ஐம்பது மதுபானசாலை உரிமங்கள் ரத்து!

by wp_shnn

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட ஐம்பது மதுபானசாலை உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அவை மீண்டும் வழங்கப்படுவதற்கு அல்லது இரத்து செய்யப்படுவதற்கு முன்னர் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்புகள் மூலம் பல்வேறு நபர்களுக்கு ஐம்பது மதுபானசாலை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுவருகின்றது.

மதுபானசாலை உரிமங்களைப் பெற்ற பலர் அவற்றை இரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் பக்கம் இருப்பதாக கூறும் அநுர குமார திஸாநாயக்க இன்னமும் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடாமல் வைத்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் தான் பார் பெமிட் பட்டியல் வெளிவருமோ தெரியவில்லை. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது புலனாகிறது. சிலரிடம் இருக்கிறது. சிலர் இல்லை என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

சிலர் வேறு பெயர்களில் மாற்றி வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன. பணப்பரிமாற்றங்களும் நடந்து முடிந்துவிட்டது.

தேர்தலுக்கு பின்னர் அநுர குமார திஸாநாயக்க பெயர் விபரங்களை வெளியிடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.

நீங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு என எங்கும் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதாக இருந்தால் உண்மையை வெளியிடுங்கள் என ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்