பொலிவியாவில் மேற்கு போடோசி பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்துக்குள்ளானதில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 39 பேர் காயமடைந்ததனர் என்று காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
உயுனி மற்றும் கோல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
காயமடைந்த 39 பேரும் உயுனி நகரில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, பேருந்துகளில் ஒன்று, வேகம் காரணமாக எதிரே வந்த பாதையில் அத்துமீறி நுழைந்ததே மோதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று பொலிவிய அரசாங்க அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான திருவிழா கொண்டாட்டங்களில் ஒன்றான ஒருரோவை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது.
கடந்த மாதம் ஒரு மலைப்பாங்கான சாலையில் இருந்து 800 மீ (2,600 அடி) உயரத்தில் பேருந்து கவிழ்ந்து 31 பேர் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது .