யூனியன் பிரதேசமாகிவிட்ட ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் ஒமர் அப்துல்லா முன்னுள்ள சவால்கள் என்ன?
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி இந்தி
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை முடிவுகள் வெளியானவுடன், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார் என்று ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த 54 வயதான ஒமர் அப்துல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக முதல்வரானார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி அமையவுள்ளது. காஷ்மீர் கட்சிகளை, குறிப்பாக தேசிய மாநாட்டுக் கட்சியை பாஜக குறிவைத்தது. எங்களை பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன. எங்களுக்கு எதிராக சில கட்சிகளை திசை திருப்பவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்தத் தேர்தல் அந்த முயற்சிகள் அனைத்தையும் அழித்துவிட்டது.” என்று கூறினார்.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஒமர் அப்துல்லா, அப்போது திகார் சிறையில் இருந்தவாறே போட்டியிட்ட பொறியாளர் ரஷீத்திடம் தோல்வியடைந்தார்.
அரசியலமைப்பின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, பாரதிய ஜனதா அரசாங்கத்தால் ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.
லெப்டினன்ட் கவர்னர் மூலமாக, ஜம்மு- காஷ்மீர் அரசு பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஒரு முதலமைச்சராக ஒமர் அப்துல்லாவுக்கு செய்வதற்கு அதிகம் இருக்காது.
இருப்பினும், காஷ்மீர் மக்களுக்கு தன் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது என்ற செய்தியை இந்தியாவிற்கு உணர்த்துவதில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் ஜம்மு-காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இந்த ஆண்டு ஜூலை வரை அப்துல்லா கூறி வந்தார்.
“இதற்கு முன் நான் ஒரு முழு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தேன். ஆனால் இப்போது ஒரு பியூனைத் தேர்வு செய்யக் கூட லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலைப் பெற அல்லது அவரது அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து அவர் கையெழுத்திடும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அவர் கூறியிருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி?
காஷ்மீருக்கு இந்த தேர்தல் முக்கியமான ஒரு மைல்கல் என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் முகமது யூசுப் டெங்.
காஷ்மீரின் அடையாளம் குறித்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதையும், காஷ்மீர் மக்களுக்கு இது மிகப்பெரிய அரசியல் பிரச்னை என்பதையும் இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது என டெங் குறிப்பிடுகிறார்.
“தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஒமர் அப்துல்லா தலைமை தாங்கினார், மத்திய அரசு காஷ்மீரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை எவ்வாறு சேதப்படுத்தியது மற்றும் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை எவ்வாறு நசுக்கியது என்பதைப் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்” என்று டெங் கூறுகிறார்.
டெங்கைப் பொருத்தவரை, ‘ஒமர் அப்துல்லா, மக்களை தன்னுடன் ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றார். காஷ்மீர் மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.’
வாக்குரிமையை தங்கள் விருப்பப்படி பயன்படுத்துவோம் என்ற செய்தியை காஷ்மீர் மக்கள் வழங்கியுள்ளனர் என்று டெங் கூறுகிறார். ஆனால் காஷ்மீரின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், முதல்வருக்கு மிகக் குறைந்த அரசியல் அதிகாரமே இருக்கும்.
ஒமர் அப்துல்லாவின் வெற்றி ஏன் முக்கியம்?
ஒமர் அப்துல்லா அரசியல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றாலும் கூட, அவரது கட்சியின் இந்த வெற்றி அடையாள ரீதியாக மிகவும் முக்கியமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜம்மு- காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதன் லெப்டினன்ட் கவர்னர் பதவி மிகவும் சக்தி வாய்ந்தது. அவருக்கு கீழ் தான் முதல்வர் பணியாற்ற வேண்டும். ஆனால் இதையும் மீறி, ‘காஷ்மீரின் தலைவராக இருக்க மக்கள் என்னை தான் விரும்புகின்றனர்’ என்ற செய்தியை வழங்குவதில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
“ஒமர் அப்துல்லா கைகளில் என்ன அதிகாரம் இருக்கும், அவர் ஒரு பிராந்திய தலைவர். ஆனால் காஷ்மீரின் அரசாங்கம் டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறு இடமாற்றம் (Transfer) செய்ய வேண்டும் என்றால் கூட, ஒமர் அப்துல்லாவால் அதை செய்ய முடியாது. இருப்பினும், காஷ்மீர் மக்களின் தலைவர் அவர் தான், எனவே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளின் சுமை அவர் மீது மட்டுமே இருக்கும்” என டெங் கூறுகிறார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மாநாட்டுக் கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் மிக முக்கியமான வாக்குறுதி, ‘காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம், சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்பதாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீரில் லெப்டினன்ட் கவர்னர் அலுவலகத்தில் இருந்து நிர்வாகம் நடத்தப்படுகிறது. ஆட்சி அதிகாரம் தங்களிடமிருந்து விலகி இருப்பதாக காஷ்மீர் மக்கள் உணர்ந்தனர்.
