கமலா ஹாரிஸ் – டிரம்ப் இருவரில் அமெரிக்க அதிபராக சீன மக்களின் தேர்வு யார்?
- எழுதியவர், லாரா பிக்கர்
- பதவி, சீன செய்தியாளர், பெய்ஜிங்
நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை சீன மக்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர். யார் வெற்றி பெற்றாலும் சீனாவிலும் வெளிநாட்டிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் அவர்களிடம் நிலவி வருகிறது.
ரித்தன் பூங்காவில் நடனம் கற்றுக் கொள்ள வந்த ஜியாங்க், இசைக்கும் நடனத்திற்கும் நடுவே, “ஒரு போரை பார்க்க நாங்கள் யாரும் விரும்பவில்லை,” என்று கூறுகிறார்.
மூத்த உறுப்பினர்கள் சிலருடன் அவர் நடனம் கற்க அந்த பூங்காவிற்கு வருகை தந்துள்ளார்.
சீனாவுக்கான அமெரிக்க தூதரகம் அமைந்திருக்கும் பெய்ஜிங் பகுதியில் அமைந்திருக்கும் அந்த பூங்காவில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம்.
நடனத்தை அடுத்து, அவர்களின் நினைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய சிந்தனையும் நிலவுகிறது.
தைவான் விவகாரம், வர்த்தகம், சர்வதேச விவகாரங்கள் என்று இரண்டு வல்லரசு நாடுகள் நடுவே ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
“இவ்விரு நாடுகளின் உறவும் பதற்றமான நிலையில் இருப்பதால் நான் கவலை அடைந்துள்ளேன். எங்களுக்கு அமைதிதான் வேண்டும்,” என்று கூறுகிறார் 60களில் இருக்கும் ஜியாங்க்.
இந்த கலந்துரையாடலைக் காண பூங்காவிற்கு வந்திருந்த நபர்கள் ஒன்று கூடினார்கள். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பேச அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இருப்பினும் அவர்களின் சொந்த தலைமை குறித்து விமர்சனம் செய்தால் சிக்கலை சந்திக்க நேரிடும் என்பதால் தங்களின் முழுப் பெயர்களை வெளியே கூற அவர்கள் தயக்கம் காட்டினார்கள்.
போர் சூழல் குறித்து அவர்கள் கவலை அடைந்துள்ளனர். வாஷிங்டன், பெய்ஜிங்கிற்கு இடையேயான பிரச்னைகள் மட்டுமின்றி, மத்திய கிழக்கு மற்றும் யுக்ரேன் பகுதிகளில் பெரிதாகி வரும் போர்கள் குறித்தும் அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதனால் தான் மெங் என்ற அந்த சீனர், வருகின்ற தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
“சீனா மீது அவர் பொருளாதார ரீதியாக பல தடைகளை விதித்தாலும் கூட அவர் ஒரு போரை துவங்க விரும்பவில்லை. ஜோ பைடன் தான் போர்களை துவங்கி வைத்தார். அதனால் தான் சராசரி மக்கள் அவரை வெறுக்க துவங்கிவிட்டனர். பைடன் தான் யுக்ரேன் போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதனால் தான் ரஷ்யாவும் யுக்ரேனும் இந்த போரில் அதிக இழப்புகளை சந்தித்து வருகின்றன,” என்றும் மெங் கூறுகிறார்.
சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதற்காக தங்களின் வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த பெண்கள், “அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் டிரம்ப் 24 மணி நேரத்தில் யுக்ரேன் போரை நிறுத்திவிடுவதாக கூறியதை,” மேற்கொள்காட்டினார்கள்.
“கமலா ஹாரிஸ் பற்றி எனக்கு கொஞ்சம் தான் தெரியும். அவருக்கு ஆதரவை தரும் ஜோ பைடனை தான் அவரும் பின்பற்றுவார்,” என்று கூறினார் அவர்களில் ஒருவர்.
சீன ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்ட செய்திகளையே அவர்களின் கருத்து பிரதிபலிக்கிறது.
“யாருக்கும் ஆதரவு இல்லை”
காஸாவில் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச சமூகத்தினருக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அரபு சகோதரர்களுடன் துணை நிற்பதாக கூறிய சீன அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கின்ற காரணத்தால் போருக்கு அமெரிக்காதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது.
யுக்ரேன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, சீனா இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது என்று கூறினார். தன்னுடைய சொந்த நலனுக்காக தற்போது உள்ள நிலையை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்த தேர்தலில் சீனா யாருக்கும் ஆதரவாக இல்லை என்று பலர் கணித்திருக்கின்ற நிலையில், சிலர் சீனர்களுக்கும் சீனத் தலைவர்களுக்கும் கமலா ஹாரிஸ் நன்கு அறியப்பட்ட நபராக இல்லை என்றும் ஒப்புக் கொண்டனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையான விவகாரத்தில் முக்கியமானதாக கருதப்படும் தைவான் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளில் டிரம்பைக் காட்டிலும் கமலா ஹாரிஸ் நிலைத்தன்மையுடன் செயல்படுவார் என்று சிலர் நம்புகின்றனர்.
“எனக்கு டிரம்பைப் பிடிக்கவில்லை. சர்வதேச பொருளாதாரம், தைவான் விவகாரம் என்று நிறைய பிரச்னைகள் இருக்கின்ற காரணத்தால் இரு நாட்டு உறவும் சிறப்பாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று கூறுகிறார் தன் நான்கு வயது மகனுடன் பூங்காவிற்கு வருகை தந்த தந்தை ஒருவர்.
தைவான் விவகாரத்தில் இருக்கும் மாறுபாட்ட கருத்துகள் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னையை உருவாக்கலாம் என்ற அச்சம் அவரிடம் நிலவுகிறது.
“எனக்கு இது வேண்டாம். நான் என்னுடைய மகனை ராணுவத்திற்கு அனுப்ப தயாராக இல்லை,” என்று கூறுகிறார் அவர்.
தைவான் விவகாரத்தில் அதிபர் பதவி போட்டியாளர்களின் நிலைப்பாடு என்ன?
தைவான் தனக்கே சொந்தம் என்கிறது சீனா. தேவைப்பட்டால் பலத்தை பயன்படுத்தி தைவானை தன்னுடன் இணைக்கும் முயற்சியில் இருக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங், அதனை தவிர்க்க இயலாத ஒன்றாக குறிப்பிடுகிறார்.
அதிகாரப்பூர்வமான உறவை பெய்ஜிங்குடன் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஒரே சீனா கொள்கையின் (One China policy) கீழ் ஒரே சீன அரசாகவும் அங்கீகரித்து வருகிறது. ஆனால் தைவானுக்கான முக்கிய சர்வதேச ஆதரவாளராக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது அமெரிக்கா.
தைவானுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ளது அமெரிக்கா.
ஜோ பைடன், அமெரிக்கா தைவானை ராணுவ ரீதியாகப் பாதுகாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
கமலா ஹாரிஸ் அவ்வளவு தூரம் போகவில்லை. ஆனால் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அனைத்து நாடுகளின் செழிப்பிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் ராஜ்ஜிய நடவடிக்கைகளைக் காட்டிலும் ஒப்பந்தத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கிறார். தைவானுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தைவான் பணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி அமெரிக்கர்களையும் பாதிக்கும்
“நம்முடைய மின்னணு கருவியான சிப் (chip) வர்த்தகத்தை நம்மிடம் இருந்து தைவான் தட்டிச் சென்றுவிட்டது. நாம் முட்டாள்களாக இருந்துள்ளோம். அவர்கள் மிகவும் செழிப்பாக இருக்கின்றனர்,” என்று சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர், தைவான் பாதுகாப்பிற்காக நமக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
சீன பொருட்களுக்கு 60% வரியை விதிப்பதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக இருப்பது சீனர்களின் மற்றொரு பெரிய கவலையாக இருக்கிறது.
தற்போது பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வருகின்ற சூழலில், போதுமான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முயன்று வருகிறது சீனா. இந்த நிலையில் இப்படியான ஒரு அறிவிப்பை சீன வர்த்தகர்கள் ஏற்க தயாராக இல்லை.
சீன அமைச்சர்கள் டொனால்ட் டிரம்பால் அறிவிக்கப்பட்ட வரி விதிப்பிற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
பைடனின் ஆட்சியின் போது சீனாவின் எலக்ட்ரானிக் கார்கள் மற்றும் சோலர் பேனல்களை இலக்காகக் கொண்டு வரி விதித்தார். சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த ஒரு நபராக சீனா உருவெடுப்பதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று சீனா நம்புகிறது.
சீனப் பொருட்களுக்கு வரி விதிப்பதால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்று நினைப்பதாக ஜிங் கூறுகிறார். நாங்கள் பார்த்த பெரும்பான்மை மக்கள் இதே எண்ணத்தைக் கொண்டிருந்தனர். “இந்த வரி விதிப்பானது அமெரிக்கர்களை பாதிக்கும். சராசரி மனிதர்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்வார்கள்,” என்று குறிப்பிட்டார் அவர்.
அமெரிக்காவின் பொழுதுபோக்கு அம்சங்களை கவனிக்கும் சீன இளைஞர்கள்
நாட்டுப்பற்றுடன் இருக்கும் சீனாவின் இளைய தலைமுறையினரும் நடப்பு விவகாரங்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளுக்காக அமெரிக்காவில் நடக்கும் விவரங்களை கவனித்து வருகின்றனர். மற்ற எந்த அரசு சார்ந்த நிகழ்வுகளையும் காட்டிலும் இந்த அம்சங்கள் வலுவானதாக இருக்கின்றன.
அந்த பூங்காவில் டிக்டாக் வழியாக செய்திகளை அறிந்து கொள்ளும் 20 வயதான லில்லி, 22 வயதான அன்னா, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் போட்டி பற்றி பேசும் போது சீன அரசு ஊடகங்கள் பரப்பும் தேசிய செய்திகளின் பெருமையை பேசுகின்றனர்.
“எங்களின் நாடு செழிப்பான, பலமான நாடு,” என்று அவர்கள் கூறுகின்றனர். பாரம்பரிய உடையை அணிந்திருக்கும் அவர்கள் சீனாவை விரும்புவதாக கூறுகின்றனர். இருப்பினும் அவஞ்சர்ஸில் கேப்டன் அமெரிக்காவை ரசிப்பதாகவும் கூறுகின்றனர்.
டெய்லர் ஷிஃப்ட்டின் பாடல்களையும் அவர்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
“கலாசார மாற்றம் நிகழ வேண்டும்”
17 வயதான லூசி ஒரு நாள் அமெரிக்காவில் படிக்க விரும்புவதாக கூறுகிறார்.
பூங்காவில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் உடற்பயிற்சிக்கான சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டிருக்கும் அவர் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு யுனிவர்செல் ஸ்டுடியோவுக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஒரு பெண்ணை அதிபர் தேர்தலுக்கான போட்டியாளராக காண்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் லூசி, “பாலின சமத்துவத்திற்கான ஒரு முக்கியமான நகர்வாக இருக்கிறது கமலா ஹாரிஸின் போட்டி. அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவது உத்வேகம் அளிக்கிறது,” என்று கூறினார்.
ஒரு பெண் சீன நாட்டின் தலைவராக இதுவரை இருந்ததில்லை. 24 சீன கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர்களைக் கொண்ட பொலிட்பீரோவில் ஒரு பெண் தலைவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலால் கவலை அடைந்துள்ள லூசி, இந்த உறவு மேம்பட இரு நாட்டினருக்கும் இடையே கலாசார மாற்றம் மக்கள் மூலம் நிகழ வேண்டும் (to improve their relationship is to have more people-to-people exchanges) .
இதனை செயல்படுத்த இரு நாட்டினரும் ஒப்புக் கொண்டாலும், சீனாவில் படிக்கும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 15 ஆயிரமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது 800 ஆக குறைந்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்கர்கள் சீனாவிற்கு படிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய இருப்பதாக அதிபர் ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில் பிபிசி நேர்காணலில் பேசிய சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ், சீன அரசின் சில பிரிவுகள் இதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சீன குடிமக்கள் அமெரிக்கா நடத்தும் பொது நிகழ்வுகளில் பங்கேற்பது பாதுகாப்பு படையினர் மூலமாகவோ அமைச்சகம் மூலமாகவோ தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மற்றொருபுறம், அமெரிக்க எல்லைப் படையினரால் சீன மாணவர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் லூசியோ, சீனாவின் கலாசாரத்தை பரப்புவதற்கு அமெரிக்கா செல்லும் நம்பிக்கையோடு இருக்கிறார். அதே நேரத்தில் அமெரிக்கர்கள் சீனாவுக்கு வருகை புரிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
“நாங்கள் ஒதுங்கியே இருப்போம். அமெரிக்கர்களைப் போன்று அதிகம் வெளியே செல்லும் நபர்கள் இல்லை. ஆனால் நாங்கள் வரவேற்பு அளிப்போம்,” என்று கூறுகிறார் அவர்.
புகைப்படங்கள்: Xiqing Wang
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு