‘தமிழரசின் கொள்கைகளைச் சுமப்போரை வெல்லச் செய்யுங்கள்” என்று அதன் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்திருக்கும் வேண்டுகோள், தம்மை நாடி வந்து ஆசி பெற்றவர்களுக்கும் அவர்களது அணியினருக்கும் வாக்களிக்குமாறு கேட்பதை மறைபொருளில் தெரிவிக்கிறது. சுமந்திரனின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து வெளியேறியவர்களை தமிழரசின் கொள்கைகளைச் சுமப்பவர்கள் என்று மாவையர் மகுடம் சூட்டியுள்ளதுடன் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெல்லச் செய்யுங்கள் என்று மாவையர் தெரிவிக்கவில்லையென்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
‘தமிழர்களுக்கு ஏதாவதைக் கொடுத்து அவர்களை தனியாக விட்டுவிட்டால் அவர்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டு போய்விடுவார்கள், நாங்கள் நிம்மதியாக இருக்கலாம்” என்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு கதை உண்டு.
இந்தக் கதை உண்மையோ இட்டுக்கட்டப்பட்டதோ தெரியாது. ஆனால், இப்போது நடைபெறுபவைகள் அப்படித்தான் காணப்படுகின்றது. அடுத்த ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் தேர்தல் பரப்புரை என்ற பெயரில் பல துகிலுரி படலங்களை தமிழர் தாயகம் பார்க்கப் போகிறது என்பது நன்றாகவே தெரிகிறது.
ஏழு பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்த யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் அடுத்த மாத பொதுத்தேர்தலில் ஆறு பேரை மட்டும் தெரிவு செய்யப் போகிறது. 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேட்சைக் குழுக்களும் மொத்தம் 396 அபேட்சகர்களை இங்கு களத்தில் இறக்கியுள்ளன. வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டங்களிலும் இவ்வாறே ஏட்டிக்குப் போட்டியாக பல நூற்றுக்கணக்கானவர்கள் கட்சிகளிலும் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
தோழர் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட நான்கு அரசியல் அணிகளும் முதன்முறையாக பொதுத்தேர்தல் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் களம் இறங்கியுள்ளன. தமிழ்த் தேசியம் என்ற பெயரிலுள்ள அரசியல் கட்சிகளுடன், ஜனநாயகம் என்ற பெயரைத் தாங்கிய தமிழ் அணிகள் பல இங்கு போட்டியிடுகின்றன.
இலங்கையை இதுவரை ஆட்சி புரிந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட சுமார் நான்கு டசின் வரையான முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுத்தேர்தலிலிருந்து ஒதுங்கியுள்ளனர். தோல்விக்குப் பயந்து ஊழல்வாதிகளும் இனவாதிகளுமான அரசியல்வாதிகள் தேர்தலிலிருந்து பின்வாங்கியுள்ளனர் என்று அநுர குமாரவின் கட்சியைச் சேர்ந்த பிமால் ரத்நாயக்க தெரிவித்திருப்பது ஒருவகையில் உண்மைதான்.