“ஒமரின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால், அதிகாரமும் ஆட்சியும் மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது.” என டெங் கூறுகிறார்.
‘காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கவும் போராடுவோம்’ என்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் சுமையும் ஒமர் அப்துல்லாவின் தோள்களில் இருக்கும்.
ஒமர் அப்துல்லாவின் அரசியல் பயணம்
ஒமர் அப்துல்லா மார்ச் 10, 1970 அன்று நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் பிறந்தார். அவரது குடும்பம் ஜம்மு- காஷ்மீரில் நீண்ட, நெடிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பமாகும்.
ஒமரின் தாத்தா ஷேக் அப்துல்லா ஒரு முக்கிய காஷ்மீர் தலைவர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முதல் பிரதமர் ஆவார். (1965க்கு முன் வரை காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் பதவி, ‘பிரதமர் பதவி’ என்றே அழைக்கப்பட்டது)
ஒமர் அப்துல்லா தனது ஆரம்பக் கல்வியை ஸ்ரீநகரில் உள்ள பர்ன் ஹால் பள்ளியில் பயின்றார், பின்னர் மும்பையில் உள்ள சிடன்ஹம் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அவரது குடும்பத்தின் அரசியல் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஒமர் அரசியலுக்கு வருவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.
ஒமர் அப்துல்லா 1998ஆம் ஆண்டு ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு தனது 28-வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அடல் பிஹாரி வாஜ்பேயி அரசில் இணை அமைச்சராகவும் அவர் இருந்தார்.
அடுத்த ஆண்டே, தேசிய மாநாட்டுக் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரானார். அவருக்கு கட்சிக்குள் மட்டுமல்ல, நாட்டிலும் அங்கீகாரம் கிடைத்தது.
சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2009இல் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீரில் ஆட்சியமைத்த போது, ஒமர் அப்துல்லா முதலமைச்சரானார்.
ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், காஷ்மீரின் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தார். காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
ஒமர் அப்துல்லா கடந்து வந்த பாதை
ஆனால் ஒமர் அப்துல்லாவுக்கு எல்லாம் எளிதாக இருக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதும், 2010-ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீரில் இருந்த பதற்றமான சூழ்நிலையும் அவருக்கு கடினமான சவால்களை உருவாக்கின.
காஷ்மீரில் 2010ஆம் ஆண்டில், மீண்டும் எழுந்த பிரிவினைவாதத்தைக் கையாள்வதில் அவர் வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்த தேர்தலில் அதன் விளைவுகளை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது.
காஷ்மீரின் 2014 சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி படுதோல்வி அடைந்தாலும், அதன் தேசியத் தலைவராக ஒமர் தொடர்ந்து பதவி வகித்தார்.
2019ஆம் ஆண்டில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, 370வது சட்டப்பிரிவை நீக்கியபோது, அரசின் இந்த முடிவுக்கு எதிரான ஒரு வலுவான அரசியல் குரலாக ஒமர் உருவெடுத்தார்.
ஒமர் அப்துல்லா, நீண்ட காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருந்த போதிலும், ‘சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை காஷ்மீர் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ போன்ற கருத்துகளை அவர் தொடர்ந்து வெளியிட்டார்.
இப்போது மீண்டும் ஒருமுறை காஷ்மீரின் அதிகாரம் ஒமர் அப்துல்லாவின் கைகளுக்கு வரப் போகிறது. ஆனால் இந்த முறை அவருக்கு அரசியல் சூழ்நிலைகள் மட்டுமல்ல, சவால்களும் வித்தியாசமாக இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு