இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்தின் பிணையில் நிற்பவர்களே. களவுகள் செய்து நீதவான் நீதிமன்ற பிணையில் இருப்பவர்கள் தற்போது வேட்பாளராக நிற்கிறார்கள்.இவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போன்றவர்களே தேசிய மக்கள் சக்தி என்பதை அவர்கள் திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறார்கள்.
சைக்கிள் ஓடும் போது கொஞ்ச நேரம் உலக்கி விட்டு அதன் பின்னர் உலக்காமல் செல்வர். இதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் உலக்கிய வேலைத்திட்டங்களில் அப்படியே இந்த அரசாங்கமும் போகின்றது. பொருளாதார கொள்கையிலும் அது தான் நடக்கிறது.
சர்வதேச நாணய நிதிய பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது என்ற தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை பொருளாதாரக் கொள்கையை மீறி கடந்த ரணில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல குறைகளை தேசிய மக்கள் சக்தியினர் சுட்டிக்காட்டினார்கள். அந்த குறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இன்று அந்த குறைகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை.
அதனால் தான் ரணில் விக்ரமசிங்க இது எல்போர்ட் அரசாங்கம் என்றும் வாகனம் ஓட்ட தெரியாமல் பழகுகிறார்கள் என்றும் சொன்னார்.
எமது பக்கம் பார்த்தால் உள்ளூராட்சி சபைகளை முன்னர் நிர்வகித்த அனுபவமிக்கவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் எல்போர்ட் போட்டு கொண்டு பழக ஆரம்பிப்பவர்கள் அல்ல. இந்த எல்போர்ட் பற்றி தெரிய வேண்டும் என்று சொன்னால் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பார்த்தால் தெரியும்.
ஒரு படித்த பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர் வாயை திறப்பதில்லை. அவர் ஒருமுறை தவறி வாயைத் திறந்து நாம் சொன்னால் அரசாங்கம் கேட்காது என்று உண்மையை சொன்னார். அதன் பிறகு அவர் மூச்சு கூட விடுவது கிடையாது.
மற்ற இருவரும் இனித்தான் கதைக்க பேச பழக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சபையில் என்ன பேசுவது என்பது தெரியாது இருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரம் செய்ய தெரியாது என்பது வேறு விஷயம். ஆனால் மக்களுடன் கதைக்கவே தெரியாமல் இருக்கிறார்கள். முறையாக படிக்காதவர்கள் கூட மக்களுடன் சிறப்பாக பழகுவார்கள் ஆனால் இங்கு அப்படியல்ல. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது மக்களுக்கும் புரியவில்லை. அவர்களுக்கும் புரியவில்லை.
ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது அது யாழ்ப்பாண மக்களுக்கு கண்கூடாக தெரிகிறது.
நாட்டிலேயே யாழ்ப்பாணம் தான் படிப்புக்கு பெயர் போனது. படித்தவர்களை எல்லாம் கொண்ட யாழ்ப்பாணத்திலே பெருமையோடு பேசிக் கொண்டிருந்த நாங்கள் எங்களுடைய மக்கள் வெட்கப்பட்டு போய் இப்படியான பிரதிநிதிகள் எல்லாம் எங்கள் சார்பாக யாழ்ப்பாண பிரதிநிதிகள் என்ற பெயருடன் செல்கிறார்கள்.
பாரிய இழுக்கு நடந்துவிட்டது. நடந்தாலும் அதை உணர்ந்தவுடன் அதனை திருத்தி அமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் உடனடியாகவே இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கிடைத்துள்ளது.
எல்போர்ட் போட்டு கொண்டு செல்பவர்கள் சித்தி பெற்று விட்டார்களா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் சொல்ல வேண்டும்.
விசேடமாக யாழ்ப்பாண மக்கள் சொல்ல வேண்டும்.உள்ளூராட்சி தேர்தலில் வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தல் பத்து தரம் யோசித்தே பணம் வழங்குவோம் என்று ஜனாதிபதி சொல்கிறார். ஏன் அவர் யோசிக்க வேண்டும். நாம் ஏதாவது ஊழல் செய்தோமா? இலங்கை தமிழ் அரசுக் கட்சி நிர்வாகம் செய்த எந்த சபையாவது ஊழலுடன் சம்பந்தப்பட்டதா?
நீங்கள் கொண்டு வந்த சபாநாயகர் போல் அல்லவே நாம். இன்று வரைக்கும் அவர் தனது கல்வி தகைமையை நிரூபிக்கவில்லை. பொய்யான பட்டத்தை தனக்கு சூட்டி சபாநாயகர் கதிரையில் அமர்ந்துவிட்டு அது சவாலுக்கு உட்படுத்தப்பட்ட உடனேயே ஐயையோ என்று சொல்லி பதவி விலகி விட்டார். ஆறு நாட்களில் அவர் தனது கல்வித் தகமை நிரூபிப்பார் என யோசித்தேன். ஆனால் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது இதுவரை எதுவும் நடக்கவில்லை யார் ஊழல்வாதி என நான் ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்கின்றேன்.
மக்களுக்கு பொய் சொல்லி பொய்யான பட்டப்படிப்பை முடித்ததாக சொல்லி தன்னை அறிமுகப்படுத்தி விட்டு பதவி விலகிய சபாநாயகர் ஊழல்வாதியா? அல்லது காலாகாலமாக எங்களுடைய சபைகளை ஒழுங்காக எந்தவித ஊழலுக்கும் இடமாளிக்காமல் நிர்வாகித்த நாங்கள் ஊழல்வாதியா?
இன்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர் நீதிமன்றத்தின் பிணையில் நிற்பவர்களே. களவுகள் செய்து நீதவான் நீதிமன்ற பிணையில் இருப்பவர்கள் தற்போது வேட்பாளராக நிற்கிறார்கள்.இவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எங்களுக்கு பிரசங்கம் செய்கிறார்.
பிரதமர் இங்கே வந்த போது கோயில் வளாகத்தில் தேர்தல் பரப்பரை கூட்டம் நடக்கிறது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்த போது தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் போனார்கள். போனவர்களை பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளேயே அனுமதிக்கவில்லை.
தேர்தல் ஆணைக்குழு ஒன்றை அரசியலமைப்பிலே நிறுத்தி உங்களுக்கு இத்தனை அதிகாரங்களை கொடுத்து வைத்திருக்கிறோம். தேர்தல் ஆணைக்குழுவுக்கு முதுகெலும்பு இருந்தால் உடனடியாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அதிகாரம் இருக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் காவல் படை பொலிஸ் திணைக்களம் முழுவதும் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் வருகின்றது என்று சட்டம் சொல்கிறது.
அரசியலமைப்பு சொல்கிறது. அந்த அதிகாரத்தையும் பாவிக்காமல் சுயாதீன ஆணைகுழு என்ற பெயரையும் சூட்டி வைத்துக் கொண்டு எந்த வித சுயாதீனமும் கிடையாது. மிகமுறையற்ற விதத்திலே இந்த செயற்பாடுகள் நடக்கிறது. இதை தட்டிக் கேட்க அவர்களுக்கு முடியவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் இனங்கான இரண்டு வருடம் தேவைப்பட்டது. இவர்களை இனங்கானவும் இரண்டு வருடம் தேவைப்படும் என யோசித்தோம். ஆனால் ஆறு மாதத்திலேயே இவர்களின் சிவப்பு சாயம் வெளுத்து விட்டது.
ஏனைய தமிழ் கட்சிகளை நாங்கள் விமர்சிப்பதில்லை. நாங்கள்தான் பிரதான கட்சி. பெரிய கட்சி. வடக்கிலும் கிழக்கிலும் சகல தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து ஒரு பிரதிநிதியாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட கட்சி. எங்களுடைய கட்சி வேறெந்த தமிழ் கட்சியும் அவ்வாறு கிடையாது.
பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது இலங்கை தமிழ் அரசுக் கட்சி.
இந்த உதிரித் தமிழ் கட்சிகளை நாங்கள் விமர்சிப்பது கிடையாது ஆனால் அவர்கள் எங்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள். சுமந்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள். நான் வேட்பாளர்கள் கூட கிடையாது.
இந்த இனத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை எதிர்கொள்வதற்கு நியாயமான முறையில் அந்த ஆபத்து எங்கே என்று வருகிறது என்பது உங்களுக்கும் தெரியும். அவர்களை விமர்சியுங்கள்.
இந்த அரசாங்கம் கோட்டபாய அரசாங்கம் போல விரைவில் துரத்தி அடிக்கப்படும். அது முழு நாட்டுக்குமானது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் இப்போதே செய்ய வேண்டும்.
எங்களது உள்ளூர் அதிகாரங்களை கூட மத்திய அரசை ஆளும் கட்சியிடம் கொடுத்தால் அதன் பிறகு எந்த முகத்தோடு நாம் சமஷ்டி கேட்பது. கேவலம் உள்ளூர் அதிகார சபை ஆட்சியை கூட எங்கள் மக்கள் மத்திய அரசாங்கத்தில் இருக்கிற கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பிறகு எங்களுடைய நிலைமை என்ன? எமது அரசியல் நிலைப்பாட்டிற்கு என்ன சொல்வது? இந்த ஆபத்தைத்தான் மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
சமஷ்டி தீர்வை சமட்டி சமட்டி என சொல்லி அந்த தீர்வையும் எமது கட்சியையும் பழித்தவர்களும் கேவலப்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் இன்று சமஸ்டி என்று சொல்கிறார்கள். நல்லது தானே. அதை நாம் விமர்சிக்கவில்லையே.
பாராளுமன்ற தேர்தலில் நடந்த அசம்பாவிதத்தை போக்க இந்த தருணத்தை நழுவ கூட கூடாது. அதை எமது மக்கள் செய்ய வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் எந்த ஐயப்பாட்டுக்கும் இடமில்லை நாங்கள் முற்று முழுதாக ஒற்றையாட்சியை நிராகரிப்பவர்கள் சமஸ்டி ஆட்சி முறை வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்து வெல்லச் செய்ய வேண்டும். அதனை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது – என்றார்.