ரஷ்யா தனது ‘அதிரகசிய’ நவீன ட்ரோனை தானே சுட்டு வீழ்த்தியதா? யுக்ரேன் வானில் என்ன நடந்தது?
- எழுதியவர், அப்துஜலீல் அப்துரசுலோவ்
- பதவி, பிபிசி செய்திகள், கியவ்
கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே.
ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள் மற்ற பாதையை நோக்கி விரைந்தது. அவை ஒன்றையொன்று கடந்த போது ஒரு பிரகாசமான ஆரஞ்சு வெளிச்சம் வானில் ஒளிர்ந்தது.
பலரும் நினைத்தது போல, போர் நடக்கும் இடத்தின் முன்களத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு ரஷ்யப் போர் விமானம் மற்றொரு போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா? அல்லது ஒரு யுக்ரேனிய ஜெட் விமானம் ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா?
என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், யுக்ரேனியர்கள் சிதறி கிடந்த பாகங்களை ஆராய்ந்த போது, அவற்றிலிருந்து ரஷ்யாவின் புதிய ஆயுதமான எஸ் -70 ரகசிய ட்ரோன் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இது சாதாரண ட்ரோன் அல்ல. ஓகோட்னிக் (வேட்டைக்காரன்) எனப் பெயரிடப்பட்ட இந்த கனரக, ஆளில்லா வாகனம், ஒரு போர் விமானம் அளவுக்குப் பெரியது, ஆனால் இதில் ஓட்டுநர் அறை (காக்பிட்) இருக்காது. இதைக் கண்டறிவது மிகவும் கடினம். இதை வடிவமைத்தவர்கள், இதற்கு ஈடாக உலகில் வேறேதும் இல்லை என்று கூறுகிறார்கள்.
இவையனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த ட்ரோன் வழிதவறிச் சென்றது. வீடியோவில் காணப்பட்ட இரண்டாவது தடம் ரஷ்ய Su-57 ஜெட் விமானத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. அது ரகசிய ட்ரோனை வெளிப்படையாகத் துரத்துகிறது.
என்ன நடந்தது?
ரஷ்யாவின் Su-57 போர் விமானம் வழிதவறிச் சென்ற ட்ரோனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம். ஆனால் அவை இரண்டும் யுக்ரேனிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்து கொண்டிருந்ததால், எதிரிகளின் கைகளில் சிக்குவதைத் தடுக்க ஓகோட்னிக் ட்ரோனை அழிக்க முடிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கோஸ்ட்யாண்டினிவ்காவிற்கு மேல், வானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ரஷ்யாவோ, யுக்ரேனோ இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், யுக்ரேனின் மின்னணுப் போர் கட்டமைப்புகள் குறுக்கிட்டதன் காரணமாக, ரஷ்யப் படையினர் தங்கள் ட்ரோன் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஓகோட்னிக் ட்ரோனின் சிறப்பு என்ன?
இந்தப் போரில் பல ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரஷ்யாவின் S-70 ட்ரோன் போன்று மற்றொன்றைப் பார்ப்பது அரிது.
இது 20,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டது. 6,000 கி.மீ வரை செல்லக் கூடியது.
அம்பு வடிவில் இருக்கும் இந்த ட்ரோன், 10 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட மற்றொரு ரகசிய போர் ட்ரோனான அமெரிக்காவின் X-47B ட்ரோனைப் போலவே உள்ளது.
ஓகோட்னிக் ட்ரோன் தரைவழி மற்றும் வான்வழி இலக்குகளைத் தாக்குவதற்கும், உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
இது ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை Su-57 போர் விமானங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 2012-ஆம் ஆண்டு முதல் வடிவமைக்கப்பட்டு வந்தது. இது 2019-இல் முதலில் பிரயோகிக்கப்பட்டது.
ஆனால், கடந்த வார இறுதி வரை யுக்ரேனில் ரஷ்யா நடத்திவரும் இரண்டரை வருடப் போரில், இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த ஆண்டின் துவக்கத்தில், யுக்ரேனைத் தாக்கும் ஏவுதளங்களில் ஒன்றான தெற்கு ரஷ்யாவில் உள்ள அக்துபின்ஸ்க் விமானநிலையத்தில் இது காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, கோஸ்ட்யான்டினிவ்கா வானில் நடந்தது, ரஷ்யா தனது புதிய ஆயுதத்தைப் போர்ச் சூழ்நிலைகளில் சோதித்துப் பார்க்கும் முயற்சிகளில் ஒன்றாக இருக்கலாம்.
விமானம் விழுந்த இடத்தில், ரஷ்யாவின் பிரபலமான நீண்ட தூர டி-30 கிளைடர் குண்டு ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ட்ரோன் உற்பத்தி தடைபடுமா?
இந்தக் கொடிய ஆயுதங்கள் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மூலம் இயங்குகின்றன.
ஆனால், ஓகோட்னிக் ட்ரோன் ஏன் ஒரு Su-57 ஜெட் விமானத்துடன் பறந்து கொண்டிருந்தது?
யுக்ரேனின் கியவ் நகரில் இருக்கும் விமானப் போக்குவரத்து நிபுணர் அனடோலி க்ராப்சின்ஸ்கி, ‘தரை தளத்தில் இருந்து போர் விமானம் தங்கள் செயல்பாட்டின் பரப்பை அதிகரிக்க ட்ரோனுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பியிருக்கலாம்’ என்கிறார்.
இந்த ரகசிய ட்ரோனின் தோல்வி ரஷ்ய ராணுவத்திற்கு ஒரு பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. இந்த ட்ரோன்களின் உற்பத்தி இந்த ஆண்டு துவங்கப்படவிருந்தது. ஆனால் இந்த ஆளில்லா விமானம் அதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இந்த S-70 ட்ரோனின் நான்கு மாதிரிகள் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. யுக்ரேன் மீது வானத்தில் அழிக்கப்பட்டது அந்த நான்கில் மிகவும் மேம்பட்ட ஒன்றாக இருக்கலாம்.
ஓகோட்னிக் உண்மையிலேயே ‘அதிரகசிய’ ட்ரோனா?
ஓகோட்னிக் அழிக்கப்பட்டிருந்தாலும், யுக்ரேனியப் படைகள் அதன் சிதிலங்களில் இருந்து அதனைப் பற்றிய முக்கியமான தகவல்களைச் சேகரிக்க முடியும்.
இதுபற்றிப் பேசிய அனடோலி க்ராப்சிஸ்கி, “இந்த ட்ரோன் இலக்குகளைக் கண்டறிவதற்கான சொந்த ரேடார்களைக் கொண்டிருக்கிறதா அல்லது குண்டுகள் எங்கு தாக்க வேண்டும் என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் அறியலாம்,” என்கிறார்.
புகைப்படங்களை ஆராயும் போதே, ட்ரோனின் ரகசியத் தாக்குதல் திறன்கள் குறைவாகவே உள்ளன என்பது தெளிவாகிறது என்று அவர் நம்புகிறார்.
இந்த ட்ரோனின் என்ஜின் முனை வட்ட வடிவத்தில் இருப்பதால், அதை ரேடார் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்கிறார் அவர். பெரும்பாலும் அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த விமானத்தில் உள்ள பல ரிவெட்டுகளுக்கும் (ஆணிகள்) இது பொருந்தும்.
இந்த சிதைவுகள் யுக்ரேனியப் பொறியாளர்களால் நுட்பமாக ஆராயப்பட்டு, அந்தத் தகவல்கள் யுக்ரேனின் மேற்கத்தியக் கூட்டணி நாடுகளுடன் பகிரப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சம்பவம் ரஷ்யா தனது பெரும் மனித வளம், மற்றும் வழக்கமான ஆயுதங்களை நம்பியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
அவர்கள் போரிடுவதற்கான புதிய, புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். இப்போது தோல்வி அடைந்திருப்பது அடுத்த முறை வெற்றி பெறலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு