அன்று ஓய்வறியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் இன்று பேரமைதி – தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள்?

மாஞ்சோலை

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை. சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து மேற்கு மாஞ்சோலை என்ற அந்த மலை பகுதியை ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனம் 99 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து அதில் தேயிலைத் தோட்டம் நடத்தி வந்தது.

அந்த குத்தகை வரும் 2028-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தேயிலைத் தோட்டப்பணிகளை நிறுத்தி அங்கே உள்ள பணியாளர்களை வெளியேறுமாறு அறிவித்தது அந்த நிறுவனம்.

நான்கு தலைமுறைகளாக வேலை செய்து வந்த மக்கள் மாஞ்சோலையைவிட்டு வெளியேற வேண்டும் என்று வந்த அந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்று மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அங்கிருந்து வெளியேறத் துவங்கினர்.

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்த பகுதி தற்போது பேரமைதியுடன் இருக்கிறது. சிலர் வேலை நிமித்தமாக மலையில் இருந்து வெளியேறிவிட்டனர். சிலரோ செய்வதறியாது அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்ட பிறகு மாஞ்சோலை எப்படி இருக்கிறது? அங்குள்ள மக்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்டறிய களத்திற்கு சென்றது பிபிசி தமிழ்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பே, மக்களை அங்கிருந்து வெளியேற்றும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்தது தோட்ட நிர்வாகம். மக்களின் தேவைகளுக்கான அடிப்படை வசதிகள் அங்கே முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. சாலைகள் மோசமாக குண்டும் குழியுடனும் காட்சி அளித்தன.

ஆனாலும் ஒவ்வொரு நாளும் திருநெல்வேலியில் இருந்து ஒரு பேருந்து காலை மற்றும் மாலை என இரண்டு முறை மாஞ்சோலைக்கு வந்து செல்கிறது.

தேயிலைத் தோட்ட நிறுவனம் தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில், எஸ்டேட்டிலுள்ள தேயிலை பறிக்கப்படாமல் தேயிலைச் செடிகள் மரம் போல் வளர்ந்திருந்தன

தபால் நிலையங்கள் மூடப்பட்டன. ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவர் இல்லை. ஆங்காங்கே செயல்பட்டு வந்த தேநீர்க் கடைகள் மூடப்பட்டன. வாசிப்பு மன்றம் செய்தித்தாள்களின் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வனவிலங்குகள் நடமாட்டத்தின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

26 கிலோ மீட்டர் சாலைப் பயணம், 4500 அடி உயரத்தை அடைந்த போது மாஞ்சோலையின் மக்கள் தங்களுக்கு சாதகமாக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

அங்கு சுமார் 2,374 ஏக்கர் நிலத்தில், ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனம் தேயிலைத் தோட்டம் நடத்தி வந்ததால் மலை கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தற்போது அங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. .

தங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்று வருத்தம் தெரிவிக்கும் அவர்கள், மனித உரிமைகள் ஆணையம் அவர்களுக்கு சாதகமாக செயல்படும் என்ற நம்பிக்கையுடன் மாஞ்சோலையை விட்டு வெளியேறாமல் காத்திருக்கின்றனர்.

மாஞ்சோலை

படக்குறிப்பு, மாஞ்சோலைக்குச் செல்லும் பிரதான சாலை பராமரிக்கப்படாமல் கிடக்கிறது

‘என்ன செய்வதென்று தெரியவில்லை’

அங்கு வசித்து வரும் சிலர் பிபிசியிடம் பேசிய போது, தேயிலைத் தோட்டமும் அதன் இருப்புமே தங்களின் வாழ்க்கையாகிப் போனதால் மேற்கொண்டு என்ன செய்யப் போகின்றோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாக கூறினார்கள்.

எஸ்தரும் அதில் ஒருவர். மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளராக 37 ஆண்டுகள் பணியாற்றி வந்த அவர், தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். “நான்கு தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம். எனது பெற்றோர் குதிரைவெட்டி எஸ்டேட்டில் வேலை செய்தனர். நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மாஞ்சோலைக்கு வந்தேன். தற்போது கட்டாய விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளேன்,” என்றார் எஸ்தர்.

அவருடைய கணவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு விருப்பு ஓய்வு அளிக்கப்பட்டதால் தங்களின் எதிர்காலமும் குழந்தைகளின் கல்வியும் என்னவாகும் என்ற கவலை அவரிடம் இருந்தது.

“திடீரெனத் தேயிலை தோட்ட நிறுவனம் மலையை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டனர். எங்கே செல்வது? வீடு வாசல் இல்லாமல் எப்படி வாழ்வது? இதுநாள் வரை மாஞ்சோலை முகவரியைப் பயன்படுத்தினோம். இனி?” என்ன என்று கேள்வி கேட்கிறார்.

நிர்வாகம் சார்பில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை தங்கள் எதிர்காலத்திற்கு போதுமானதாக இருக்காது என்கிறார் எஸ்தர். மாஞ்சோலையில் குறைவான வருமானம் கிடைத்தாலும் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகக் கூறுகிறார் எஸ்தர்.

“மாஞ்சோலையில் கிடைக்கும் சுத்தமான குடிநீர், காற்று உள்ளிட்ட வாழ்வியலை விட்டு விட்டு எங்களால் செல்ல முடியாது. சமீபத்தில் தொழிலாளர்களைச் சந்தித்த மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரிகள் விரைவில் எங்களுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என ஆறுதல் கூறிச் சென்றுள்ளனர். எனவே நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்கிறார் எஸ்தர்.

மாஞ்சோலை

படக்குறிப்பு, எஸ்தர்

‘மாஞ்சோலையில் சாதி, மதம் இல்லை’

அதே பகுதியில் வசிக்கும் சீலன் தற்போதும் தேயிலைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். ஆனால் தினக்கூலியாக. “கடந்த 28 ஆண்டுகளாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் நான் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தேன். தற்போது தினக்கூலியாக பணியாற்றும் நிலைக்கு ஆளாகியுள்ளேன்,” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் சீலன்.

நிரந்தர பணியாளராக இருந்த சீலனை தற்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளராக அறிவித்திருக்கிறது தோட்ட நிர்வாகம். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் ஏற்படும் மின்சாரக் கோளாறுகளை சரி செய்ய அவர் அங்கே பணியில் அமர்த்தப்பட்டிக்கிறார்.

“திடீரென வேலையை விட்டு அனுப்பினால் இந்த வயதுக்குப் பிறகு நான் எங்கே வேலை தேடிச் செல்ல முடியும்? எனக்கு யார் வேலை கொடுப்பார்கள்? என்னுடைய எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை,” என்று அச்சம் தெரிவித்தார் சீலன்.

ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி இருக்கும் தன்னுடைய ஊரைப் பற்றி பேசும் போது அவர், “மாஞ்சோலை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமத்தை இனிமேல் யாராலும் கட்டமைக்க முடியாது. மாஞ்சோலை மக்களுக்கிடையே சாதி, மத வித்தியாசம் கிடையாது. இங்கு அனைத்து பண்டிகைகளும் அனைவருக்குமானதாக இருந்தது,” என்று கூறினார்.

“மாஞ்சோலையை விட்டு வெளியேறும்படி கூறிவிட்டனர். ஆனால் இங்குள்ள கோவில், தேவாலயம், மற்றும் முன்னோர்களின் கல்லறைகளை பராமரிப்பது யார்?”, என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

“அரசு மாஞ்சோலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் மீது வனத்துறைக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்றோ, வன விலங்குகளை வேட்டையாடினார்கள் என்றோ எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. எனவே ஊட்டி, கொடைக்கானல் போன்று மாஞ்சோலையிலும் மக்களை தங்க வைக்க ஏன் அரசு பரிசீலனை செய்யக்கூடாது?” என சீலன் கேள்வி எழுப்புகிறார்.

மாஞ்சோலை

படக்குறிப்பு, மாஞ்சோலைப் பகுதியிலுள்ள தேவாலயம்

‘முன்பே தெரியும், ஆனால்…’

காலம் காலமாக ஒரே பகுதியில் வாழ்ந்து விட்டு அங்கிருந்து மறுகுடி அமர்விற்கு வேறு பகுதிக்குச் செல்லுங்கள் என்றால் மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, என்கிறார் அப்பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள்.

“ஒப்பந்தம் முடிந்து நிர்வாகம் எங்களை மலையை விட்டுக் கீழே அனுப்பி விடும் என சிறுவயதிலிருந்தே எங்களது பெற்றோர் சொல்லி வளர்த்தாலும், தற்போது நிர்வாகம் போகச் சொல்லும் போது அதை ஏற்க மனம் மறுக்கிறது,” என்கிறார் அவர்.

மாஞ்சோலை மக்களின் பிரச்னையைத் தீர்க்க அரசு முன்வரவேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என காத்திருப்பதாகக் கூறுகிறார் பேச்சியம்மாள்.

தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் விருப்ப ஓய்விற்கு ஒரு சிலர் கையெழுத்திட்ட நிலையில் அவர்களுக்கு பணிக்கொடையில் 75,000-க்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்கள் வீடுகளைக் காலி செய்து செல்லும் போது மீதமுள்ள ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என தேயிலைத் தோட்ட நிறுவனம் தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது.

மேலும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் வசதிகளிலும் தொய்வின்றி வழங்கப்படுவதாக தேயிலைத் தோட்ட நிறுவனம் தெரிவித்தது.

