நாசாவிடம் கூட இல்லாத நுட்பம்: ஏவிய இடத்திற்கே மீண்டும் வந்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் பூஸ்டர் – இஸ்ரோவும் தயாரிக்குமா?

ஸ்டார்ஷிப், மறுபயன்பாட்டு ராக்கெட், ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘ஸ்டார்ஷிப்- பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் செல்வதற்கான சேவை’ என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ‘ஸ்டார்ஷிப்’ விண்கலத்தின் ராக்கெட் பூஸ்டர் பகுதி, பூமியின் ஈர்ப்புவிசையை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்ப, அதை ‘மெக்காஸில்லா’ (Mechazilla) எனப்படும் ஏவுதள அமைப்பு தனது பிரம்மாண்ட இயந்திரக் கரங்களால் கச்சிதமாக பிடித்தது விண்வெளித் துறையில் பேசுபொருளாக மாறியுள்ளது.

காரணம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செய்திருப்பது இதுவரை விண்வெளி வரலாற்றில் யாரும் செய்யாத ஒன்று. ஸ்டார்ஷிப் விண்கலம் எங்கிருந்து ஏவப்பட்டதோ, அதே இடத்திற்கு அதன் ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ மீண்டும் கொண்டுவரப்பட்டது.

ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் மற்றும் விண்கலமாக மட்டுமல்லாது, விரைவாக மீண்டும் விண்ணில் செலுத்தக் கூடியதாகவும் அது இருக்க வேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியமாக உள்ளது. எனவே இந்த நிகழ்வு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியத் தருணமாக பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ஷிப் திட்டம் என்றால் என்ன? அதன் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதிக்க விரும்புவது என்ன? இது போன்ற ஒரு திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோவால் முன்னெடுக்க முடியுமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்டார்ஷிப் திட்டம் என்றால் என்ன?

ஸ்டார்ஷிப், மறுபயன்பாட்டு ராக்கெட், ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், @SpaceX

படக்குறிப்பு, மேல்பகுதியில் ஸ்டார்ஷிப் விண்கலம், கீழ்ப்பகுதியில் இருக்கும் சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்

‘ஸ்டார்ஷிப்- பூமியின் சுற்றுவட்டப் பாதை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் செல்வதற்கான சேவை’

இப்படித்தான் ஸ்டார்ஷிப் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் என்பது, மேல் பகுதியில் இருக்கும் ஸ்டார்ஷிப் விண்கலம், கீழ்ப்பகுதியில் இருக்கும் சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் ஆகிய இரண்டு கட்டமைப்புகளின் பிணைப்பாகும்.

இது விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்கள் என இரண்டையும், பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன், செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் விண்வெளியில் உள்ள பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட, ஒரு முழுமையான மறுபயன்பாட்டு விண்வெளி போக்குவரத்து திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் இணையதளம் கூறுகிறது.

இதுவரை உருவாக்கப்பட்டதில் உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகலம் ஸ்டார்ஷிப் தான் என்றும், 150 மெட்ரிக் டன் வரை பேலோட் (Payload) திறன் கொண்ட இது முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்றும் ஸ்பேஸ் எக்ஸ் கூறுகிறது.

ஸ்டார்ஷிப் ஏவுகலத்தின் உயரம் 121 மீட்டர், எடை 4600 முதல் 5000 மெட்ரிக் டன். இதில் மேல்பகுதியில் உள்ள ஸ்டார்ஷிப் விண்கலத்தின் உயரம் 50 மீட்டர், எடை 1200-1300 மெட்ரிக் டன். இந்த விண்கலத்தில் தான் விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் (150 மெட்ரிக் டன் எடை வரை- இதைத்தான் பேலோட் என்று அழைக்கிறார்கள்). இது முழுமையான மறுபயன்பாட்டு விண்கலம்.

இந்த விண்கலத்தில் பல்வேறு வகைகள் உள்ளன என்றும், குறிப்பாக கிரகங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணங்களில், 100 பேர் வரை இதில் பயணிக்கலாம் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அதேபோல, கீழ்ப்பகுதியான ‘சூப்பர் ஹெவி பூஸ்டர்’ 71 மீட்டர் உயரம் கொண்டது, அதாவது ஒரு மிகப்பெரிய போயிங் விமானத்தை செங்குத்தாக நிறுத்துவதற்கு சமமான உயரம் அல்லது ஏறக்குறைய டெல்லி குதூப்மினாரின் (72.5 மீட்டர்) உயரம். இதன் எடை 3400 முதல் 3600 மெட்ரிக் டன்.

சூப்பர் ஹெவி பூஸ்டர்

ஸ்டார்ஷிப், மறுபயன்பாட்டு ராக்கெட், ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், @SpaceX

படக்குறிப்பு, சூப்பர் ஹெவி பூஸ்டர், ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்

இந்த சூப்பர் ஹெவி பூஸ்டரை ‘ஸ்டார்ஷிப்’ ஏவுகலத்தின் உயிர்நாடி என்றே சொல்லலாம். காரணம் 150 மெட்ரிக் டன் பேலோட் திறன் கொண்ட ஸ்டார்ஷிப் விண்கலத்தை, புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் செலுத்த பல மடங்கு உந்துவிசை (Thrust) தேவைப்படும்.

அந்த உந்துவிசையை அளிப்பது இந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் தான். 33 ராப்டார் என்ஜின்களால் இது இயக்கப்படுகிறது, அவற்றில் திரவ மீத்தேன் (CH₄) மற்றும் திரவ ஆக்ஸிஜன் (O₂) எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த என்ஜின்கள் மூலம் சுமார் 7,600 மெட்ரிக் டன் உந்துவிசை உருவாக்கப்படுகிறது.

