காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது – சென்னையில் மழை நீடிக்குமா? கனமழை எங்கெல்லாம் பெய்யும்?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது.
கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக் கூடும்?
சென்னையில் காலை முதலே கனமழை
சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது.
திருவள்ளூரில் விடியவிடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையால் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதியான திருஆயர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக புறநகர் பகுதிகளான மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கின்றது, குறிப்பாக பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வடியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்
இதேபோல் ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எம்ஜிஆர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது.
பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கோவையில் மழைநீரில் மீண்டும் சிக்கிய பேருந்து
கோவை மாநகரில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிரேன் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் 8 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும் வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால் போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை விசாரித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
திருச்செந்தூரில் சுமார் 100 அடி உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நேற்று கடல் உள்வாங்கியது. அப்போது, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பச்சை பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களை கோவில் கடற்கரை பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே இயங்கும்.
புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் எப்போதும் போல் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை தேர்வுகள் நடைபெறாது என்று பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.