கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டும் வழக்கில் நிற்கும் தலைவர் நான் – சிறிதரன் ! on Monday, October 14, 2024
கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டும் வழக்கில் நிற்கும் தலைவர் நானே. எமது கட்சியாளர்களே எனக்கு எதிராக செயற்படுகிறார்கள் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சீறிதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (13) மாலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கட்சியின் உபதலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
என்னுடைய கட்சி இலங்கை தமிழரசு கட்சி. இந்த கட்சியை விட்டு நான் போக மாட்டேன். கட்சியை விட்டுச் செல்லும் எண்ணமோ விலகி நிற்கும் எண்ணமோ எனக்கு கிடையாது. சிலர் என்னை விலக்க நினைக்கிறார்கள்.
நான் கட்சியில் தலைவராக தெரிவு செய்யப்பட்டும் எங்களது கட்சியாளர்களாலேயே வழக்கு தொடரப்பட்டு வழக்கில் நிற்கும் தலைவர் நான். இத்தனை சவால்களுக்கும் மத்தியில்தான் தொடர்ந்தும் கட்சியில் இருக்கிறேன்.
கட்சியில் இருப்பவர்கள் அலைபாய வேண்டாம். கட்சியோடு இருங்கள். அங்கிங்கு போகவேண்டாம். நாங்கள் நாங்களாக இருக்கும்போதுதான் எங்களை தேடிய வரலாற்று வெற்றிகள் எங்களை தேடிவரும். நாங்கள் எவ்வாறு நம்பிக்கையுடன் இருக்கிறோம். உறுதியுடன் இருக்கிறோம் என்பதை வரலாறும் சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் விலகிச் சென்றால் வரலாறு எங்களை தூக்கி எறிந்துவிடும். இயற்கையும் வரலாறும் ஒருகாலமும் தவறு செய்யாது.
இயற்கை ஒருவர் இல்லை என்றால் மற்றொருவரை அந்த இடத்துக்கு கொண்டுவந்து விடும். இதுதான் இயற்கையின் வரலாறு. அண்மைக்காலத்தில் என் மீதான சேறு பூசல்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சாரப்படுத்தப்படுகிறது. அதாவது சிறிதரன் பார் பொமிற்றுக்கு கடிதம் கொடுத்தார் என்று ஜனாதிபதி தேர்தலில் இதுவே பிரச்சாரமாக இருந்தது. நான் இவற்றுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். வழக்கு தொடரவுள்ளேன். கட்சியில் உள்ளவர்களே இதையும் செய்கிறார்கள்.
இன்று இந்த நாட்டில் இடது சாரி கொள்கையை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அங்கு மாற்றம் வந்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக வத்ததல்ல. 20 வருடங்களுக்கு மேலாக வீடு வீடாக கிராமம் கிராமமாக சென்று தங்களின் அரசியலை விதைத்துள்ளார்கள்.
இந்த பாராளுமன்ற தேர்தல் ஊடாக இந்த மக்களை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என்பதை இந்த உலகம் பார்க்கப்போகிறது. தமிழர்களாகிய நாமும் பார்க்கப்போகிறோம். ஆகவே, நாங்கள் நாங்களாகத்தான் இருக்கவேண்டும்.
நாங்கள் அடையாளம் உள்ள இனம். எங்களுக்கான தேசம், மொழி, இனம், பண்பாடுகளுடன் வாழும் நாங்கள் எங்களுக்கான அடையாளத்தை இழக்கலாமா? நாங்கள் இலங்கையர்களாக மாறிவிட்டால் நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடுவோம். நாங்கள் சிங்கள மக்களை மதிக்கின்றோம். அவர்களின் பண்பாடு, கலாசாரங்களை மதிக்கின்றோம். அதே அனைத்து உரித்துகளும் எமக்கும் உண்டு. இந்த தேர்தல் மாற்றத்தை நோக்கிய தேர்தல் என்றார்.