முன்னாள் ஜனாதிபதிகளுள் இப்போது நாட்டில் இருப்பவர்களான மகிந்த, ரணில், மைத்திரி ஆகியோர் இம்முறை தேர்தலிலிருந்து விலகியுள்ளனர். கோதபாய மீண்டும் நாடு துறந்து ஓடிவிட்டார். மிகுதியான ராஜபக்ச சகோதரர்கள் மூவரும் (மகிந்த, சாமல், பசில்) போட்டியிடவில்லை. தோல்விப் பயம் காரணமாக நாமல் ராஜபக்ச பெரமுனவின் தேசியப் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் ஜே.வி.பி.யின் அட்டகாசத் தலைவராக இருந்துவிட்டு அதிலிருந்து வெளியேறி தனிக்கட்சி அமைத்து மகிந்தவுடன் கூட்டணி அமைத்து அமைச்சராகவிருந்த விமல் வீரவன்சவும் இம்முறை போட்டியிடவில்லை. தோழர் ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு ஆதரவளிக்கும் முகமாகவே தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற விமலின் அறிவிப்பு இந்தத் தேர்தலின் அதியுச்ச நகைச்சுவை.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முழக்கமிட்டவாறு கொள்ளைக்கார, ஊழல்கார அரசியல்வாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குரல் தெற்கில் ஆங்காங்கே கேட்க ஆரம்பித்துள்ளது. ராஜபக்சக்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடிக்குமாறு ஆளும் தரப்பிடம் சவால் விட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
பொதுத்தேர்தல் முடிந்தவுடன் உள்;ராட்சித் தேர்தலையும் நடத்துவதே தோழர் அநுர தரப்பின் திட்டம். சகல தேர்தல்களிலும் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால், பின்னர் விரும்பும் எதனையும் இலகுவாகச் செய்துவிடலாம் என்பது இவர்களின் இலக்கு. அதுவரை, ஷபுலி வருகுது புலி வருகுது| என்ற அபாய எச்சரிக்கையுடன் நாட்களை கடத்துவார்கள். எதுவானாலும், முதல் ஒரு வருட ஆட்சியின் பின்னரே புதிய ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய வருமென்று சகல தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
மைய அரசியல் இவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கையில், தமிழர் தாயக அரசியல் வாலறுந்த பட்டம்போல குத்துக்கரணம் மட்டுமன்றி, பக்கவாட்டுக் கரணங்களையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலானவர்கள் உருவாக்கிய தமிழரசுக் கட்சி இன்று மேய்ப்பனில்லாத மந்தைக் கூட்டமாக மாற்றுப்படுவதை தேசியத்தை நேசிக்கும் மக்கள் மனவேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்னர் பலதடவை இப்பத்தியில் குறிப்பிட்டது போன்று கொழும்பிலிருந்து இறக்கப்பட்ட ஒட்டகம் தனது இலக்கைக் குறி தவறாது மேற்கொண்டு வருவதால், தமிழரசுக் கட்சி தமிழ் அழிவுக் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழரசு என்ற கூடாரத்தை (வீடு), அந்த ஒட்டகம் தன்வயப்படுத்தி, சின்னாபின்னமாக்கி, எதேச்சாதிகாரமாக செயற்படுவதால் கட்சிக்காரர் பலர் விரக்தியோடும் வெறுப்போடும் அதிலிருந்து வெளியேறுகின்றனர். இந்த வெளியேற்றம் ஒரு தொடர்கதையாகி வருகிறது.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவில் தோல்வி கண்டவர், காயப்பட்ட பாம்பொன்று படம் எடுப்பது போன்று சுழன்று சுழன்று அடிக்கும் வேகத்தினால் கட்சியின் மூத்தவர்கள் பலர் ஓரம் கட்டப்படுகின்றனர்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழரசுக் கொள்கையுடன் தம்மைப் பிணைத்துக் கொண்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமது பதவியிலிருந்தும் மற்றும் சகல பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனால், ராஜினாமா கடிதம் தமக்குக் கிடைக்கவில்லையென்று ஆயுட்கால பதில் செயலாளர் சத்தியலிங்கம் கூறுகிறார். (பதில் செயலாளர் பதவி ஆண்டாண்டு காலமாக தொடருவதுகூட கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணானது என்று நீதிமன்றம் செல்வதற்கு ஒரு தரப்பு முயற்சிக்கிறது).
மாவை சேனாதிராஜா அவர்களின் ராஜினாமா கடிதம் புதிய தலைவராக தெரிவாகியும், அப்பதவியை ஏற்க முடியாதிருக்கும் முன்னாள் எம்.பி. சிவஞானம் சிறீதரனுக்கு அனுப்பப்பட்டது என்ற விடயம் ஏனோ கட்சிக்காரர்களால் மூடுமந்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த பொதுத்தேர்தலில் தமது வெற்றிக்காக சிவஞானம் சிறீதரனின் தோளில் கைகளைப் போட்டவாறு வாக்குகளைப் பெற்ற சுமந்திரன் (இவரது வெற்றி சசிகலா ரவிராஜை அப்புறப்படுத்தி பெற்றதாக அன்றிலிருந்து இன்றுவரை சொல்லப்பட்டு வருகிறது), இம்முறை முன்னைய தேர்தல்களைவிட அதிகூடிய வாக்குகளைப் பெறவேண்டுமென்பதற்காக தமக்கு நெருக்கமானவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொண்டதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுள் ஒருவரான சுமந்திரன் வேட்பாளர் தெரிவுக்குழுவில் இடம்பெற்றதாகவும், அக்குழுவில் இவருக்கு சாதகமானவர்களே கூடுதலாக இருந்ததாகவும் கொழும்புக் கிளையின் தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்துள்ள குற்றச்சாட்டை இதுவரை எவரும் மறுக்கவில்லை.
சிவஞானம் சிறீதரனை வேட்பாளர் பட்டியலில் சேர்க்க சுமந்திரன் எதிர்ப்புக் காட்டியே வந்தார். ஆனால், கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஒரு தீர்மானமாக சிவஞானம் சிறீதரனை இணைப்பதை நிறைவேற்றி விட்டதால் அதனை ஏற்க வேண்டிய கட்டாயம் சுமந்திரனுக்கு ஏற்பட்டது.
இறுதியில், வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு அனைவரும் ஓரணியாகச் சென்றபோது சிறீதரனிடம் அந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. அவரை பட்டியலின் முதன்மை வேட்பாளர் என்று கூறி அவரூடாக பட்டியலைக் கையளிக்கச் செய்ததுகூட சுமந்திரன் அரங்கேற்றிய ஒரு குறுநாடகம்.
இந்த நாடகத்தில் பலிக்கடாவான சிறீதரன் வேட்பாளர் பட்டியலை கையளித்த கையுடன் நேரடியாக மாவை சேனாதிராஜா இல்லம் சென்று அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றதை சுமந்திரனால் ஏற்றுக்கொள்ள முடியாது. பார்க்கப் போனால் மூத்த தலைவர் சம்பந்தனின் இடத்துக்கு மாவை சேனாதிராஜாவை சிறீதரன் உயர்த்திவிட்டாரென்றே சொல்ல வேண்டும்.
சுமந்திரனால் பழிவாங்கப்பட்ட சட்டத்தரணி தவராஜா, முன்னாள் எம்.பி. ஈஸ்வரபாதம் சரவணபவான் மற்றும் பொ.ஐங்கரநேசன் உட்பட ஓர் அணி ஜனநாயக தமிழரசுக் கட்சி என்ற பெயரில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுகின்றது. இதுகூட சுமந்திரனால் வந்த வினையே. இவர்களது சின்னம் மாம்பழம். வேட்பாளர் பட்டியலை சமர்ப்பித்த பின்னர் தவராஜாவும் சரவணபவனும் மாவை சேனாதிராஜாவின் இல்லத்துக்கு மாம்பழங்களை எடுத்துச் சென்று ஆசி பெற்றுள்ளனர்.
சுமந்திரனால் தூக்கி வீசப்பட்ட சசிகலா ரவிராஜ் (மாமனிதர் ரவிராஜின் மனைவி), சித்தார்த்தன் – செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையிலான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றார். இவ்வகையான எதிர்பாராத நம்ப முடியாத பல திருப்பங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் மாவை சேனாதிராஜா மிகச் சுருக்கமாக விடுத்திருக்கும் வேண்டுகோள் ஒன்று முக்கியமானதாக நோக்கப்பட வேண்டியது.
‘தமிழரசின் கொள்கைகளை சுமப்போரை வெல்லச் செய்யுங்கள்” என்ற இந்த வேண்டுகோள் தம்மை நாடி வந்து ஆசி பெற்றவர்களுக்கும் அவர்களது அணியினருக்கும் வாக்களிக்குமாறு கேட்பதை தெரிவிக்கிறது. சுமந்திரனின் எதேச்சாதிகாரப் போக்கை எதிர்த்து வெளியேறியவர்களை, தமிழரசின் கொள்கைகளைச் சுமப்பவர்கள் என்று மாவையர் மகுடம் சூட்டியுள்ளார். தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெல்லச் செய்யுங்கள் என்று மாவையர் தெரிவிக்கவில்லையென்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
இதனை நேர்படச் சொல்வதானால், தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தி சுமந்திரன் அணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரிக்க வேண்டாமென்று மாவையர் கேட்டிருப்பது வெளிச்சமாகத் தெரிகிறது.