தமிழரசுக்கட்சி தனது தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் கடந்த 10ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான மார்க்கண்டு நடராசா என்பவராலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் முதலாவது எதிராளியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், இரண்டாவது எதிராளியாக பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கமும் மூன்றாவது எதிராளியாக தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சேவியர் குலநாயகம் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
மூன்று எதிராளிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கூட்டப்பட்டு, முறையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் வரை கட்சியின் நிர்வாகப் பதவி எதனையும் வகிக்கத் தகுதி அற்றவர்கள் என்ற நிரந்தர தடைக்கட்டளைக்கு கோரப்பட்டுள்ளது.
எதிராளிகள் தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் என்ற அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு என்ற பெயரில் எவ்வித கூட்டங்களையும் கூட்டக்கூடாது என்ற இடைக்கால தடைக்கட்டளைக்கு கோரப்பட்டுள்ளது
அத்துடன் முதலாம் எதிராளி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற காதாவில் செயற்படக் கூடாது என்ற இடைக்காலத் தடைக்கட்டளைக்கும், இரண்டாம் எதிராளியான ப.சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற கோதாவில் செயற்படக் கூடாது என்ற இடைக்கலாத் தடைக்கட்டளைக்கும் வழக்காளி நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
வழக்காளி கோரியுள்ள விடயங்களை ஏன் மன்று வழங்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் மூன்று எதிராளிகளிடமும் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.