டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவரான நோயல் டாடாவின் முழு பின்னணி

நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயல் டாடா (கோப்புப் படம்)

டாடா அறக்கட்டளைகளின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார். இது, டாடா குழுமத்தின் பல அறக்கட்டளைகளை உள்ளடக்கியது.

நோயல் டாடா, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

ரத்தன் டாடா மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார். அதன் பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 67 வயதான நோயல் நேவல் டாடா தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோயல் டாடா ஏற்கெனவே டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். ரத்தன் டாடாவுக்கு பிறகு, தற்போது நோயல் டாடா சுமார் ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை வழிநடத்துவார்.

நோயல் டாடாவின் நியமனம் தொடர்பாக, டாடா அறக்கட்டளை அதிகாரபூர்வ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நோயலின் நியமனம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நோயல் டாட்டவை தேர்வு செய்தது ஏன்?

“இவ்வளவு பெரிய குழுவின் பொறுப்பில் இருப்பவர் பணிவாக இருக்க வேண்டும். அவரிடம் எந்த ஈகோவும் இருக்கக்கூடாது, பொறுப்பு கொடுக்கப்படும்போது கர்வம் இருக்கக்கூடாது…”

டாடா குழுமத்தின் வாரிசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ரத்தன் டாடாவின் எண்ணங்கள் இவை.

தனக்குப் பின் வருபவர் தொலைநோக்குப் பார்வையுடையவராக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு குழுமத்தை வழிநடத்தக்கூடிய வயதுடையவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரத்தன் டாடாவுக்கு திருமணமாகவில்லை, அவருக்கு குழந்தையும் இல்லை. இதனால், அவரது நெருங்கிய உறவினர்களிடம் டாடா குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஒப்படைக்கலாம் என்ற கருத்து நிலவியது.

ரத்தன் டாடாவின் மரணத்திற்குப் பிறகு, டாடா குழுமத்தில் ரூ.34 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 66.4 சதவீத பங்குகளை வைத்திருக்கும் 13 அறக்கட்டளைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதுதான் மிகப்பெரிய ஊகமாக இருந்தது.

அப்போது, டாடா அறக்கட்டளைகளின் தலைவர் பொறுப்புக்கு நோயல் டாடாவின் பெயர் வலுவாகப் பேசப்பட்டு வந்தது. நோயல் டாடா ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

ரத்தன் டாடாவின் குடும்பம்

ஏனெனில், இந்த அறக்கட்டளைகள் அனைத்திற்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு டாடா குழுமத்தை நடத்தும் பெரிய பொறுப்பு இருக்கும்.

இந்த அறக்கட்டளைகளுக்கு ரத்தன் டாடா எந்த வாரிசையும் அறிவிக்கவில்லை என்பதால், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா வலுவான போட்டியாளராக உருவெடுத்தார்.

இந்த 13 அறக்கட்டளைகளில் வலுவான சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவற்றின் அறங்காவலராக நோயல் டாடா இருந்தார்.

இந்த இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன.

எனவே, ரத்தன் டாடாவுக்கு பிறகு தலைமைப் பொறுப்புக்கு நோயல் டாடா வலுவான தேர்வாகக் கருதப்பட்டார்.

யார் இந்த நோயல் டாடா?

நோயல் டாடா, நேவல் டாடா-சிமோன் டாடாவின் மகன் மற்றும் ரத்தன் நேவல் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.

நோயல் டாடா பிரிட்டன் சசக்ஸில் பட்டம் பெற்றார். பின்னர், இன்சீட் (INSEAD) எனப்படும் சர்வதேச தொழிற்பயிற்சிப் பள்ளியில் சர்வதேச நிர்வாகத் திட்டத்தில் (International Executive Programme) படித்தார்.

நோயல் டாடா தற்போது டாடா இன்டர்நேஷனல் லிமிடெட், ட்ரெண்ட் (Trent), வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டாடா குழுமத்துடன் இணைப்பில் உள்ளார்.

நோயல் டாடா எப்போது டாடா குழுமத்தில் சேர்ந்தார்?

புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சருடன் நோயல் டாடா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சருடன் நோயல் டாடா

நோயல் டாடாவுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையிலான உறவு ஆரம்பத்தில் நன்றாக இல்லை. ஆனால், படிப்படியாக டாடா குழுமத்தில் நோயலின் அந்தஸ்து உயர்ந்தது. சமீப காலங்களில், டாடா குழுமத்தைக் கட்டுப்படுத்தும் அறக்கட்டளைகளில் அவர் தனது பங்கை அதிகரிக்கத் தொடங்கினார்.

பிப்ரவரி 2019இல், அவர் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் இணைந்தார். முன்னதாக 2018இல், டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மார்ச் 2022இல், அவர் டாடா ஸ்டீலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நோயல் 2011இல் டாடா இன்டர்நேஷனலின் தலைவராக நியமிக்கப்பட்டார், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு டாடாவின் சில்லறை வணிகச் சங்கிலியான ட்ரென்டின் (Trent) தலைவராகப் பணியாற்றினார்.

க்ரோமா, வெஸ்ட்சைட், ஜூடியோ, ஸ்டார் பஜார் போன்ற டாடா குழுமத்தின் சில்லறை வணிக சங்கிலி நிறுவனங்களை டிரென்ட் நடத்துகிறது. இருப்பினும், இதில் டாடா ஸ்டார்பக்ஸ், டைட்டன், தனிஷ்க் ஆகியவை இடம்பெறவில்லை.

டாடா வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராக நோயல் உள்ளார்.

நோயல் டாடா 2010 முதல் 2021 வரை டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்தார். அந்த நேரத்தில் அவர் அதன் வருவாயை 500 மில்லியன் டாலர்களில் இருந்து 3 பில்லியன் டாலர்களாக உயர்த்தினார். அவரது தலைமையில், ட்ரென்ட் 1998இல் ஒரு கடையுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று 700 கடைகள் உள்ளன.

நோயல் டாடாவின் குடும்பம்

நோயல் டாடா

பட மூலாதாரம், Tata Trusts

படக்குறிப்பு, டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் அலு மிஸ்திரியை நோயல் டாடா மணந்துள்ளார்

ரத்தன் டாடாவுக்கு 18 வயது இருக்கும்போது, ​​அவரது தந்தை நேவல் மறுமணம் செய்துகொண்டார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த சிமோன் என்பவரை நேவல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியின் மகன்தான் நோயல் டாடா.

டாடா குழுமத்தின் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கும் பல்லோன்ஜி மிஸ்திரியின் மகள் அலூ மிஸ்திரியை நோயல் டாடா மணந்துள்ளார்.

எனவே, ரத்தனுக்கு பிறகு டாடா & சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நோயல் வருவார் என்று பலரும் கணித்தனர்.

ஆனால், முன்பு இதுகுறித்த சாத்தியக்கூறுகளை மறுத்திருந்த ரத்தன் டாடா, “இவ்வளவு பெரிய குழுமத்தை வழிநடத்தும் அனுபவம் நோயலுக்கு இல்லை” என்று கூறினார். இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பு நோயலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் பஜார் நோயல் டாடாவின் மகன் நெவில் தலைமையில் இயங்குகிறது. அவரது மகள் லியா டாடா கேட்வே பிராண்டை நிர்வகித்து வருகிறார். அவரது இரண்டாவது மகள் மாயா டாடா, டாடா டிஜிட்டல் நிறுவனத்திற்குப் பொறுப்பாக உள்ளார். இவர்கள் மூவரும் டாடா குழுமத்தின் அடுத்த வாரிசுகளாக இருப்பார்கள் என்ற பேச்சும் அடிபட்ட நிலையில், நோயல் டாட்டாவுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு