மாணவப் பருவத்தில் சிறைவாசம், 33 வயதில் ‘கேங்க்ஸ்டர்’ – யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவரும், மகாராஷ்டிரா அரசியலில் நன்கு அறியப்பட்டவருமான பாபா சித்தீக்கி (66), கடந்த சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீண்ட காலமாக காங்கிரஸுடன் இணக்கமாக இருந்த பாபா சித்தீக்கி, 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-என்.சி.பி அரசில் இணை அமைச்சராக இருந்தார். பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கானுக்கும் சல்மான் கானுக்கும் இடையே இருந்த கசப்பான உறவை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் பாபா சித்தீக்கி அறியப்பட்டார்.
சித்தீக்கி கொலையில் 3 துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டதை மும்பை போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அன்று, ‘பாபா சித்தீக்கி கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக’ கூறப்படுவது குறித்து மும்பை காவல்துறை குற்றப்பிரிவு டி.சி.பி தத்தா நலவாடேவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
‘சிறைக்குள் கேங்க்ஸ்டர் ஆனேன்’
“முதன் முதலில் சிறைக்குச் சென்றபோது, நான் ஒரு மாணவன், பின்னர் நான் சிறைக்குள் ‘கேங்க்ஸ்டர்’ ஆனேன், எங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டனர், அதற்கு தான் நாங்கள் பதிலளித்தோம். ஒரு நபர் என்னவாக மாறுகிறார் என்பது அவருடைய சூழலைப் பொறுத்தது.”
சிறையில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இவ்வாறு கூறியிருந்தார்.
லாரன்ஸ் மீது 50 கிரிமினல் வழக்குகள் உள்ளன. பெரும்பாலான சம்பவங்களை லாரன்ஸ் சிறைக்குள் இருந்தே திட்டமிட்டு நடத்தியதாக போலீசார் கூறுகின்றனர்.
பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலாவை கொலை செய்ய சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பேட்டியை லாரன்ஸ் பிஷ்னோய் சிறைக்குள் இருந்து அளித்ததாக அந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது. ஆனால் இந்த நேர்காணல் பதிண்டா சிறையோ அல்லது பஞ்சாபில் உள்ள வேறு எந்த சிறையிலும் இருந்தோ எடுக்கப்பட்டதல்ல என்று பஞ்சாப் காவல்துறை கூறியது.
அதே போல, பிஷ்னோயின் இந்த நேர்காணல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எந்த சிறையில் இருந்தும் பதிவு செய்யப்படவில்லை என்றும் ராஜஸ்தான் காவல்துறை கூறியுள்ளது.
கொலை, திருட்டு, கொள்ளை, ஒரு நபர் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது போன்ற பல குற்றச்சாட்டுகளை 33 வயதான லாரன்ஸ் பிஷ்னோய் எதிர்கொள்கிறார். இந்த வழக்குகள் பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
லாரன்ஸ் பிஷ்னோயின் வழக்கறிஞர் விஷால் சோப்ரா, முன்னாள் பிபிசி பத்திரிக்கையாளர் சுசித்ரா மொஹந்தியிடம் பேசுகையில், “பிஷ்னோய் நிரபராதி, அவர் எந்த குற்றமும் செய்யவில்லை,” என்று கூறியிருந்தார்.
‘மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தவர்’
2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூத்த பத்திரிகையாளர் சஞ்சீவ் சவுகான் பிபிசி ஹிந்தியிடம் ஒரு கட்டுரைக்காக பேசியபோது, “லாரன்ஸ் பிஷ்னோய் பற்றிய ஊடக அறிக்கைகளில் உள்ள தகவல்களின்படி, சில இடங்களில் அவரது பிறந்த தேதி பிப்ரவரி 22, 1992, சில இடங்களில் பிப்ரவரி 12, 1993. அதன்படி பார்த்தால் தற்போது லாரன்ஸின் வயது 31-32,” என்று கூறியிருந்தார்.
பஞ்சாபின் ஃபாசில்காவில் உள்ள தத்ரன்வாலி கிராமத்தில் பிறந்த பிஷ்னோய் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லாரன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டதும் சுவாரஸ்யமான ஒன்றே.
போலீஸ் பதிவுகளின்படி, லாரன்ஸ் பிஷ்னோயின் உண்மையான பெயர் சத்விந்தர் சிங்.
‘அவர் தனது குழந்தை பருவத்தில் மிகவும் அழகாக இருந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை அன்போடு ‘லாரன்ஸ்’ என்று அழைக்கத் தொடங்கினர் என்றும், பின்னர் இது அவரது உண்மையான பெயரை விட மிகவும் பிரபலமானது’ என்றும் பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோயின் தந்தை லவீந்தர் சிங் ஹரியானா காவல்துறையில் காவலராக இருந்தார். 1992-இல் காவல்துறையில் சேர்ந்த அவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்று விவசாயத்தில் ஈடுபடுத் தொடங்கினார்.
லாரன்ஸ், பஞ்சாப் மாநிலம் அபோஹரில் 12-வது படித்துவிட்டு மேல் படிப்புக்காக 2010-இல் சண்டிகருக்குச் சென்றார்.
2011-ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் சேர்ந்தார். இங்கிருந்து மாணவர் அரசியலிலும் நுழைந்தார்.
