சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை ‘டிஜிட்டல்’ திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
அதன் போது, உள்ளூராட்சிமன்றங்களுக்குச் சொந்தமான சந்தைகளில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு 10 சதவீதக் கழிவு அறவிடப்படுவது தொடர்பான விவகாரம் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் ஆராயப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த கூட்டத்தில் இது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை தொடர்பாக பரிந்துகைகுமாறு கோரியதையும் நினைவுபடுத்தினார்.
கடந்த 5 ஆண்டுகளாக சந்தையை வழங்கிய குத்தகையின் சராசரி பெறுமதியைக் கணிப்பிட்டு அந்தத் தொகைக்கு விவசாய சம்மேளனங்களுக்கு சந்தை குத்தகையை ஆளுநரின் விசேட அனுமதியுடன் வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
விவசாய சம்மேளனங்களே சந்தையை குத்தகை எடுத்தால் இத்தகைய கழிவு பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழாது என்று உள்ளூராட்சிமன்றங்களின் செயலர்கள் குறிப்பிட்டனர்.
இல்லாவிடின், விவசாய சம்மேளனங்களின் பிரதிநிதிகள் சந்தைகளில் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அடுத்த ஆண்டுக்காக குத்தகை வழங்குவதற்கு முன்னர் தொடர்புடைய விவசாய சம்மேளனங்கள் இதில் எதைத் தெரிந்தெடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்த முடியும் என உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்கள் தெரிவித்தனர்.