சமூக வலைத்தளம் உள்ளிட்ட இணையத்தளங்களில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு இனி விரைவான தீர்வை வடக்கு மாகாண மக்கள் பெற முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்திற்கான கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பதில் பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் பணம் சார்ந்த பிரச்சினைகள், கணக்குகளை முடக்குதல், சமூக வலைத்தள அவதூறுகள், சமூக வலைத்தளங்கள் ஊடான பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட முறைப்பாடுகளை கொழும்புக்கு சென்று முறையிட்டு அதற்கான தீர்வுகளை பெற நீண்ட காலதாமதம் ஆகும்.
ஆகவே வடபகுதி மக்களின் சிரமத்தை தவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலேயே இந்த கணிணி குற்றப் புலனாய்வுப் பிரிவு கிளை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் மாகாண மட்டத்திலிருந்த குறித்த சேவை தற்போது இனி வரும் காலங்களில் மாவட்ட மட்டங்களுக்கு விரிவாக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி இணைய குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் – என்றார்.
குறித்த நிகழ்வில் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.