மாற்றத்தின் திசைகாட்டியான தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்

by adminDev

வடக்கு, கிழக்கு மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கான மாற்றத்தின் திசைகாட்டியாக இருப்பது தமிழ் அரசுக் கட்சியாகும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் ஓரணிக்கு திரண்டு தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே பேரம்பேசும் சக்தியை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.வடமராட்சி கிளை அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் கருத்துரைக்கும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, வடக்கு, கிழக்கு மக்களின் பாரம்பரிய பேராதரவு பெற்ற ஒன்றாகும். அந்த வகையில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் இம்முறை மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள்.  

வடக்கு, கிழக்கு  மக்களின் மாற்றத்தின் திசைகாட்டியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். இதனை தமிழரசுக் கட்சி இம்முறை களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் மூலமாக உறுதி செய்ய முடியும்.  

அந்த வகையில், தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை ஓரணிக்கே அளிக்க வேண்டும். அதன் மூலமாகவே அவர்களின் பேரம்பேசும் சக்தியை உறுதி செய்துகொள்ள முடியும்.  

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் அபிலாஷைகளை உறுதி செய்வதில் எவ்விதமான மாறுபட்ட கொள்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆகவே புதிய அரசியல் கலாசாரத்தினையும், தனித்துவத்தினையும் உறுதி செய்யும் வகையிலான செயற்பாடுகளை இந்த தேர்தல் களத்தில் காண முடியும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்