‘வடசென்னை இளைஞர்’ என்று கூறுவது தவறா? ஐகோர்ட் கண்டிப்பு பற்றி எழுத்தாளர்கள் கருத்து
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
“சென்னையில் ஒரு பிரிவினரை ‘வடசென்னை இளைஞர்கள்’ எனக் கூறி அவர்களை வேறுபட்டவர்களாக முத்திரை குத்துவதை ஏற்க முடியாது,” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைப்பைக் கொடுத்த மக்களை இவ்வாறு இழிவு செய்வதை ஏற்க முடியாது,” என்கின்றனர் எழுத்தாளர்கள்.
” ‘வடசென்னை’ என்ற சொல் புறக்கணிக்க வேண்டிய ஒன்றல்ல. அது பண்பாட்டு அடையாளம்,” என்ற குரல்களும் எழுகின்றன.
‘வடசென்னை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன் சர்ச்சையாகிறது? நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நீதிபதிகள் சிவஞானம், எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வில் வழக்கறிஞர் தமிழரசன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலனுக்குப் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்து தமிழரசன் முறையிட்டார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் சிறப்பு அதிகாரியாக சிங்காரவேலன் பணியாற்றிய போது, வடசென்னையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வக்கீல் பதிவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் கூறிய தமிழரசன், ‘அவர்களால் சிங்காரவேலனின் உயிருக்கு அச்சுறுத்தல்’ உள்ளதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வடசென்னை இளைஞர்கள் குறித்து வழக்கறிஞர் தமிழரசன் குறிப்பிட்ட கருத்தை நீதிபதிகள் கண்டித்தனர். “வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எதுவாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் சென்னை நகரத்தில் வசிப்பவர்கள் தான். அவ்வாறு யாரையும் குறிப்பிடக் கூடாது,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
“வடசென்னையைச் சேர்ந்தவர்களை வன்முறையாளர்களாகவோ, வேறுபட்டவர்களாக பிரித்துக் காட்டுவதை ஏற்க முடியாது,” என்று நீதிபதிகள் கூறினர்.
‘வட சென்னை’ என்று குறிப்பிட்டது ஏன்?
“வடசென்னையைச் சேர்ந்தவர்கள் சட்டம் படித்து வக்கீல் தொழிலுக்கு வருவதை வரவேற்கிறோம். சென்னையில் வக்கீல் தொழிலுக்குப் பதிவு செய்வதில் 60%-க்கும் மேற்பட்டவர்கள் வட சென்னையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்” என்று பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் தமிழரசன் தெரிவித்தார்.
2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் பார் கவுன்சிலில் சிறப்பு அதிகாரியாக சிங்காரவேலன் இருந்த போது, வடசென்னையை சேர்ந்த ஏராளமானோரின் வக்கீல் தொழில் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்ததாகக் கூறிய தமிழரசன், இதனால் அவருக்கு ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டவே வடசென்னை என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
எழுத்தாளர் கரன் கார்க்கி கூறுவது என்ன?
இதுகுறித்துப் பேசிய எழுத்தாளர் கரன் கார்க்கி, “வடசென்னையைச் சேர்ந்தவர் என்றாலே தவறு செய்பவர் என்று கூறுவதை ஏற்க முடியாது. இது அவர்களின் பக்குவமற்ற நிலையைக் காட்டுகிறது,” என்கிறார்.
“சினிமா, இசை, எழுத்து ஆகியவற்றில் வாய்ப்பு கிடைத்தால் வடசென்னையைச் சேர்ந்த மக்கள் மிகப் பெரிய உயரங்களுக்குச் செல்வார்கள் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன,” என்கிறார்.
இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகம் தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறும் கரன் கார்க்கி, “சமூகத்தின் மனநிலையே அப்படித்தான் இருக்கிறது. ‘மேலே-கீழே’ எனப் பேசுவதில் சிலர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஒருவரை வீழ்த்துவதற்கு ‘ஏரியா பையன்’ என்று கூறுகின்றனர். இது ஒருவகையான ஆதிக்க மனநிலை,” என்கிறார்.
இயக்குநர் கோபி நயினார் கருத்து
இதுகுறித்துப் பேசிய திரைப்பட இயக்குநர் கோபி நயினார், ” குற்றம் இழைப்பவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் வடசென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதும் மனோபாவம் இருக்கிறது,” என்கிறார்.
“வடசென்னையில் அனைத்து பிரிவினரும் உள்ளனர். அது ஒரு தொழில் நகரம். அங்கு முதலாளிகளுக்குள் மோதல் வரும்போது, அவர்களுக்காகச் சண்டை போடுவதற்கு ஆட்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்,” என்கிறார் கோபி நயினார்.
“பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வடசென்னையில் உள்ளனர். இந்த நகரத்துக்காக அவர்களது உழைப்பையும் சேர்த்து அவர்களை மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும்,” என்கிறார் கோபி நயினார்.
‘வளர்ச்சி பற்றி யாரும் பேசுவதில்லை’
“வடசென்னையில் மூன்று நெசவாலைகள் இருந்தன. ரயில் பெட்டித் தொழிற்சாலை, துறைமுகம் ஆகியவை உள்ளன. மாநிலத்தை வளப்படுத்தும் தொழிற்சாலைகள் இங்கே தான் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் உழைத்த, தற்போதும் உழைத்துக் கொண்டிருக்கும் மக்களால் மாநிலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றி யாரும் பேசுவதில்லை. வடசென்னை எனக் கூறுவதன் மூலம் அம்மக்களை இழிவுபடுத்துவதாக நினைக்கிறார்கள்,” என்கிறார் கரன் கார்க்கி.
‘சொல்வதில் தவறு இல்லை’
இந்தக் கருத்தில் முரண்படும் எழுத்தாளர் தமிழ்ப் பிரபா, “வடசென்னையை மையப்படுத்தி ஒரு சினிமா வரும்போது அதற்கென ஓர் அடையாளம் கிடைக்கிறது. அந்த ஒரு சொல்லால் அவர்களை ஒருமுகப்படுத்த முடிகிறது என்றால் அதை ஏன் புறக்கணிக்க வேண்டும்?” என்கிறார்.
“சிந்தாதிரிப்பேட்டை, பெரியமேடு, சென்ட்ரல், எழும்பூர் ஆகிய பகுதிகளை மத்தியச் சென்னை என்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் வடசென்னை மக்களுக்கும் பண்பாட்டு ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை,” என்கிறார் தமிழ்ப் பிரபா.
“வடசென்னை என்ற வார்த்தையின் மூலம் அழைக்கப்படுவதை நான் தவறாக பார்க்கவில்லை. அதை எந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும்” என்கிறார் தமிழ்ப் பிரபா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு