இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசரின் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் ,
இறைவன் இவரது ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாற்றியை அளிக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். போப் பிரான்சிசை அறியாதவர்கள் யாரும் கிடையாது. ஆர்ஜென்டினா நாட்டை சேர்ந்த அவர் தென்னமெரிக்க நாட்டின் முதலாவது திருத்தந்தையாக தெரிவுசெய்யப்பட்டார். தனது பணிவாழ்வை அவர் வித்தாயாசமான விதத்தில் ஆற்றியமை நமக்குத் தெரியும்.
அவற்றுள், அநேகமாக புதிய திருத்தந்தையர்கள் தெரிவுசெய்யப்பட்டவுடன், வத்திக்கான் சதுக்கத்திற்கு வந்து அங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களை ஆசிர்வதிப்பார்கள். ஆனால் திருத்தந்தை பிரான்சிஸ் தான் திருத்தந்தையாக தெரிவுசெய்யப்படவுடன் குறித்த சதுக்கத்தில் வந்து மக்களை ஆசீர்வதிக்கவில்லை. மாறாக மக்களை அவர் பார்த்து நீங்கள் என்னை ஆசீர்வதியுங்கள் பின்னர் நான் உங்களை ஆசிர்வதிக்கிறேன் என்று தலை வணங்கி மக்களின் ஆசீரைப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு மக்களிடம் இருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டே அவர் தனது பணி வாழ்வை ஆரம்பித்தார்.
அதுமட்டுமல்லாமல், வத்திக்கானில் அவர் வசித்த இடத்தின் விறாந்தைகள் வழியாக தான் உறங்குவதற்கு முன்னர் நடந்துசென்று அங்கு எரியும் மின் விளக்குகளை அணைப்பதை பாப்பரசர் வழக்கமாகக் கொண்டிருந்தார் எனவும், அது தொடர்பாக கேட்கின்றபொழுது; இங்கு எரியும் முன்விளக்குகளைக் கொண்டு ஆர்ஜென்டீனாவில் நான் பணிபுரிந்த இடத்தின் ஒரு கிராமத்துக்கு ஒளி கொடுக்கலாம் என அவர் விளக்கமளித்தார் எனவும் வாசித்திருக்கிறோம்.
மிகவும் ஆடம்பரமான ஒரு கார் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அவர் அதனைப் பெற மறுத்து வத்திக்கானில் சாமானியன் ஒருவரால் பாவிக்கப்படக்கூடிய காரையே தனது பாவனைக்காக பெற்றுக்கொண்டார்.
இவை வெறுமனே அவர் திருத்தந்தையாக இருந்தபோது செய்த செயல்கள் அல்ல. மாறாக கடந்த 12 ஆண்டுகளும் அவர் ஒரு எளிமையான வாழ்வையே வாழ்ந்தார்.
தனது பணிவாழ்வில் அவர் பெணகளுக்கு சமத்துவம் கொடுத்தார். தனது முதலாவது புனிதவார சடங்கில் பெண்கள் மற்றும் முஸ்லிம் மகளிரின் கால்களைக் கழுவி முத்தமிட்டதோடு திருச்சபையின் தலைமைப் பீடத்தில் கர்தினால்களால் வகிக்கப்பட்ட பல பதவிகளுக்கு பெண்களை நியமித்தார்.
இப்படி தனது பணிவாழ்வை வாழ்ந்த திருத்தந்தையின் முக்கிய இலக்காக திருச்சபை புதுப்பிக்கப்பட வேண்டும். திருச்சபையின் கறைகள் கழுவப்பட்வேண்டும். திருச்சபைக்குள் எல்லோரும் உள்வாங்கப்பட்டு இறைவனின் இரக்கத்தைப் பெறவேண்டும்.
திருச்சபையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். பொதுநிலையினரும் திருச்சபையில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பனவே இருந்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் திருத்தந்தையால் மேற்கொள்ளுப்பட்ட நடவடிக்கைகள் பெரிதும் பாராட்டப்பட்டன. யாரும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத திருச்சபையாக இருக்க வேண்டும் என்தற்காக கூட்டொருங்கியக்கத் திருச்சபையை அவர் ஏற்படுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், எதிர்காலத் திருச்சபை எப்படி அவர் வேணரடும் என தனது வாழ்வினாலும் போதனையாலும், தெளிவாக சொல்லித்தந்து சென்றிருக்கிறார்.
“சமாதானம் சாத்தியமானது” என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் சொன்ன கடைசி செய்தியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட திருத்தந்தையை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி அவர் காட்டிய வழியில் நடக்க இறைவன் அருள் செய்வாராக’ எனத் தெரிவித்துள்ளார்.