இதனால் தான், இதுவரை வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ஏவுகலம் ஸ்டார்ஷிப் தான் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

சூப்பர் ஹெவி பூஸ்டர், ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் பாகமாகும். அதாவது விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் இந்தப் பகுதி, ஸ்டார்ஷிப் விண்கலத்தில் இருந்து பிரிந்து, பூமிக்குத் திரும்பிவிடும்.

நேற்று (அக்டோபர் 13) அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோ சிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஐந்தாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட இரண்டே முக்கால் நிமிடங்களில், விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் திட்டமிட்டபடி தனியாக பிரிந்தது. அதன் பின்னர் அந்த பூஸ்டர் மீண்டும் அதே ஏவுதளத்தை நோக்கி திரும்பத் தொடங்கியது.

அவ்வாறு திரும்பிய ராக்கெட் பூஸ்டரை, ‘மெக்காஸில்லா’ எனப்படும் மிகப்பெரிய ஏவுதள அமைப்பு தனது பிரம்மாண்ட இயந்திரக் கைகளால் கச்சிதமாகப் பிடித்தது.

அதே சமயத்தில், மேல் பகுதியான ஸ்டார்ஷிப் விண்கலம் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கப்பட்டது. ஸ்டார்ஷிப் விண்கலத்தையும் இதே போல லாவகமாக பிடிக்க வேண்டும் என்பது தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விருப்பம், ஆனால் இந்த ஐந்தாவது கட்ட சோதனையில் அது திட்டமிடப்படவில்லை.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டம் என்ன?

ஸ்டார்ஷிப், மறுபயன்பாட்டு ராக்கெட், ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டார்ஷிப் போன்ற திட்டத்தால் வழக்கமாக ஒரு விண்கலத்தை ஏவுவதற்கு ஆகும் நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறையும்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பயணத்தில் மிக முக்கியமான தருணம். நாசாவிடம் கூட இல்லாத ஒரு தொழில்நுட்பத்தில் பணியாற்றி, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது ஸ்பேஸ் எக்ஸ்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிலவிற்கோ அல்லது செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது பிற விண்வெளிப் பகுதிகளுக்கோ மனிதர்கள் செல்ல வேண்டுமானால், அதற்கு சக்தி வாய்ந்த, நீண்ட தூரம் செல்லக்கூடிய மற்றும் அதிக பேலோட் திறன் கொண்ட விண்கலங்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகள் தேவைப்படும்.”

“அதிலும் மறுபயன்பாட்டு ராக்கெட் மற்றும் விண்கலம் என்றால், அதை ஒரு விண்வெளி விமானம் போல பயன்படுத்தலாம். எனவே அதற்கான தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும். இதனால் தான் இந்த சந்தையை குறிவைத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதில் குதித்தது. நாசா- ஸ்பேஸ் எக்ஸ் இடையிலான வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டன” என்கிறார்.

ஸ்டார்ஷிப் போன்ற ராக்கெட்டை இஸ்ரோவும் தயாரிக்குமா?

ஸ்டார்ஷிப், மறுபயன்பாட்டு ராக்கெட், ஈலோன் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ்

பட மூலாதாரம், ISRO/X

படக்குறிப்பு, இந்தியாவின் முதல் முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டான புஷ்பக்

ஸ்டார்ஷிப் போன்ற திட்டத்தால், வழக்கமாக ஒரு விண்கலத்தை ஏவுவதற்கு ஆகும் நேரம் மற்றும் செலவு கணிசமாகக் குறையும், விண்வெளிப் பயணங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

“உதாரணத்திற்கு, மனித குலத்தின் எதிர்காலமாக பார்க்கப்படுவது ‘செவ்வாய் கிரக குடியேற்றம்’ அல்லது ‘சந்திரனில் குடியேறுவது’ தான். அதுபோன்ற தருணங்களில், இவ்வாறு ஏவுதளத்திற்கே திரும்ப வரும் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களில், எரிவாயு நிரப்பி மற்றும் பொருட்கள் அல்லது மனிதர்களை ஏற்றி சில மணிநேரங்களில் மீண்டும் ஏவலாம். இதுதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் லட்சியம்” என்று கூறுகிறார்.

பூமிக்கு மீண்டும் வரும் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பம் என்பது புதிதல்ல என்று கூறிய த.வி.வெங்கடேஸ்வரன், “இந்தியா கூட புஷ்பக் எனும் ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டை சோதனை செய்து வருகிறது. ஆனால் அது ராக்கெட் மட்டும் தான், அதேபோல ஏவப்பட்ட இடத்திற்கே திரும்ப வராது. அதை மீண்டும் பயன்படுத்தவும் சிறிது கால அவகாசம் தேவைப்படும். அது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் பயன்படுத்தக் கூடியது. இந்த தொழில்நுட்பத்தில் இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது” என்றார்.

“ஸ்டார்ஷிப் என்பது ஒப்பீட்டளவில் மிகவும் பெரியது, அதிக திறன் கொண்டது. அத்தகைய ஒரு அமைப்பின் ராக்கெட் பூஸ்டர் ஏவப்பட்ட இடத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு, முதல் முயற்சியிலேயே அது கச்சிதமாக பிடிக்கப்பட்டது சாதனை தான்” என்று கூறினார்.

இந்தியாவின் இஸ்ரோ இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்குமா எனக் கேட்டபோது, “வாய்ப்புகள் மிகவும் குறைவு. காரணம் முன்பே கூறியது போல, நாசாவிடம் கூட இந்த தொழில்நுட்பம் இல்லை. எனவே இஸ்ரோவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஒரு நிறுவனத்திடம் வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.” என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு