“வங்கதேச சூழலை இந்தியாவில் உருவாக்க முயற்சி” – ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியதன் அர்த்தம் என்ன?

இந்தியா - வங்கதேசம், ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விஜயதசமி தினத்தன்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் மோகன் பாகவத் உரை நிகழ்த்தினார்
  • எழுதியவர், பிரவீன் சிந்து
  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

தசரா (விஜயதசமி) பண்டிகை அன்று, நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அதன் தலைவர் மோகன் பாகவத் பேசிய விஷயங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறன.

ஏனெனில், தனது உரையில் அவர் வங்கதேசத்தில் நிலவும் ஸ்திரமின்மையை இந்தியாவுடன் ஒப்பிட்டுள்ளார். அதனுடன், மற்ற பிரச்னைகள் குறித்தும் அவர் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உரையில் ‘இந்தியாவில் வங்கதேசத்தில் நிகழ்ந்த வன்முறையை போன்ற சூழலை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும்’, ‘அங்கு சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைகள்’ மற்றும் ‘ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவருக்கு எதிராக நடைபெற்ற கொடுமை’ குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

மோகன் பாகவத் கூறியவற்றின் அர்த்தம் என்ன என்பது குறித்து அறிய பிபிசி மராத்தி அரசியல் ஆய்வாளர்களிடம் பேசியது.

இந்தியா - வங்கதேசம், ஆர்எஸ்எஸ்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘வங்கதேசம் போன்ற சூழலை ஏற்படுத்த முயற்சி’

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை குறித்த பிரச்னையை தன் உரையில் மோகன் பாகவத் எழுப்பினார். வங்கதேசத்தில் நிலவிய சூழலை போன்று இந்தியாவிலும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மோகன் பாகவத் தன் உரையில் ‘டீப் ஸ்டேட்’ (சுயநல விருப்பங்களுக்காக அரசியல் கொள்கைகளை ரகசியமாக கட்டுப்படுத்தும் அல்லது தவறாக சித்தரிக்கும் செல்வாக்கு மிக்க குழு), ‘வோக்கிசம்’ (தாராளவாத முற்போக்கு சித்தாந்தம் மற்றும் கொள்கையை ஆதரித்தல்), ‘கலாசார மார்க்சியம்’ (Cultural Marxist – பாரம்பரிய மார்க்சிய சித்தாந்தத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு சமூக-அரசியல் கோட்பாடு) ஆகிய வார்த்தைகளை குறிப்பிட்டு, தற்போது இவை விவாதிக்கப்பட்டு வருவதாகவும், அவை பண்பாடுகளுக்கு எதிரி என்றும் தெரிவித்தார்.

“கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை நல்லதாகவும் அனுகூலமானதாகவும் கருதப்படும் எதையும் முற்றிலுமாக அழிப்பதே இந்த குழுவின் செயல்திட்டம்.” என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், “சமூக அநீதி குறித்த உணர்வு இச்சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு சமூகத்தின் மற்ற பிரிவுகளிலிருந்து பிரிந்து, (அரசு) அமைப்பின் மீது கோபத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

“அரசு நிர்வாகம், சட்டம் போன்றவற்றின் மீது வெறுப்பு மற்றும் நம்பிக்கையின்மையை ஊக்கப்படுத்தி, அரசின்மை மற்றும் பயம் ஏற்படுத்தப்படுகிறன. இதனால், நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதை எளிதாக்குகிறது. அரபு வசந்தம்’ (அரபுலகின் நடந்த கிளர்ச்சிகள்) முதல் அண்டை நாடான வங்கதேசத்தில் நிகழ்ந்த சமீபத்திய நிகழ்வுகள் வரை, இதே மாதிரியான அணுகுமுறைதான் கையாளப்பட்டது. இதேபோன்ற கொடிய முயற்சிகள் இந்தியா முழுமையிலும் நிகழ்வதை நாம் பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார்.

மோகன் பாகவத்தின் கருத்து குறித்து பிபிசி மராத்தி மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திர சேத்திடம் பேசியது.

அவர் கூறுகையில், “மார்க்சியம் குறித்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் விமர்சனம் எப்போதும் ‘கலாசார மார்க்சியம்’ சார்ந்ததாகவே உள்ளது. இந்தியாவின் கலாசாரம் ‘இந்து கலசாரம்’ என கூறிவரும் ஆர்எஸ்எஸ், அதை ‘கலாசார மார்சியம்’ மூலம் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டுகிறது” என்றார்.

மேலும் அவர், “பாகவத்தின் இத்தகைய கருத்துகள், சங் பரிவாரங்களுக்கு தரப்பட்ட தாக்குதலுக்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது” என்றார்.

இந்தியா - வங்கதேசம், ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் வங்கதேசம் போன்ற சூழலை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாக மோகன் பாகவத் கூறினார் (கோப்புப்படம்)

மூத்த பத்திரிகையாளர் விவேக் தேஷ்பாண்டே, ‘அந்நிய சக்திகள்’ குறித்த மோகன் பாகவத்தின் கருத்து, அரசு சாரா அமைப்புகள் மீதான மோதி அரசாங்கத்தின் நடவடிக்கையை குறிப்பதாக விவரித்தார்.

அவர், “இந்திய மக்களை வெளிநாட்டு சக்திகள் தூண்டுகின்றன என்ற கருத்து, சமீபத்தில் இந்தியாவில் பல அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக மோதி அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பானது” என கூறினார்.

மேலும், “சென்டர் ஃபார் ரிசார்ச் பாலிசி எனும் மையம் உட்பட பல அரசு சாரா அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏனெனில், இந்த அமைப்புகளுக்கு அந்நிய சக்திகள் நிதியளிப்பதாகவும் அதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் மற்றும் மோதி அரசாங்கம் கூறுகிறது. மோகன் பாகவத்தும் இதே கருத்தைத்தான் கூறுகிறார்” என்றார் அவர்.

விவேக் தேஷ்பாண்டே கூறுகையில், “உலகம் முழுவதிலும் உள்ள பல சர்வதேச அமைப்புகள், இந்தியாவில் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் இங்குள்ள பல்வேறு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதாக ஆர்எஸ்எஸ் கூறுகிறது” என்றார்.

மேலும், “இந்தியாவில் பல அரசு சாரா அமைப்புகளுக்கு எதிரான மோதி அரசின் நடவடிக்கை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் விரிவான செயல் திட்டத்தின் ஒரு பகுதி. ஆர்எஸ்எஸ் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

‘அரபு வசந்தம்’ மற்றும் வங்கதேசத்தில் நிகழ்ந்த இயக்கம் தொடர்பாக பாகவத் கூறியது குறித்துப் பேசிய அவர், “இந்த இரு நிகழ்வுகளும் உலகம் முழுவதிலுமிருந்து வரவேற்கப்படுகின்றன. சர்வாதிகாரம் மற்றும் மத தீவிரவாத போக்குக்கு எதிராக ‘அரபு வசந்தம்’ நடைபெற்றது” என்றார்.

மேலும், “அரபு வசந்தத்தின் நோக்கம் மிகவும் ஜனநாயக ரீதியானது. அதேபோன்று, வங்கதேசத்தில் எழுந்த கிளர்ச்சியும் ஜனநாயக ரீதியானது.” என்றார்.

விவேக் தேஷ்பாண்டே கூறுகையில், “இது அமெரிக்கா அல்லது பயங்கரவாதிகளின் சதி என்பது உண்மை அல்ல. இது வெறும் சதி கோட்பாடு. சதி கோட்பாட்டை சார்ந்துதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுவின் சித்தாந்தமும் உள்ளது” என்றார்.

“ஆர்எஸ்எஸ் எப்போதும் ஒரு பிரச்னையை ஒரே கண்ணோட்டத்தில் தான் அணுகும். அதாவது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மார்க்சியவாதிகளிடமிருந்து இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆர்எஸ்எஸ் கூறிவருகிறது. அதுதான் அவர்கள் சித்தாந்தத்தின் மையம்” என்றார் அவர்.

தேஷ்பாண்டே கூறுகையில், “பஞ்ச் ஆஃப் தாட்ஸ் (Bunch of Thoughts) எனும் புத்தகத்தில் கோல்வால்கரே இதை எழுதியுள்ளார். இதுவும், ஆர்எஸ்எஸ் கோட்பாட்டின் ஒரு பகுதிதான்” என்றார்.

‘வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள்’

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் பிரச்னை குறித்தும் மோகன் பாகவத் பேசினார்.

அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையால் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இந்து சமூகத்தினர் மீது கொடூரமான தாக்குதல்களை நாம் மீண்டும் பார்த்தோம். இந்த முறை, இந்துக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்” என்றார்.

“ஆனால், இத்தகைய அடக்குமுறைகளில் ஈடுபடும் ஜிகாதி எண்ணம் இருக்கும் வரை, அங்குள்ள இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஆபத்து ஏற்படுவது தொடரும்.” என்று அவர் கூறினார்.

மேலும் அவர், “பாகிஸ்தானுடன் கைகோர்ப்பது குறித்து வங்கதேசத்தில் விவாதிக்கப்படுகிறது. இத்தகைய விவாதங்கள் மூலம் இந்தியா மீது அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பும் நாடுகளின் பெயர்களை கூற வேண்டிய தேவையில்லை. இத்தகைய விவாதங்கள் கவலைக்குரிய விஷயமாக உள்ளன” என தெரிவித்தார்.

