இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார்.
இதன்போது சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் போன்றவை கடத்தல் நகைகள் எனக்கூறி பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த 15ம் திகதி பிறப்பித்த உத்தரவில், ‘பெண்களுக்கு தாலி மிக முக்கியமானது. தாலி அணிந்து வருவது கடத்தல் அல்ல. எனவே, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தாலிக் கொடியை, இலங்கை பெண்ணுக்கு திருப்பித் தர வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பறிமுதல் செய்த தாலிக்கொடியை அப்பெண்ணிடம், சென்னை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.