மாஞ்சோலை

படக்குறிப்பு, பேச்சியம்மாள்

ஓய்வறியாத மாஞ்சோலை, இன்று…

பல ஆண்டுகளாக ஓய்வறியாமல் உழைத்த மக்கள் தற்போது பொழுதைக் கழிக்க சிரமபட்டு வருகின்றனர். மாஞ்சோலையைச் சேர்ந்த ஜான் என்பவர், தினமும் காலை மாஞ்சோலைக்கு வரும் பேருந்தில் ஏறி கீழே உள்ள டவுன் பகுதிகளுக்கு சென்றுவிடுகிறார்.

அங்கே தெரிந்த நண்பர்கள், உறவினர்களை பார்த்து பேசிவிட்டு, பிறகு மாலை மாஞ்சோலைக்கு வரும் பேருந்தில் ஏறி ஊருக்கு வந்துவிடுகிறார்.

மாஞ்சோலை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் மக்கள் குறைந்த சம்பளத்திற்கே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். ஓய்வுக்குப் பிறகு அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

சொந்தமாக வீடு இல்லாத பலரின் வாரிசுகளும் தோட்டத்தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த போக்கு தற்போது முகவரி ஏதும் இன்றி அவர்கள் வாழும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

“படிக்கவில்லை. படித்திருந்தாலோ அல்லது சமவெளிப்பகுதியில் விவசாயக் கூலியாக சென்றிருந்தாலோ மாற்றுவேலை கிடைத்திருக்கும். ஆனால் என்னுடைய அப்பாவுக்கு என் பாட்டன் அறிமுகம் செய்த வேலையை தான் என் அப்பா எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

37 வருடங்களாக இந்த தோட்டத்தில் நான் பணியாற்றினேன். இன்று தேயிலையையும் பறிக்க முடியவில்லை. தொழிற்சாலைக்கும் செல்ல இயலவில்லை. என்னுடைய வாழ்க்கை அப்படியே நகருகிறது,” என்கிறார் ஜான்.

மாஞ்சோலை எஸ்டேட்

பட மூலாதாரம், மாஞ்சோலை செல்வகுமார்

படக்குறிப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை

மாஞ்சோலை எஸ்டேட்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்களை உருவாக்கியது.

2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி குத்தகை காலம் முடிந்ததும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நடத்திவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் அந்த இடத்தை தமிழ்நாடு அரசிடம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை, 1929-ஆம் ஆண்டு துவங்கியதால், 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு, இந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் வசம் சென்றுவிடும். இந்த எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பல பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்படவுள்ளது.

2028-க்குள் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றி வந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அளித்துள்ளது தேயிலை நிறுவனம். ஜூன் 14-ஆம் தேதி கடைசி வேலை நாளாகாவும் அறிவிக்கப்பட்டது.

மாஞ்சோலையில் மூன்று தலைமுறைகளாக பணியாற்ற தொழிலாளர்களை அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் பணியை எஸ்டேட் நிர்வாகம் தொடங்கிய நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அதை விசாரித்த நீதிமன்றம், ‘மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும் வரை யாரையும் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை நிறுவனம் எடுத்து நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளித்த தமிழ்நாடு அரசு, தேயிலை தோட்டத்தை அரசு எடுத்து நடத்த முடியாது என பதிலளித்தது.

மாஞ்சோலை பகுதி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க குத்தகைக்கு விடுவதற்கு முன்பிருந்த நிலைக்கு மாஞ்சோலையை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று வனத்துறையும் அந்த வழக்கில் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மாஞ்சோலை

படக்குறிப்பு, மாஞ்சோலை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமத்தை இனிமேல் யாராலும் கட்டமைக்க முடியாது என்கின்றனர் அப்பகுதி மக்கள்

நீதிமன்ற உத்தரவு

இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து வசிப்பது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஒரு தரப்பினரான புதிய தமிழகம் கட்சி சார்பில் வாதிடுகையில், ‘நீண்ட காலமாக வனத்தில் வசிப்பவர்களை வன வாசிகளாகக் கருதலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மாஞ்சோலை தொழிலாளர்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணையில், வனத்தில் வாழும் பழங்குடிகளுக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் வேறுபாடு உள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய பழங்குடியினர் நலத்துறை பதில்மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்த விசாரணையில் நீதிமன்றம் தெரிவித்தது.

முன்பு நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழ்நாடு வனத்துறை, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழ அனுமதி வழங்கினால், அதே சலுகையை அரசு ரப்பர் கழகம் மற்றும் மற்ற தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் கோருவார்கள். அப்படி நடந்ததால், மேற்கு தொடர்ச்சி மலையின் பழமையான வனப்பகுதியை இழக்க வேண்டியது வரும் என்று தெரிவித்திருந்தது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், ‘மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு பட்டியலிட’ உத்தரவிட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு