அண்மையில் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் அனுர அரசு தொடர்ந்தும் திருட்டு மௌனம் காத்துவருகின்றது
இந்நிலையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும், சில தகவல்களை வெளியிட இரு தரப்பினரின் ஒப்புதல் தேவைப்படுவதால் சிறிது காலம் எடுக்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்;.
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் அனுமதிக்கப்படாது என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும், அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என தெரிவித்தார்.
அத்துடன் சட்டமா அதிபரின் ஒப்புதலுடனும், தொடர்புடைய அமைச்சகங்களுடன் விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒப்பந்தங்கள் தொடர்பான சர்ச்சைகள் மத்தியில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நேற்று(22) ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவும் இலங்கையும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்காக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.