ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி வடகிழக்கில் களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ளனர். அவர்களுடைய சிந்தனை என்னவென்றால் தாங்கள் சபைகளை கைப்பற்ற வேண்டும். வடக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெற வேண்டும் என்பது அவர்களது நோக்கம். நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் எவவாறு அதிக ஆசனங்களைப் பெற்றோமோ அதேபோல் சபைகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள்.
பிமல் ரத்நாயக்கா அவர்கள் ஜனாதிபதியின் பேச்சை விமர்சிக்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதை இல்லை எனக் கூறுகின்றார். ஆகவே, ஒட்டுமொத்தமாக எல்ல சபைகளையும் பிடித்து விட்டால் தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அருகதை இல்லை என சொல்லி விடுவார்கள். அதனை இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்களெனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.