நீர்கொழும்பில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றையவர் தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நீர்கொழும்பு பகுதியில் உள்ள தொழிலதிபரின் வீட்டுக்கு , வட்டிக்கு பணம் தேவை என கூறி இருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களை வீட்டுக்குள் அழைத்து தொழிலதிபர் உரையாடிக்கொண்டிருந்த வேளை ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து சுட முயன்றுள்ளார்.
அதன் போது , துப்பாக்கி இயங்காததால் , சுதாகரித்துக்கொண்ட தொழிலதிபர் , சுட முயன்றவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். அதன் போது மற்றையவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயன்றுள்ளார்.
அந்த துப்பாக்கியும் செயற்படாத காரணத்தால் , துப்பாக்கிதாரிகள் இருவரும் வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
அதன் போது தொழிலதிபர் வீட்டின் கேற்றை மூடியுள்ளார். அதனால் அவர்கள் சுமார் 09 அடி உயரமான மதிலை ஏறி குதித்துள்ளனர்.
அதன் போது ஒருவரின் கால் எலும்பு முறிந்தமையால் அவரால் ஓட முடியாத நிலையில் அவரை தொழிலதிபர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தார். மற்றைய நபர் தப்பியோடியுள்ளார்.
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரின் பொதியினை சோதனை செய்த போது, அதனுள் இருந்து ஒரு கைத்துப்பாக்கி , அதற்கான 05 தோட்டாக்கள் , 09 எம்.எம் துப்பாக்கி அதற்கான 09 தோட்டாக்கள் மற்றும் அதற்கான வெற்று மகசீன் என்பவை மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அம்பாறை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் எனவும், தப்பி சென்ற நபர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.