அன்று இந்தியாவை ‘வெளியேறச்’ சொன்ன மாலத்தீவு அதிபர் இன்று நட்பு பாராட்டுவது ஏன்?
- எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 7) அன்று இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மாலத்தீவு அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தற்போது அவர் இந்தியா வந்துள்ளார். சீனாவுடன் முய்சு நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்ட கருத்து, இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகளில் பல ஏற்ற தாழ்வுகள் வர வழிவகுத்தது.
முய்சுவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும், என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“மாலத்தீவின் சமூக, பொருளாதார, மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது,” என்று பிரதமர் மோதியைச் சந்தித்த பிறகு முய்சு கூறினார். “மாலத்தீவிற்கு உதவி தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் எங்களுடன் துணை நின்றுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக கொடுத்த உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக பிரதமர் மோதி, இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முய்சு கூறினார்.
அந்நியச் செலாவணிக் கையிருப்புப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மாலத்தீவுக்கு இந்தப் பயணம் சாதகமாக இருக்கும், என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மலத்தீவிற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,350 கோடி) வரையிலான நாணய பரிமாற்றத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது தவிர, 30 பில்லியன் இந்திய ரூபாய் வரையிலான (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி) நாணயப் பரிமாற்றத்திற்கும் இந்தியா ஒப்புக்கொண்டது.
இந்த நாணயப் பரிமாற்றம் (The Indian Rupee Swap), இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தமாகும். இதன்படி ஒரு நாடு மற்ற நாட்டிற்கு, வெளிநாட்டு நாணயத்தில் கடன் வழங்க ஒப்புக்கொள்கிறது. இதில், கடனை திருப்பிச் செலுத்துவது மற்றொரு நாணயத்தில் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு நிலையான தேதி மற்றும் மாற்று விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கையெழுத்தான ஒப்பந்தம்
வெளிநாட்டுச் சந்தையுடன் ஒப்பிடும்போது இத்தகைய கடன்களில் வட்டி விகிதம் சற்றுக் குறைவாக இருக்கும்.
இந்தியாவிடம் இருந்து இந்தக் கடன் பெற்ற பிறகு, மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கக்கூடும். சமீபத்திய அறிக்கையின்படி, மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது, ஒன்றரை மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான நாணயப் பரிமாற்றத்தைப் போலவே, 2021-ஆம் ஆண்டில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நாணய பரிமாற்றம் நடைபெற்றது.
அப்போது சீனா இலங்கைக்கு 10 பில்லியன் யுவான் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர் – (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,525 கோடி) கடனாக வழங்கியது. அந்த சமயம் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. இந்த நடவடிக்கையால் இலங்கை சீனாவை அதிகமாக சார்ந்திருப்பதாக பார்க்கப்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் பாடப்பிரிவின் பேராசிரியர் ஸ்வரன் சிங் இது குறித்து பிபிசியிடம் பேசினார்.
“பொருளாதார மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தவிர இரு நாடுகளும் ‘தடையற்ற வர்தக ஒப்பந்தம்’ குறித்தும் உடன்பாட்டிற்கு வந்துள்ளனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்குப் பிறகு, மாலத்தீவின் பொருளாதார நெருக்கடியின் போது ‘முதல் பதிலளிப்பவராக’ இந்தியா இருக்கும் என்பதை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார்,” என்று அவர் கூறினார்.
“கோவிட் பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகள் அல்லது குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி, இந்தியா ஒரு நல்ல அண்டை நாடாக இருந்து வந்தது,” என்று பேராசிரியர் ஸ்வரன் சிங் கூறுகிறார்.
முய்சுவின் ‘இந்தியா வெளியேறு’ கொள்கை
மாலத்தீவு அதிபர் முய்சு சீனாவுடன் நெருக்கம் காட்டுபவராகப் பெயர் பெற்றவர். மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதாக உறுதியளித்து ‘இந்தியா வெளியேறு’ என்ற கொள்கையின் உதவி கொண்டு அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
மாலத்தீவின் முந்தைய அரசாங்கங்கள் இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்த நிலையில், முய்சுவின் இந்த கொள்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.
மாலத்தீவில் இந்தியா நீண்ட காலமாக செல்வாக்குச் செலுத்தி வருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் கணிசமான பகுதியை இந்தியாவால் கண்காணிக்க முடிந்தது.
ஆனால், முய்சு சீனாவுடன் மாலத்தீவின் உறவை மேம்படுத்த விரும்பினார். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள் பின்பற்றிய பாரம்பரிய கொள்கையை மாற்ற விரும்பினார்.
மாலத்தீவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி லட்சத்தீவின் சுற்றுலாவை மேம்படுத்த விழைந்தார். முய்சு அதிபரான பிறகு, அவரது அமைச்சரவையின் இரண்டு அமைச்சர்கள், பிரதமர் மோதியைப் பற்றி தரக்குறைவான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதனால், மாலத்தீவுக்கு எதிராக இந்தியாவில் கோபம் எழுந்தது.
முய்சுவின் நிலைப்பாட்டில் மாற்றம்…
கோவிட் நோய்தொற்றுக்குப் பிறகு, இந்திய மக்கள் அதிக எண்ணிக்கையில் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவந்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகு, இந்திய மக்கள் மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை புறக்கணிக்க தொடங்கினர்.
அதிபரான பிறகு, முய்சு மாலத்தீவின் பாரம்பரியக் கொள்கைகளை உடைத்து, தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருவதற்குப் பதிலாக துருக்கி சென்றார். பின்னர் அவர் சீனாவிற்கும் சென்றார். அங்கு அவர் சீனாவுடன் வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, முய்சு மாலத்தீவில் இருக்கும் எல்லா இந்திய ராணுவ வீரர்களையும் வெளியேற்ற முடிவு செய்தார். முய்சுவின் இந்த முடிவை ஏற்று, இந்தியா தனது ராணுவ வீரர்களை மாலத்தீவில் இருந்து திரும்பப் பெற்றது.
ஆனால் மிக விரைவாகவே முய்சுவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.
மோதி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மாலத்தீவில் மோசமாகி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், முய்சு இந்தியாவைத் தனது ‘நெருங்கிய நட்பு நாடு’ என்று அழைத்து, இந்த நெருக்கடியைச் சீர்செய்ய உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஜூன் மாதம் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவுக்காக முய்சு இந்தியா வந்திருந்தார். இதற்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆகஸ்ட் மாதம் மாலத்தீவுக்குச் சென்றார்.
முய்சுவின் இந்த இந்தியப் பயணமும் இந்த பின்னனில் இருப்பதாக கருத வேண்டும். இந்த அரசுமுறைப் பயணத்தின்போது அவர் ஆக்ரா, மும்பை, பெங்களூரு ஆகிய ஊர்களுக்கும் செல்லயிருக்கிறார்.
முய்சுவின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?
முய்சு தற்போது இந்தியாவுடன் நட்பு பாராட்டும் அணுகுமுறை மாலத்தீவின் பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பேசப்படுகிறது. இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் மாலத்தீவிற்கு இழப்பு ஏற்படும் சிக்கல் மேலும் அதிகரித்து வருகிறது.
“இந்தச் பிரச்னைக்கான (இந்தியா வெளியேறு) தீர்வுகாணப்பட்டுள்ளது. இந்தியா நம்பகமான நட்பு நாடு என்பதை மாலத்தீவு உணர்ந்துள்ளது. முய்சு பிற நட்பு நாடுகளிடம் இருந்து உதவி பெற முயன்றார், ஆனால் அதில் அவர் வெற்றிபெறவில்லை,” என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் முன்னாள் வெளியுறவுத்துறை செய்தியாளர் மற்றும் ஆஸ்பென் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பக்ச்சி கூறுகிறார்.
“முய்சுவின் கருத்துகளுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. அவர் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தைத் திரும்பி பெற சொல்லும்போது, நாம் ராணுவத்தை திரும்பி பெற்றோம். இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மக்கள் சம்பந்தப்பட்டது என்பதை முய்சு உணர்ந்தார்,” என்றும் அவர் கூறினார்.
“கோவிட் நோய்தொற்றுக்கு முன்பு, மாலத்தீவில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்தியச் சுற்றுலாப் பயணிகளை விட அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது மாலத்தீவின் சுற்றுலாவில் இந்தியாதான் மிக முக்கிய பங்குவகிக்கின்றது. இது மாலத்தீவிற்கு முக்கியமாக உள்ளது,” என்று அவர் விளக்கினார்.
“இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கை மற்றும் துபாய்க்குச் செல்கிறார்கள் என்பது மாலத்தீவுக்கும் தெரியும். அங்கு அவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மாலத்தீவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்திய சுற்றுலாப் பயணிகள் இருந்தார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பது மாலத்தீவு மக்களின் விருப்பம் என்றும், அதை நிறைவேற்றி வருவதாக கடந்த வாரம் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில் முய்சு கூறியிருந்தார். மேலும் மாலத்தீவின் வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்குவகிப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோதியைச் சந்தித்த பிறகு, மாலத்தீவுக்கு அதிகமான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வருமாறு முய்சு கேட்டுக் கொண்டார்.
முய்சுவின் வருகைக்குப் பிறகு இருநாட்டு உறவுகள் எப்படி மாறும்?
முய்சுவின் இந்தியச் சுற்றுப்பயணமும், அவர் இந்தியா மீது நட்பு பாராட்டும் அணுகுமுறையும் அவர் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதில் இருந்து விலகிவிட்டார் என்று அர்த்தம் இல்லை என்றும், இந்தப் பயணம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“தேர்தலின் போது இதுபோல சூழ்நிலைகளை சிலர் உருவாக்குகின்றனர், ஆனால் அதன் பின்னர் அது நடைமுறைப்படுத்துவதில்லை. தேர்தல் முடிந்த பிறகு, அவர்கள் நடைமுறைக்கு ஏற்றது போல மாறுகின்றனர். ஆனால் மாலத்தீவு மக்கள் ‘இந்தியா வெளியேறு’ கொள்கையை விரும்பவில்லை என்பது ஆரம்பத்திலிருந்தே தெரிந்தது,” என்று முன்னாள் தூதரக அதிகாரி வீணா சிக்ரி கூறுகிறார்.
“இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இது இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் கொள்கையை மாற்றப் போவதில்லை,” என்று அவர் கூறினார்.
“இந்தக் கொள்கை சீனாவுக்குப் பொருந்தாது. இந்தச் சந்திப்பில் சீனா விவகாரமும் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதையும் செய்யமாட்டேன் என்று முய்சு கூறியுள்ளார். இது அவரது மிக முக்கியமான கருத்தாக இருக்கிறது,” என்று வீணா சிக்ரி கூறுகிறார்.
மாலத்தீவு விவகாரத்தை இந்தியா கையாண்ட விதம், மாலத்தீவு மற்ற அண்டை நாடுகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகப் பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
“இந்தியா தனது அண்டை நாடுகளை மேம்படுத்த எவ்வாறு உதவும் என்ற நம்பிக்கையை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இது உருவாக்குகிறது. சீனா குறித்து இந்தியா தனது அண்டை நாடுகளுடன் எவ்வாறு ஈடுபடுகிறது என்பது பற்றிய பார்வையையும் இது உருவாக்குகின்றது,” என்று பேராசிரியர் ஸ்வரன் சிங் கூறுகிறார்.
“இருப்பினும், கலாசார உறவுகள் மற்றும் புலம்பெயர் சமூகங்களை இணைக்கும் மோதியின் வெளியுறவுக் கொள்கையின் அம்சம் இதில் காணாமல் போனது.” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.