சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ளது.
வியாழன் கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்ற நிலையில் 4-வது மிகப்பெரிய நிலவு ‘யுரோப்பா’ என்று அழைக்கப்படுகிற இந்த யுரோப்பாவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.
இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்புத் தண்ணீர் கடல் உள்ளது. அந்த தண்ணீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், யுரோப்பாவில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ‘யுரோப்பா கிளிப்பர்’ என்ற விண்கலத்தை வடிவமைத்துள்ளது.
சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த வாரம் ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ‘மில்டன்’ புயல் காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இந்த சூரிய சக்தி விண்கலமானது, 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030-ல் யுரோப்பாவின் சுற்றுப்பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.