முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் கேணல் கிட்டு நினைவுப்பூங்காவில் இன்று(17) ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சந்திரசேகரன் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், கடந்த காலங்களில், ஆட்கடத்தல்,ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய கொலையாளி அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவரையும் பழிவாங்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு கிடையாது.ஆனால் பொதுமக்களின் சொத்துக்களை திருடி மோசடி செய்திருந்தால் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் கடப்பாடு எங்களுடையது. அதை நாங்கள் செய்கின்றோம்.அவர்களுக்கு தண்டனை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது நீதிமன்றமாகும் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.