முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
நேற்றைய தினம் வடமாகாணத்தில் கடந்த 15 வருடங்களாக வேருன்றியுள்ள வடமாகாணத்தை சாரத ஒரு அமைச்சர் , இராமலிங்கம் சந்திரசேகரன் தேர்தல் பிரச்சார வேலையில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவிற்கு சென்றிருந்தார்.
முல்லைத்தீவிலே கேப்பாபிலவிற்கு சென்று கடற்தொழில் அமைச்சர் என்ற வகையிலே மீன்பிடி அமைச்சர் என்ற வகையிலே,அவர் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்ள விரும்பினார்.
அவர் கேப்பாபிலவிற்கு சென்று நந்திக்கடலை அடைவதற்கான பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு தருணத்திலே, அவர் அங்குள்ள மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மக்களை சந்தித்துள்ளார்.
அங்குள்ள மீனவர்கள் நந்திக்கடலில்தான் தொழிலில் ஈடுபடுபவர்கள், உங்களிற்கு தெரியும், நந்திக்கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு நிலையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
அவர் அங்கு சென்று அங்குள்ள மீன்பிடிசங்க தலைவரை சந்திக்க சென்று அவருடைய வீட்டிற்கு வெளியே நின்று அவரை கூப்பிட்டிருக்கின்றார்.அப்போது அவர் செபஸ்;தியாம்பிள்ளை சுகிர்ந்தன் வீட்டிற்கு வெளியே வந்து, அவருடைய ஏமாற்றத்தை, பொதுவாக இன்றைக்கு இருகக்கூடிய தங்களுடைய மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றுமுழுதாக கைவிடப்பட்டு, அவர்கள் அனாதைகளாக இருக்கின்ற சூழலிலே அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
இதற்கு முதலும் டக்ளஸ் ராஜிதசேனரட்ண உட்பட பலர் வந்தார்கள்,வந்து போவினம் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருக்கின்றார்.
எத்தனையோ தடவை நாங்கள் சொல்லியும் எதுவும் நடைபெறவில்லை உங்களுடைய வருகையும் அந்த அடிப்படையில்தான் இருக்கும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.
எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றுதன்னுடைய மனதிற்குள் இருக்கின்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தொடர்ந்தும் அமைச்சர் சந்திரசேகரன் கதைத்துக்கொண்டிருக்கவே சுகிந்தன் நந்திக்கடலிற்கு சென்று நிலைமைகளை பார்ப்போம் அப்போதுதான உங்களிற்கு விளங்கும் என தெரிவித்து அவர்களை நந்திக்கடலை நோக்கி கூட்டிச்செல்ல வெளிக்கிட்டிருக்கின்றார்.
அந்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனைதான் அவர் அவர்களிற்கு சுட்டிக்காட்ட விரும்பினவர்.வாகனம் செல்ல முடியாது இதனால்தான் சந்திரசேகரன் வாகனத்தை விட்டு இறங்கி,சென்று அவரை சந்திக்கவேண்டிய நிலைமை உருவானது.
நாங்கள் தொழில் செய்வதற்கு ஒவ்வொரு நாளும் இந்த வீதிவழியாகத்தான் செல்லவேண்டும், இந்த வீதியை திருத்தி தருமாறு நாங்கள் எத்தனையோ முறை கேட்டிருக்கின்றோம்.ஆனால் செய்து தரவில்லை என ஆதங்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் இராமலிங்கம் சந்திரசேகரனின் கையாட்கள் அவரை தாக்கியுள்ளனர், மோசமாக தாக்கியுள்ளனர்.அவர் இன்றும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றார், பொலிஸாருக்கு தெரிவிப்பதோ இல்லையோ என்ற அச்சத்தில் இருக்கின்றார்.நேற்று அவர்கள் நடந்துகொண்ட விதத்தினால் அவர் பயந்துபோயுள்ளார்.
நாங்கள் இது குறித்து அறிந்ததும் அவருடன் தொடர்புகொண்டு இந்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளோம்.
இதனை நீங்கள் வெளிக்கொண்டுவந்தே ஆகவேண்டும் என நாங்கள் அவருக்கு தெளிவாக தெரிவித்திருக்கின்றோம்.
ஏனென்றால் இதனை வெளியில் கொண்டுவருவதன் மூலம்தான் உங்களின் பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்தலாம் என தெரிவித்தோம்,
எந்தளவிற்கு இது மக்களிடம் போய்சேருதோ எந்தளவிற்கு இது சர்வதேச சமூகத்திடம் போய்சேருகின்றதோ,எந்தளவிற்கு இது மனித உரிமைகளை ஆய்வு செய்கின்ற தரப்புகளிடம் போய்சேருகின்றதோ அந்தளவிற்கு பாதுகாப்பாகயிருக்குமே தவிர அமைதியாக இருந்தால் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என கருதவேண்டாம் என தெரிவித்தோம்.