டி.ஏ.வி கல்லூரியில் சேர்ந்து, மாணவர் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கிய பிறகு, அங்கே கோல்டி ப்ராருடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து கொண்டே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்காக வேலை பார்க்கும் அதே கோல்டி ப்ரார் தான், இங்கும் இந்தக் கும்பலை நிர்வகித்து வருவதாகக் கூறப்படுகிறது. லாரன்ஸ் 2011-2012-ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை (SOPU) உருவாக்கி அதன் தலைவராக ஆனார்.
லாரன்ஸ், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் பல பகுதிகளில் குடியேறிய பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்.
லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பஞ்சாபி, பக்ரி, ஹரியான்வி ஆகிய மொழிகள் தெரியும் என்று மாணவப் பருவத்தில் (பள்ளி மற்றும் கல்லூரியில்) அவருடன் இருந்த மற்ற மாணவர்கள் கூறுகிறார்கள்.
லாரன்ஸ் பிஷ்னோய் மீதான வழக்குகள்
லாரன்ஸ் பிஷ்னோய் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் நடந்தது 2011-2012-ஆம் ஆண்டு காலகட்டத்தில், அதாவது அவரது மாணவர் பருவ வாழ்க்கையின் இறுதி கட்டத்தில்.
அப்போது மாணவர் அரசியலில் தோல்வியை சந்தித்ததால் விரக்தி அடைந்த லாரன்ஸின் சக மாணவர் ஒருவர், ‘மாணவர் தலைவர்’ மீது துப்பாக்கி சூடு நடத்தினார். அந்த சம்பவத்துக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வழக்கில், முதன்முறையாக லாரன்ஸ் பெயர் போலீஸ் எப்.ஐ.ஆர்-இல் இடம்பெற்றது.
லாரன்ஸ் பிஷ்னோய் 2014-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் முதன்முறையாக கைது செய்யப்பட்டு, பரத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்காக மொஹாலிக்கு (பஞ்சாப்) அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் போலீஸ் காவலில் இருந்து தப்பினார்.
லாரன்ஸ் 2016-இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்காக, MCOCA (மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் கட்டுப்பாடு சட்டம்) என்ற வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ், 2021-ஆம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திகாருக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு, அவர் பஞ்சாபின் பதிண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
2022-ஆம் ஆண்டில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் பஞ்சாப் காவல்துறை அவரை (சிறையிலேயே) கைது செய்தது.
லாரன்ஸ் ஒரு ‘A’ பிரிவு கேங்ஸ்டர் என்று பஞ்சாப் போலீஸ் கூறுகிறது. அத்தகைய குற்றவாளி மிகவும் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதே இந்த பிரிவில் ஒருவர் இருப்பதன் அர்த்தம்.
சித்து மூசேவாலா கொலை செய்யப்பட்ட சில நாட்களில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்தது.
2022-ஆம் ஆண்டில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருக்குப் பங்கு இருப்பதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Gujarat Anti Terrorist Squad) கூறியது. கட்ச் பகுதியில் பாகிஸ்தான் கப்பலில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கு இது.
அந்த போதைப் பொருட்களை ஆர்டர் செய்ததில் லாரன்ஸ் பிஷ்னோய்க்கும் பங்கு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குஜராத் காவல்துறை லாரன்ஸை டெல்லி சிறையில் இருந்து அழைத்துச் சென்று குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைத்தது.
அப்போதிருந்து அவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2023 -ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 30, அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் லாரன்ஸ் பிஷ்னோய் மீது சி.ஆர்.பி.சி-யின் 268 (1) வது பிரிவை சுமத்தியது. இதனால் ஒரு வருடத்திற்கு எந்த சூழ்நிலையிலும், அவரை சபர்மதி சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முடியாது.
இதனால்தான் பல்வேறு நீதிமன்றங்களில் தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி வருகிறார் பிஷ்னோய்.
லாரன்ஸ் பிஷ்னோய் மீது கொலை, கொள்ளை, தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அவர் மீது டஜன் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் காவல்துறையின் கூற்றுப்படி, நான்கு வழக்குகளில் மட்டுமே லாரன்ஸ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
லாரன்ஸ் பிஷ்னோய் மீது தற்போது 22 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் மீதான 7 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்
பிஷ்னோய் கும்பலில் சுமார் 700 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் இன்று கனடாவில் இருந்து இயக்கப்படுவதாகவும், அதன் தலைவரின் பெயர் கோல்டி ப்ரார் என்றும் கூறப்படுகிறது.
சித்து மூசேவாலா கொலையின் முக்கிய சதிகாரரான கோல்டி ப்ராரை மேலும் பல வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சித்து மூஸ்வாலா கொலைக்கு அவர்தான் காரணம்.
லாரன்ஸ் பிஷ்னோயின் இந்த கும்பலில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் மூன்று மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இது கும்பல் அல்ல. ஒரே போன்ற வலியை அனுபவித்தவர்களின் குழு” என்று தனது கும்பலைப் பற்றி கூறுகிறார்.
பொதுவாக, ஒரு குற்றவாளி ஒரு குற்றத்தைச் செய்த பிறகு காவல்துறை மற்றும் சட்டத்தின் பிடியிலிருந்து மறைந்து இருக்கவே முயற்சிப்பார். ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பல் எந்த ஒரு பெரிய குற்ற சம்பவத்திற்குப் பிறகும், அதற்கு அவர்களே முன்வந்து பொறுப்பேற்கிறார்கள்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லாரன்ஸின் பரபரப்பான குற்றங்களைப் பற்றி பேசுகையில், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கும், ஜெய்ப்பூரில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகாமேடியின் கொலை வழக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.