எனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கான வலுவான சக்தியாக மாற்றுவதற்காக பணியாற்றவுள்ளேன் என்றார்.
பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான சுயேட்சையாக களமிறங்கியுள்ள தரப்பினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையிலான குழுவினர் என்னை நேரில் வந்து சந்தித்தனர்.
அதன்போது, அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றமைக்கான காரணத்தையும், தங்களுடைய கொள்கை சார்ந்த பயணத்தின் நோக்கத்தினையும் வெளிப்படுத்தினார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் என்னால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தினாலேயே நான் பதவியில் இருந்து விலகினேன். இருப்பினும் நான் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுவேன்.
அதேநேரம், கட்சியில் இருந்து பலர் வெளியேறி வெவ்வேறு தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கின்ற கட்சிகளில் பலர் போட்டியிடுகின்றார்கள். இந்த நிலைமையானது எனக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
இருப்பினும் அவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியச் சிந்தனையில் உள்ள தளத்தில் பயணிப்பதால் சற்று நின்மதியாகவுள்ளது.
எவ்வாறாயினும் இந்தத் தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறாகப் போட்டியிடுகின்றவர்கள், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைக்கின்ற பயணியை நான் தேர்தலின் பின்னர் முன்னெடுக்கவுள்ளேன்.
அவ்விதமான எனது செயற்பாடானது எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தில் முக்கியமானதாக இருக்க முடியும் என்றே கருதுகின்றேன். அந்தப் பணியை நான் நிச்சயமாக தொடருவேன்.
கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிளவுகள் களையப்பட வேண்டும். கட்சியில் இருந்து வெளியேறிவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களையும் கட்சியுடன் இணைத்துப் பயணிக்க வேண்டியது அவசியமாகும். ஆகவே அதற்காக தேர்தலின் பின்னர் நிச்சயமாக செயற்படுவேன் என்றார்.