தமிழ்நாடு மழை நிலவரம்: சென்னை உள்பட எங்கெல்லாம் நாளை மிகக் கனமழை பெய்யும்?

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

படக்குறிப்பு, சென்னையில் பெய்த கனமழையால் மேற்கு மாம்பலம் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது.

கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக் கூடும்?

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னையில் காலை முதலே கனமழை

சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது.

திருவள்ளூரில் விடியவிடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையால் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதியான திருஆயர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக புறநகர் பகுதிகளான மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கின்றது, குறிப்பாக பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வடியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்

இதேபோல் ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எம்ஜிஆர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.

பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், X/Greater Chennai Corporation

சென்னை உள்பட எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்?

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை காட்டும் வரைபடம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (அக்டோபர் 16) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும்,

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும்” என்று கூறப்பட்டுள்ளது

அதேபோல நாளை (அக்டோபர் 16) வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், IMD Chennai

சென்னையில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும் வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால் போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை விசாரித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், @aaichnairport

படக்குறிப்பு, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது

கூடுதல் மெட்ரோ ரயில்கள்

கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “​சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ இரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. (முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).

இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘திமுக அரசு செயலிழந்து நிற்கிறது’

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/FACEBOOK

படக்குறிப்பு, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஸ்டாலினின் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது.” என்று விமர்சித்துள்ளார்.

கனமழை தொடரும் நிலையில் அரசை நம்பாமல் பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது வாரிசு துணை முதலமைச்சர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.” என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.” என்று விமர்சித்துள்ளார்.

“சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீனவர்கள் வங்க கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு, வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும்,

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் வங்க கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் சுமார் 100 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நேற்று கடல் உள்வாங்கியது. அப்போது, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பச்சை பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களை கோவில் கடற்கரை பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே இயங்கும்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.

சென்னை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கனமழை

பட மூலாதாரம், Getty Images

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் எப்போதும் போல் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை தேர்வுகள் நடைபெறாது என்று பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு