சென்னை ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை என்ன? இரு ரயில்களும் மோதியது எப்படி?

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, சென்னை அருகே ரயில்கள் மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து கிடக்கும் காட்சி

சென்னை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சுமார் 13 பெட்டிகள் தடம்புரண்டன. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து காரணமாக அவ்வழியே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் உரிய இடத்திற்குச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக, அவ்வழியேயான ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இந்த விபத்து நேரிட்டது எப்படி?

இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகிய நிலையில், விசாரணைக்குப் பின்னரே அதுகுறித்த தகவல் தெரியவரும் என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன் தெரிவித்தார்.

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ரயில் இயக்கங்களைக் கட்டுப்படுத்தவும், ரயில் நிலையங்கள் மற்றும் சந்திப்புகளில் பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படும் முக்கியமான பாதுகாப்பு பொறிமுறையைக் குறிக்கிறது.

ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி மனோகரன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இண்டர்லாக்கிங் சிஸ்டம் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு என்றால், டேட்டா லாக்கர் அமைப்பில் தெரியவந்துவிடும். இன்றைய விசாரணையில் டேட்டா லாக்கரை எடுத்து ஆய்வு செய்யும்போது, ஏன் இந்த விபத்து ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பார்கள். பெரும்பாலும் இண்டர்லாக்கிங் அமைப்பில் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவுதான். உறுதியாக அதை சொல்ல முடியாது” என்றார்.

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ராகுல் காந்தி கூறியது என்ன?

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி

மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து, கோரமான பாலசோர் ரயில் விபத்தை நினைவுபடுத்துவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தன் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், “பல்வேறு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து எந்த படிப்பிணையையும் பெறவில்லை. அதற்கான பொறுப்பேற்பு உயர்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். அரசு விழித்துக்கொள்வதற்கு முன்பு எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என பதிவிட்டுள்ளார்.

2 ரயில்கள் மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. அங்கேயுள்ள லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பின்பிறமாக மோதியது. இதில், 12 அல்லது 13 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே கூறியது. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ரயில் பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். ரயிலில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடக்கின்றன

ரயில்வே உயர் அதிகாரிகளும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவரைப்பேட்டை அருகே உள்ள மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி பொன்னேரி ரயில்வே ஊழியர்களும், சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் இருப்புப் பாதை போலீசாரும் விரைந்தனர்.

விபத்து நேரிட்ட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பெட்டிகளின் இடிபாடுகள்முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே உயிரிழப்பு ஏதேனும் உள்ளதா என்ற விவரம் தெரிய வரும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகளின் நிலை என்ன?

ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்கள் சிறப்பு ரயிலில் இன்று அதிகாலை தார்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து பொன்னேரிக்கு பேருந்து வழியாக அழைத்து வரப்பட்ட பயணிகள், பிறகு அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிறப்பு மின்சார ரயில்களில் அழைத்து வரப்பட்டனர்.

தீவிரமாகக் காயமடைந்த மூன்று பயணிகள் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிதளவு காயங்களை எதிர்கொண்ட பயணிகளுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை அருகே ரயில் விபத்து - ஒரு பெட்டியில் தீ, 13 பெட்டிகள் தடம் புரண்டன - 2 ரயில்கள் மோதியது எப்படி?

பட மூலாதாரம், HANDOUT

மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கிய பிறகு, அதிகாலை 04:45 மணிக்கு சிறப்பு ரயிலில் தார்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேட்டியளித்தார். அதில் ரயில் விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து நடந்த ரயில் தடத்தில் அடுத்த 15 மணிநேரங்களில் ரயில் போக்குவரத்து சரிசெய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

2 ரயில்களும் மோதியது எப்படி?

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் விபத்து நேரிட்டது. மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இந்த ர யில் பொன்னேரி ரயில் நிலையத்தை இரவு 8.27 மணிக்கு கடந்து சென்றது. கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பிரதான தண்டவாளத்தில் செல்லுமாறு அந்த ரயிலுக்கு கிரீன் சிக்னல் தரப்பட்டது. கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை அந்த ரயில் அடைந்ததும், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் பிரதான தண்டவாளத்திற்குப் பதிலாக அங்கிருந்து லூப் லைனுக்குள் நுழைந்துவிட்டது. சுமார் 75 கி.மீ. வேகத்தில் சென்ற பயணிகள் ரயில் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறமாக மோதியது.

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்புக் குழுவினர், உயர் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ரயிலின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சரக்கு ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது. 12-13 பெட்டிகள் தடம்புரண்டன. உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. எனினும் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள், மீட்புக் குழுவினர், உயர் அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுவிட்டனர். சிகிச்சை தேவைப்படும் நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக, அவ்வழியே ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் ரயிலில் சென்ற பயணிகள் உரிய இடத்திற்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடக்கின்றன.

பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு

“விபத்தில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து பயணிகளையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு/தண்ணீர்/சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகளோடு அவர்களை தர்பங்கா அழைத்து செல்ல சென்னையில் ஒரு புதிய ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளரின் உதவிச் செயலாளர் கணேஷ், “விபத்தில் லேசான காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலும்பு முறிவு போன்ற பலத்த காயமடைந்தவர்கள் சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகள் அனைவரும் பேருந்துகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கிருந்து, சிறப்பு ரயில் மூலம் அவர்கள் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

சென்னை அருகே ரயில் விபத்து

படக்குறிப்பு, மீட்கப்பட்ட பயணிகள் பிளாட்பாரத்தில் நிற்கின்றனர்.

ரயில் சேவைகளில் மாற்றம்

இந்த விபத்து காரணமாக வழக்கமாக இயங்கும் மற்ற ரயில்கள் திருப்பி விடப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் படி, அக்டோபர் 10ஆம் தேதி அன்று 11.35 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்பட்டு ஆலப்புழாவிற்கு செல்லும் ரயில் (13351), ரேணிகுண்டா – மேல்பாக்கம் – காட்பாடி வழியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை, சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு அந்த ரயில் வராது.

ஜபல்பூர் – மதுரை சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (02122) அக்டோபர் 10 அன்று 16.25 மணிக்கு ஜபல்பூரில் இருந்து புறப்பட்ட நிலையில், அது ரேணிகுண்டா, மேலப்பாளையம் வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு வராது.

உதவி எண்கள் அறிவிப்பு

கவரைப்பேட்டை விபத்து குறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள சென்னை மண்டல உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 044-25354151 மற்றும் 044-2435499 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.

– இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உடனுக்குடன் சேர்க்கப்படுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு