Home யாழ்ப்பாணம் யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி

யாழில். 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி

by ilankai

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவேறும் தருவாயில் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொருத்தவரை 17 உள்ளூராட்சி சபைகளுக்காக 243 வட்டாரங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 519 உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, மூன்று நகர சபை, பதின்மூன்று பிரதேச சபை என பதினேழு உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்பு செயற்பாடுகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் பூரணப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 292 அஞ்சல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. அதற்காக 292 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கப்பட்ட 21 ஆயிரத்து 64 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கிறது. 

இந்த வாக்களிப்பு செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்டம் 28 வலயங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குப் பொறுப்பாக வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்ததாக மேலும் 240 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என மேலும் தெரிவித்தார். 

Related Articles