இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் போது அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.
1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படைக்கு எதிராகக் குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
“உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” , “புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.” ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988 மார்ச் 19ஆம் திகதி அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அன்னை பூபதி நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன.
உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அன்னை பூபதி உயிர் நீத்தார்.