- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் தொடர் வேலை நிறுத்தம், தொழிலாளர்கள் மீதான கைது நடவடிக்கைகள், முதலமைச்சரின் தலையீடு, அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்று கடந்த 32 நாட்களாக சாம்சங் இந்தியா நிறுவனத்தில் நடக்கும் போராட்டம் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.
தொழிற்சங்கம் அமைப்பதை சாம்சங் இந்தியா நிறுவனம் எதிர்ப்பது ஏன்? தி.மு.க கூட்டணிக் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதா?
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இந்தப் போராட்டத்தை தொழில் முதலீட்டாளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? கேள்வி-பதில் வடிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1. காஞ்சிபுரத்தில் சாம்சங் ஆலை எப்போது நிறுவப்பட்டது?
சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு நொய்டா மற்றும் காஞ்சிபுரத்தில் ஆலைகள் உள்ளன. காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் 2007-ஆம் ஆண்டு சாம்சங் இந்தியா ஆலை நிறுவப்பட்டது.
நொய்டாவில் செல்போன் உற்பத்தி ஆலை செயல்படுகிறது. காஞ்சிபுரத்தில் தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இங்கு 1800-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
கடந்த 2022-ஆண்டு தமிழ்நாடு அரசுடன் சாம்சங் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் கம்ப்ரஸர் உற்பத்தி மையம் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
2. சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் ஏன்?
தமிழ்நாட்டில் சாம்சங் இந்தியா நிறுவனம் தொடங்கி 17 ஆண்டுகள் ஆனாலும் இங்கு தொழிற்சங்க செயல்பாடு என்று எதுவும் இல்லை. கடந்த சில மாதங்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்த தொழிலாளர்கள், அதனை ஏற்க நிர்வாகம் மறுத்ததால், தொழிற்சங்கம் அமைக்க தீர்மானித்தனர்.
கடந்த ஜூலை மாதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் அமைப்பதற்கு தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்ய விண்ணப்பித்தனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்கள் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பதை உறுதி செய்வதற்காக அந்நிறுவனத்தின் ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு ஒப்புதல் தர சாம்சங் இந்தியா நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 1,400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3. வெளிநாட்டு நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதை இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?
“தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு (19(1)(c) கூறுகிறது. இந்திய தொழிற்சங்க சட்டம் 1926இன் படி, தொழிற்சாலையில் ஏழு பேர் இருந்தாலே சங்கத்தைப் பதிவு செய்யலாம்” என்கிறார் மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரன்.
“சங்கத்தின் பதிவைப் புதுப்பிக்கும் போது மொத்த தொழிலாளர்களில் 10 சதவீதம் பேர் இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டங்கள் பொருந்தும்” என்கிறார் அவர்.
“சங்கம் தொடங்குவதற்கு அரசின் தொழிற்சங்கப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்க வேண்டும். அதன்பேரில 45 நாட்களுக்குள் அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கு சாம்சங் நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், சாம்சங் எதிர்ப்பதால் அவர்களுக்கு ஆதரவாக அரசும் செயல்படுகிறது” என்று சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் குற்றம்சாட்டுகிறார். .
இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், “தொழிற்சங்கம் அமைப்பது அவர்களின் உரிமை. அதில் அரசு தலையிடவில்லை. தொழிற்சங்க அனுமதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், அதன் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்” என்றார்.
4. இந்திய சட்டங்களை சாம்சங் இந்தியா மீறுகிறதா?
“இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம்” என பிபிசி தமிழுக்கு அனுப்பிய விளக்கத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
ஊழியர்களின் நலனே தங்களுக்குப் பிரதானமாக உள்ளதாக கூறும் சாம்சங் இந்தியா நிறுவனம், கூடுதல் நேரம் பணிபுரிவதற்கான ஊதியம், இரவுநேர பேருந்து வசதி, உணவு, சுகாதாரம், பணியிடப் பாதுகாப்பு, ஊழியர் நலன் ஆகியவற்றில் உயர்ந்த தரத்தைக் கொடுத்து வருவதாகவும் கூறுகிறது.
சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களின் பணிக்காலம் சராசரியாக பத்து ஆண்டுகளாக உள்ளதே, பணி திருப்திக்கு சான்றாக உள்ளதாகவும் சாம்சங் இந்தியா கூறுகிறது.
ஆனால், “சங்கம் தொடங்குவதற்கு எதிர்ப்பு காட்டுவது ஏன்?” என்ற கேள்விக்கு அந்நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.
5. அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
சாம்சங் இந்தியா நிறுவனம் மற்றும் தொழிற்சங்கம் ஆகியவற்றுடன் ஒன்பது முறை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்டோபர் 7 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 14 கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்பதாக கூறியது. இதனால் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
ஆனால், போராட்டத்தில் பங்கெடுக்காத தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறி அரசே நாடகம் நடத்துவதாக சி.ஐ.டி.யு கண்டனம் தெரிவித்தது. போராட்டம் தொடர்வதாகவும் அறிவித்தது.
இதன்பின்னர், அனுமதியின்றி போராட்டம் நடந்ததாகக் கூறி பந்தல் அகற்றம், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது, சி.ஐ.டி.யு நிர்வாகிகள் மீது வழக்கு என்பன போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கையோ அது மட்டுமே எடுக்கப்பட்டதாக கூறினார்.
6. சாம்சங் இந்தியா நிறுவனம் எந்த கோரிக்கைகளை ஏற்றது?
- தொழிலாளர்களுக்கு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000
- 5 வழித்தடங்களில் உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, 108 வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தல்
- பணியின் போது இறந்தால் வழங்கப்படும் உடனடி உதவித்தொகை ரூ.1 லட்சமாக உயர்வு
- தரமான உணவு மற்றும் உணவுப்படி உயர்வு
- திருமணத்திற்கு மூன்று நாள் விடுப்பு; குழந்தை பிறந்தால் 5 நாள் விடுப்பு.
- புதிய மருத்துவ அறைகள்; ஓய்வறைகள் மேம்படுத்தப்படும்.
7. தொழில் முதலீட்டாளர்களின் பார்வை என்ன?
“தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருகின்றன. இதுபோன்ற போராட்டங்கள் நடக்கும் போது அவர்கள் தொழில் தொடங்க பயப்படும் சூழல் உருவாகும்” என்கிறார், அப்பேரல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலின் தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல்.
“தமிழ்நாட்டின் தொழில்துறை நலன் கருதி தங்களின் பிடிவாதத்தை தொழிற்சங்கங்கள் தளர்த்த வேண்டும்” என்று சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
“தொழில் இருந்தால் தான் தொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கும். தொழிலே வராமல் போய்விட்டால் என்ன செய்வது? அதற்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்துப் போவதில் தவறு இல்லை. சாம்சங் பிரச்னையில் தமிழக அரசு சுமூக தீர்வைக் கொடுக்க வேண்டும்” என்கிறார் சக்திவேல்.
8. தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி சிஐடியூ பதில் என்ன?
“முதலாளிகள் இவ்வாறு தான் சொல்வார்கள். தொழிலாளர்களின் உரிமைக்காக யார் நியாயமாக நின்றாலும் அவர்களுக்கு எதிராக முதலாளிகள் பேசுவது இயல்பு. அப்படித் தான் இந்த பிரசாரம் முன்வைக்கப்படுகிறது” என்கிறார் சி.ஐ.டி.யு மாநில தலைவர் சவுந்தரராஜன்.
“சங்கம் வைப்பதற்கான சட்டப்படியான உரிமை தொழிலாளிக்கு உள்ளது. சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலாளி எதையும் தீர்மானிக்கக் கூடாது என்கின்றனர். இது தான் பிரச்னைக்கு காரணம்” என்கிறார், சவுந்தரராஜன்.
9. கூட்டணிக் கட்சிகளால் முதலமைச்சருக்கு நெருக்கடியா?
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “இதை அரசியலாக முதலமைச்சர் பார்க்கவில்லை. இங்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வருகின்றன. முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தொழிலாளர்களை விரோத மனப்பான்மையுடன் அரசு நடந்து கொள்ளவில்லை” என்கிறார்.
“தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிய இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு போராட்டத்தைக் கைவிட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தர்ராஜனிடம் கேட்டபோது, “அப்படி எந்த நெருக்கடியையும் அரசுக்கு கொடுக்கவில்லை. சங்கம் வைக்கும் உரிமையை மறுக்க முடியாது என்பதை அரசு ஏற்க வேண்டும்” என்கிறார்.
10. போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
“சங்கம் பதிவு தொடர்பாக நீதிமன்றம் சென்று தீர்வை பெற்றுக் கொள்கிறோம். ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என சாம்சங் இந்தியா நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும்” என்கிறார், அ.சவுந்தரராஜன்.
போராட்டத்துக்கு முந்தைய நிலையே தற்போது தொடர வேண்டும் என்பதையே தாங்கள் விரும்புவதாக கூறிய அவர், “இதனை தொழிலாளர் நலத்துறை உறுதி செய்ய வேண்டும்” என்கிறார்.
“தொழிற்சங்க பதிவு என்பதை பிரதான பிரச்னையாக பார்க்கவில்லை” எனக் கூறும் சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன். “ஊதிய உயர்வு உள்பட இதர பிரச்னைகள் குறித்து எங்களோடு நிர்வாகம் தரப்பில் நேரடியாக பேச வேண்டும். இதனை ஏற்றுக் கொண்டால் போதும்” என்கிறார்.
இதுதொடர்பாக, சி.ஐ.டி.யு நிர்வாகிகளுடன் அரசுத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், “விரைவில் சுமூக தீர்வு எட்டப்படலாம்” என்ற தகவல்களும் வெளிவருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு