இலங்கை-இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இந்திய மீனவ பிரதிநிதிகள் இலங்கை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை, இரு நாட்டு மீனவ உறவு தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
சந்திப்பில், இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழுவினரும், இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணி பிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னராசா (யாழ்ப்பாணம்), வர்ண குலசிங்கம் (யாழ்ப்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
முன்னதாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.
எல்லை தாண்டியும், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தியும் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை அவர்கள் பார்வையிட்டதுடன், அவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.