இந்தியா - வங்கதேசம், ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பது குறித்து வங்கதேசத்தில் விவாதிக்கப்படுகிறது என மோகன் பாகவத் கூறினார்

ராஜேந்திர சேத் கூறுகையில், “வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாப்பதாக வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் மற்றும் மற்ற முக்கிய தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சிறுபான்மையினரின் மத வழிபாட்டு தலங்களுக்கும் அவர்கள் சென்றுள்ளனர்” என்றார்.

“வங்கதேசத்தின் அரசியல் மற்றும் சமூகம் மதச்சார்பின்மையுடன் இருப்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான பிரச்னை. வங்கதேசம் இஸ்லாமிய நாடாக இருந்தால் அவர்கள் விமர்சிக்கலாம். வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் இந்தியாவுக்கு வந்தால், அவர்கள் அங்கு பிரச்னையில் இருப்பதாக கூறலாம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை” என்றார் அவர்.

அவர் மேலும் கூறுகையில், “ஒரே சமயத்தில் முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாட்டை எடுப்பது, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சிறப்பு. அதனால், அங்குள்ள சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும் என கூறுகின்றனர்” என்றார்.

மேலும், “வங்கதேசத்தின் பார்வையில், இந்தியா ஓர் அந்நிய சக்தி. இந்தியாவில் பசுவதை எனும் பெயரில் முஸ்லிம்கள் கொல்லப்படும் போதோ அல்லது மதரசாக்கள் தாக்கப்படும் போதோ அதுகுறித்து வங்கதேசம் அல்லது முஸ்லிம் நாடுகள் ஏதேனும் தெரிவித்தால், ஆர்எஸ்எஸ் அதுகுறித்து என்ன செய்யும்?” என்றார்.

இந்தியாவில் நிலவும் பிரச்னைகள் குறித்தும் மோகன் பாகவத் பேசினார். அதிலொன்று, மேற்கு வங்கத்தில் நடைபெற்றது.

‘மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர்கள் மீதான கொடுமைகள்’

மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மோகன் பாகவத் கருத்து தெரிவித்தார்.

ஒட்டுமொத்த சமூகத்தையும் இந்த சம்பவம் களங்கப்படுத்தியதாக அவர் கூறினார்.

மோகன் பாகவத் கூறுகையில், “இப்படியான மோசமான குற்றம் நடந்த பின்னரும் சிலர் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு இழிவான முயற்சிகளை எடுக்கின்றனர். இது, குற்றம், அரசியல், தீயசக்தி ஆகியவற்றின் கலவை நம்மை எவ்வாறு சிதைக்கிறது என்பதை காட்டுகிறது” என்றார்.

மற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து சுட்டிக்காட்டிய விவேக் தேஷ்பாண்டே, அவற்றில் பாகவத்தின் அமைதி மற்றும் ஒட்டுமொத்தமாக அவருடைய நிலைப்பாடு குறித்தும் கேள்வியெழுப்பினார்.

இந்தியா - வங்கதேசம், ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்ஜி கர் மருத்துவமனையில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன (கோப்புப்படம்)

விவேக் தேஷ்பாண்டே கூறுகையில், “ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நிகழ்ந்தது குறித்து பாகவத் பேசுகிறார். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நிகழ்ந்த கொடுமைகள் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு முரணாக, இவ்வளவு பெரிய நாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது, நாட்டில் மிக மோசமான சூழல் இருப்பதாக அர்த்தமாகிவிடாது என பேசியிருந்தார்” என்றார்.

மேலும் அவர், “மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் குறித்து பாகவத் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேற்கு வங்கத்தின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்தது குற்றச்செயல் என்பது மிகத் தெளிவு. அந்த சம்பவத்தில் எந்த அரசியலும் இல்லை. சம்பவம் நிகழ்ந்த பின்னர்தான் அதில் அரசியல் நுழைந்தது” என்றார்.

“எனினும், மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தலில் குற்றம்சாட்டப்பட்டவர் ஓர் அரசியல்வாதி. பிரிஜ் பூஷண் சிங் ஒரு பாஜக தலைவர். ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என அவரால் கூறமுடியாது.”

“ஆர்ஜி கர் மருத்துவமனையில் நிகழ்ந்தது குறித்து மோகன் பாகவத் குறிப்பிட்டார். ஆனால், நாட்டின் பெருமைக்குரிய மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் குறித்து குறிப்பிடவில்லை. என்ன மாதிரியான இந்திய கலாசாரம் இது?” என தேஷ்பாண்டே கேள்வியெழுப்பினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு