிப்போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா உறவுகளை மேம்படுத்தி, படிப்படியாக முழுமையான சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது.
ஜி7, நேட்டோ நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது.
கனடா இந்த இரண்டு குழுக்களிலும் ஒரு பகுதியாக இருக்கிறது. அமெரிக்காவுடன் மிக நெருக்கமான இராணுவ உறவைக் கொண்டுள்ளது கனடா. இது வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளையான நொராட் ( North American Aerospace Defense Command (NORAD) ஒப்புதல் மூலம் அதையே பிரதிபலிக்கிறது.
இரு நாட்டுப் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றுடன் இந்தியாவின் உறவு மிகவும் மோசமாக மாறியது ஆச்சரியமளிக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார, மூலோபாய திசையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா தானாகவே முயற்சி செய்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், கனடாவுக்கான இந்தியாவின் தூதரர் சஞ்சய் குமார் வர்மாவையும், சில தூதரக அதிகாரிகளையும் இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆனால் சஞ்சய் குமார் வர்மா உட்பட ஆறு இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக கனடா கூறியது.
தூதரக அதிகாரிகள் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை நீக்கிய கனடா, விசாரணையில் கனடாவுடன் ஒத்துழைக்கவும் இந்தியா மறுத்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியது.
இதற்குப் பின்னர், கனடா தூதர் ஸ்டூவர்ட் ரோஸ் வீலர் உள்பட அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்தது.
கொலை வழக்கில் ‘விசாரணைக்கு தேவைப்படும்’ நபர்கள்
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதர் மற்றும் இதர தூதர அதிகாரிகளை ‘விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள்’ என கனடா அறிவித்த பிறகு, இரு நாட்டு தூதரக அதிகாரிகளையும வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கனடாவில், ‘Persons of Interest’ என்பது ஒரு குற்றத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும் நபர்களை குறிக்கும் சொற்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த கொலைவழக்கில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தேவையான ஆதாரம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. மேலும், கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் கேட்டது.
திங்கள் கிழமை அன்று கனடாவின் தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை கனடா களங்கப்படுத்துகிறது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கனடாவின் தற்காலிக தூதர் இதற்கு பதிலளித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அனைத்து கோரிக்கைகளையும் கனடா நிறைவேற்றிவிட்டது. நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்திய தூதர்களின் பங்கு என்ன என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தையும் இந்தியாவுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். இனி அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிடம் ஆதாரங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?
ஆனால் கனடா எப்போது இந்த ஆதாரத்தை இந்தியாவுக்கு வழங்கியது என்று தெளிவாக தெரியவில்லை. இந்த சூழலில் இரு நாட்டின் உறவுகளும் மேம்படுவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இல்லை. எதிர் திசையில் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது ட்ரூடோவும், மோதியும் சந்தித்துக் கொண்டனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டிலும் அவர்கள் சந்தித்தனர். ஆனால் இரு நாட்டு உறவுகளும் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியும் அதில் தெரியவில்லை.
லாவோஸில் நடைபெற்ற சந்திப்பு குறுகிய நேரமே நீடித்தது. அதே நேரத்தில் அதிகாரப்பூர்வமானதும் இல்லை. அந்த சந்திப்பில் இருந்து எந்த ஒரு உறுதியான மாற்றமும் வெளிவரவில்லை என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை அறிவித்தது.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சக்திகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்காத வரையில் இரு நாட்டு உறவுகளும் மேம்படுவது சவாலானது தான் என்று கூறுகின்றனர் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் நபர்கள். இது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லை. ஆனால் இது இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இது கடினமான பணியாகத் தெரிகிறது. “நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நான் கூறினேன். என்னுடைய கவனம் முழுவதும் தற்போது கனடமா மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் தான் இருக்கிறது,” என்று ட்ரூடோ கூறியதாக சிபிசி நியூஸ் தன்னுடைய செய்தியில் மேற்கோள்காட்டியுள்ளது.
வெனிஸ் நகரில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்புக்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவுகள் பதற்றமானவை மற்றும் மிகவும் கடினமானவை என்று கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியிருந்தது.
இதுபோன்ற கொலைகள் எதிர்காலத்திலும் கனடா மண்ணில் நடக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.
ட்ரூடோ அறிக்கையின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா?
இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க கனடா விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியாவும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண தேவையான ராஜ்ஜிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இல்லை.
கனடாவில் 2025-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பிரதமர் தேர்தலில் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று இந்தியாவில் ஒரு கருத்து நிலவுகிறது. புதிய ஆட்சி புதிய உறவின் தொடக்கமாக இருக்கும் என்றும் அது நம்புகிறது.
ஆனால் கனடா நாடாளுமன்றத்தில் இந்தியா மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சமாளிப்பது அவ்வளவு எளிமையாக இருக்காது.
இந்த குழப்ப சூழலுக்கு மத்தியில் அமெரிக்கா ஒரு கருத்தையும் வைத்துள்ளது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம் சாட்டியிருந்தார்.
சில வாரங்கள் கழித்து, அமெரிக்கக் குடிமகன் குர்பத்வந்த் சிங் பண்ணுவைக் கொலை செய்ய இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா முயன்றார் என்று அமெரிக்க பெடரல் நீதிமன்றம் குறிப்பிட்டது. பண்ணு ஒரு அமெரிக்க வழக்கறிஞர். காலிஸ்தான் ஆதரவாளரும் கூட.
அமெரிக்கா கனடாவுடன் சேர்ந்து இந்த வழக்கிற்கான நேரத்தை முடிவு செய்ததா என்ற கேள்வியும் நிலவி வருகிறது.
நாடாளுமன்றத்தில் வெளியான ட்ரூடோவின் அறிக்கை அமெரிக்காவின் ஆலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டதா?
இதுபோன்ற கேள்விகள் இந்தியாவில் இருந்து கேட்கப்படுகின்றன.
இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
அமெரிக்காவில் சில இந்திய அதிகாரிகளுக்கு எதிராக சிவில் வழக்குகளை சமீபத்தில் பண்ணு பதிவு செய்துள்ளார் . இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயரும் இடம்பெற்றுள்ளது.
பாரம்பரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர மாநாட்டிற்கு பிரமருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செல்வது வழக்கம். இந்த வழக்கின் காரணமாக தோவல் இந்த ஆண்டு அந்த மாநாட்டிற்கு செல்லவில்லை.
இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் ஒரு சுவாரஸ்யமான கோணத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவுடனான தனது உறவை கவனமாக மேம்படுத்தியுள்ளது. ஆனால் தேவை ஏற்படும் போது, வருங்காலத்தில் முக்கிய விஷயங்களுக்காக, நல்ல நண்பர்களைக் கூட தூரத்தில் வைத்திருப்பது அமெரிக்காவின் இயல்பில் ஒன்று.
இதில் ஒரு மாற்றுக்கருத்தும் உண்டு. உலகளாவிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமாக பார்க்கப்படுகிறது. நிஜ்ஜார் விஷயத்தில் இந்தியாவின் கோபமான நிலைப்பாட்டை புரிந்து கொள்ள இதை மனதில் கொள்ள வேண்டும்.
நிஜ்ஜார் பிரச்னையில் கனடாவுக்கு எதிராக இந்தியா ஏன் இத்தகைய ஆக்ரோஷமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள இது உதவும். வெளிநாட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிப்பதற்கும் எதிராகவும் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு இருக்கிறது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா இந்திய அதிகாரிகளை மிரட்டிய போது, இந்தியா சமநிலையில் செயல்பட முயன்றது. ஆனால் கனடா விவகாரத்தில் இந்தியா வெளிப்படுத்தும் தொனி வேறாக இருக்கிறது.
சீனா இதை ‘ஓநாய் போராட்ட ராஜதந்திரம்(Wolf Warrior Diplomacy)’ என்று அழைக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
ஆனால் கனடா பிரச்சினை தவிர்க்க இயலாத ஒன்று என்பதில் சந்தேகமில்லை. குறைவான மோதலைக் கொண்ட இராஜ்ஜிய நடவடிக்கைகளால் இந்தியாவின் நற்பெயருக்கு எந்த களங்கமும் இல்லை. இந்த பழைய இந்திய அணுகுமுறை ஒருமுறை சர்வதேச மரியாதையை அடைய உதவியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு