ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு அந்த அந்த நாடுகளே விமான பயண சீட்டுக்களை வழங்கியது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரையில் 1.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி எவ்வாறு குறைந்த விலையில் மூன்று நாடுகளுக்கு சென்றார், விமானத்தில் தொங்கிக் கொண்டு சென்றாரா என்று ஒருசிலர் கேள்விக்கேட்கிறார்கள்.
ஆனால் 3,572 மில்லியன் ரூபாய் செலவழித்த மஹிந்த ராஜபக்ஷ பற்றி எவரும் கேள்வியெழுப்பவில்லை. ஏனெனில் அனைவரும் நண்பர்களே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு முதலாவதாக அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
விமான பயணச்சீட்டு உட்பட இதர செலவுகளுக்காக ஜனாதிபதி செயலகம் மொத்தமாக 12 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவழித்துள்ளது.
அதேபோல் ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றார். விமானபயணச் சீட்டுக்கான செலவை சீன அரசாங்கமே பொறுப்பேற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 3 இலட்சத்து 86 ஆயிரம் ரூபாவை செலவழித்தது.
அதேபோல் இந்த மாதம் துபாய்க்கு சென்றிருந்தார். அதற்கான விமான பயணச்சீட்டுக்கான செலவை துபாய் அரசாங்கம் ஏற்றிருந்தது. ஜனாதிபதி செயலகம் 2 இலட்சத்து 97,791 ரூபாவையே செலவு செய்தது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களை போன்று குடும்ப உறுப்பினர்களுடனும், பரிவாரங்களுடனும் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.
இவ்வாறான விஜயத்தின் போது நாள் கொடுப்பனவு என்றதொரு தொகை கிடைக்கப்பெறும். சீன விஜயத்தின் போது கிடைக்கப்பெற்ற 2,055 டொலரையும், துபாய் விஜயத்தின் போது கிடைக்கப்பெற்ற 960 டொலரையும் ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கிடைக்கப்பெற்ற நாள் கொடுப்பனவு டொலரை ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைத்தாரா என்பதை தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆராய வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து, அட்டைப்பூச்சிகளை போன்று வாழ்ந்தவர்கள் ஜனாதிபதியின் செலவு குறைப்புக்களை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இவர்களின் அரசியல் கலாசாரம் அவ்வாறானதே என்றார்.