கனடா நாட்டிற்கு செல்லும் தனது கனவு நிறைவேறாத நிலையில், யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அருகில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் காணாமல் போன நிலையில் , இளைஞனின் சகோதரன் இளைஞனை தேடி வந்த நிலையில் , நேற்றைய தினம் ஆரியகுளத்திற்கு அருகில் இளைஞனின் முச்சக்கர வண்டி காணப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவ்விடத்திற்கு சென்று , இளைஞனை தேடிய போது , அருகில் இருந்த காணிக்குள் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மரண விசாரணையின் போது, உயிரிழந்த இளைஞன் கனடா நாட்டிற்கு முகவர் ஊடாக செல்வதற்கு முயற்சித்து வந்ததாகவும் , அதற்காக சுமார் 25 இலட்ச ரூபாய் வரையில் சேமித்த நிலையில் , மேலதிகமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்பட்டமையால் , மிகுந்த மனவுளைச்சலில் இருந்தார் என்றும் , அதனாலயே தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.