சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம், X/E.V.Velu

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

“பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைத்தாலும் தொழிலாளர்களுடன் விவாதித்து நாளை (அக்டோபர் 16) முடிவை அறிவிப்போம்” என்கிறார் சி.ஐ.டி.யு தலைவர் அ.சவுந்தரராஜன்.

நாளை மறுநாள் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், சி.ஐ.டி.யு தரப்பின் பதில் என்ன? அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா?

சாம்சங் இந்தியா போராட்டம்

பட மூலாதாரம், X/E.V.Velu

படக்குறிப்பு, செவ்வாய் (அக்டோபர் 15) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், சாம்சங் இந்தியா நிர்வாகம் ஆகியவற்றுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்

என்ன நடந்தது?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளர்கள், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுத்ததால் தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிலாளர் நலத்துறை செயலர் ஆகியோர் நான்கு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போதும் சி.ஐ.டி.யு முன்வைத்த கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்கவில்லை.

சாம்சங் இந்தியாவில் தொழிற்சங்கம் தொடங்குவதையும் சங்கத்தின் பெயரில் சாம்சங் இந்தியா என்ற பெயர் இருப்பதையும் தொடக்கம் முதலே நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் சாம்சங் இந்தியா நிறுவனம் வழக்குகளை தொடர்ந்தது.

சி.ஐ.டி.யு சார்பில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பலனளிக்காத பேச்சுவார்த்தைகள்

தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தொழிலாளர் நலத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 14 கோரிக்கைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் ஏற்றதாக கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்வதாக சி.ஐ.டி.யு அறிவித்தது.

அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து போராட்டம் நீடித்ததால் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டன.

‘தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது’ எனக் கூறி போராட்ட பந்தலை வருவாய்த் துறை அதிகாரிகள் பிரித்தெடுத்தனர்.

அதே நாளில் (அக்டோபர் 8) சாம்சங் இந்தியா நிறுவனம் அருகில் தொழிலாளர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காவல் எஸ்.ஐ மணிகண்டனை தாக்கியதாக ஏழு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்பிறகு தொழிலாளர்களை வீடு தேடிச் சென்று போலீஸ் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதை மட்டுமே காவல்துறை எடுத்தது” என்றார்.

சி.ஐ.டி.யு தொழிற்சங்க பதிவுக்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் அனுமதி தர மறுப்பது குறித்துப் பதில் அளித்த தங்கம் தென்னரசு, “அதுதொடர்பான வழக்கு கநீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தும்” என்றார்.

ஆனாலும், அரசின் உத்தரவாதத்தை ஏற்க மறுத்து வெவ்வேறு இடங்களில் சி.ஐ.டி.யு போராட்டத்தை முன்னெடுத்தது. இதற்கு தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இ.கம்யூ., மா.கம்யூ., ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்தன.

தொழில்ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தி.மு.க அரசுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டதால் இரு தரப்புக்கும் சுமூக உடன்பாட்டை கொண்டு வரும் முயற்சியில் அமைச்சர் எ.வ.வேலு ஈடுபடுத்தப்பட்டார்.

சாம்சங் இந்தியா போராட்டம்

படக்குறிப்பு, முப்பது நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டம்

மீண்டும் நடந்த பேச்சுவார்த்தை

செவ்வாய் (அக்டோபர் 15) அன்று தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், சாம்சங் இந்தியா நிர்வாகம் ஆகியவற்றுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். இதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?” என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ” தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகளை தருவதாக சாம்சங் இந்தியா நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். அவர்களுக்கு நான்கு அறிவுரைகளை கூறியுள்ளோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்” என்றார்.

அவை,

  • தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை கைவிட்டுப் பணிக்குச் செல்ல வேண்டும்.
  • நிர்வாகம் தரப்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
  • வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுப் பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
  • தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமான பதில் உரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

” நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டன. சுமூகமாக உடன்பாடு எட்டப்பட்டதால் இரு தரப்பும் கை குலுக்கிக் கொண்டனர்’’ எனக் கூறினார் அமைச்சர் எ.வ.வேலு.

நாளை மறுதினம் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப உ.ள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டார்.

தொட ர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “இரு தரப்புக்கும் அரசு பொதுவானது. தொழிற்சங்க பதிவு தொடர்பாக நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்’’ என்றார்.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தாலும், நாளை தொழிலாளர்களுடன் பேசி முடிவை அறிவிக்க உள்ளதாக சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதே தகவலை பிபிசி தமிழிடம் தெரிவித்த சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார், “பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுக்கு வந்தது. நாங்களாக இதனை அறிவித்தால் அது ஓரு சார்பாக முடிந்துவிடும். நாளை காலை சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் சி.ஐ.டி.யி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அவர்களின் ஒப்புதலைப் பெற்று அறிவிப்போம்,” என்றார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நிர்வாகம், சாம்சங் இந்தியா நிர்வாகிகள், தொழிலாளர்கள் என முத்தரப்பும் நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும் பிபிசி தமிழிடம் முத்துக்குமார் தெரிவித்தார்.

இதற்கிடையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு சி.ஐ.டி.யு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர், சி.ஐ.டி.யு நிர்வாகிகள்.