புலம்பெயர் தொழிலாளரின் பாதுகாப்பு, நலன்களில் அக்கறை !

by 9vbzz1

புலம்பெயர் தொழிலாளரின் பாதுகாப்பு, நலன்களில் அக்கறை ! on Wednesday, October 16, 2024

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவதே தமது முதன்மையான நோக்கமென, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்கிரமசிங்க, கடந்த (10) கடமைகளைப் பொறுப்பேற்றார்.இதன் பின்னர், பணியகத்தின் உத்தியோகத்தர்களை சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்:

பழைய பாரம்பரிய அதிகாரத்துவ முறை மாறவேண்டும். கடின உழைப்பின் மூலம் இந்நிலையை அடைந்த ஜனாதிபதியின் நம்பிக்கையில், இந்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.ஒரு அமைப்புக்கு தலைவர் மற்றும் தலைவரின் கருத்துக்கள் இன்றியமையாதது. ஆனால், தலைவர் என்ற அதிகாரத்துடன் , எனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுடன் இடைவெளியை கடைப்பிடிப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

தொழிலாளர்களின் நலன் மற்றும் பணிப்பாதுகாப்பே எனது முதன்மை நோக்கம்.பலர் வெளிநாடுகளில் ஆதரவற்றவர்களாக உள்ளனர். குறிப்பாக பணிப்பெண்கள் தங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள சிரமப்படுகின்றனர். இதற்கிடையில். இலங்கையில் அவர்களது குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

பொருளாதார ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் இலங்கை பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையரை வெளிநாடுகளுக்கு வேலைக்கனுப்பாது, முறையான பயிற்சியுடன் திறமையான வேலையாட்களாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும்.

இது ஏற்கனவே இலாபகரமான நிறுவனம். இந்த நிறுவனத்தை மேம்படுத்த நாம் உறுதியாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அரசாங்கம் எங்களுக்கு இலக்குகளை வழங்கும்.

அந்த இலக்குகளை அடைய உழைப்போம். மேலும் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கும் அதே வேளையில், சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய பாடுபட வேண்டும். அதற்கு அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்