வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச் சேர்ந்து சகல சபைகளையும் இலகுவாக கைப்பற்றுவதைத் தவிர்த்து, தோல்வி அடைந்த பின்னர் கூட்டுச் சேரலாமென அந்தத் தோல்விக்காக காத்திருப்பதென்பது அறப்படித்த பல்லியின் கதையை நினைவுபடுத்துகிறது. தமிழரசு கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் சுமந்திரனும் சிறீதரனும் எப்போது ஒன்றாக இத்தேர்தல் மேடையில் நின்று வாக்கு கேட்கப் போகிறார்கள்?
இன்னும் இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளதென எதிர்பார்க்கப்படும் உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல், தமிழர்களின் வடக்கையும் கிழக்கையும் மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுகிறதா?
கடந்த சில வாரங்களாக ஆட்சித் தரப்பினர்களான தேசிய மக்கள் சக்தியினர் மேற்கொண்டு வரும் தேர்தல் சுற்றுலாக்களும், கொள்கையில்லாத விளக்கங்களும் ஒரு வகையில் அச்சுறுத்தலாக மாறிவருவதை தமிழ் மக்கள் கூர்மையாகக் கவனிக்கின்றனர்.
தமிழர் பிரதேசத்திலுள்ள உள்;ராட்சிச் சபைகளில் தாங்கள் தோற்றால் என்ன செய்வோம் அல்லது எவ்வாறு பழி வாங்குவோம் என்பதை ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே அநுர தரப்பினர் அறிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் விஜித ஹேரத், பிமல் ரத்னாயக்க, ஹரிணி அமரசூரிய ஆகியோர் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பரப்புரைகள் செய்தனர். ஆதரவு கூட்டங்களை நடத்தினர்.
கடந்த வார பிற்பகுதியில் ஜனாதிபதி தோழர் அநுர குமர வடக்குக்கு விஜயம் மேற்கொண்டார். முன்னைய தேர்தல் காலங்களில் பாசையூரிலும், வல்வெட்டித்துறையிலும் இடம்பெற்ற கூட்டங்களில் காணப்பட்ட சனத்திரளை கடந்த வாரம் நல்லூரில் நடத்திய கூட்டத்தில் காணவில்லை. இவர்களின் அண்டப் புளுகுகளை ஆறு மாதத்துக்குள் மக்கள் கண்டுபிடித்ததன் விளைவாக சனத்தொகை குறைந்திருக்கலாம்.
முன்னைய இரண்டு தேர்தல்களின்போதும் தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக வழங்கிய உறுதிகள் எதனையும் இவர்கள் நிறைவேற்றவில்லை. வேறு வடிவங்களில் புதிய பிரச்சனைகளை உருவாக்கியுள்ளனர். நடைபெறவிருக்கும் உள்;ராட்சித் தேர்தலானது அந்தந்தப் பிரதேசங்களில், முக்கியமாக கிராம மட்டங்களில் உள்;ர் சபைகளுக்கு உறுப்பினர்களையும் தலைவர்களையும் தெரிவு செய்வதற்கானது. கட்சிகள் சார்பில் போட்டிகள் இடம்பெற்றாலும் வேட்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் வாழ்பவர்களிலிருந்தே பொறுக்கியெடுக்கப்படுவர்.
இந்தத் தேர்தல்களில் பிரதமர்களோ, அமைச்சர்களோ கூட்டங்களை நடத்தி வாக்குக் கேட்பது மிகமிக அரிதானது. சில அமைச்சர்கள் தங்கள் பிரதேசங்களில் தங்கள் வாக்கு வங்கிகளை தக்க வைப்பதற்காக தமக்கு ஆதரவானவர்களுக்கு ஆர்ப்பாட்டமில்லாது வாக்குச் சேகரிப்பது உண்டு. எனது நீண்டகால ஊடகப் பணியில் ஜனாதிபதி அல்லது பிரதமர் போன்றவர்களை உள்;ராட்சிச் சபைத் தேர்தல்களின்போது கண்டது கிடையாது. இதற்கு மாறாக இப்போது நடைபெறவுள்ள தேர்தல் அநுர குமர அணியினரால் புரட்சி அரசியலாக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. சார்பு அணியினரான அநுர குமர தரப்பு கிராம மட்டங்களில் உள்;ர் மக்களைத் தேடிப்பிடித்து வேட்பாளராக நிறுத்தியதோடு, அதன் அடுத்த பட்டியலில் அப்பிரதேசங்களைச் சேராத பெரும்பான்மையினர் சிலரையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது, இலங்கை என்பது சுமந்திரன் கூறுவதுபோல ஏக்கராஜ்ய என்ற கொள்கையில், இலங்கையின் எந்தப் பாகத்திலும் எவரும் அரசியல் செய்யலாம் என்பதைக் காட்டுவதுபோல் அமைந்துள்ளது. இதனால்தான் அநுர தரப்பினர் வடக்கில் கூடாரமடித்து பரப்புரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் உருத்துக் காணியில் தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்டு வந்தபோது அதனை நிறுத்தக்கோரி காணிச் சொந்தக்காரர்கள் தொடர்ச்சியான அமைதிப் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் கோரிக்கையை மதிக்காது மிதித்த அநுர குமர தரப்பு விகாரை கட்டி முடிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் பரப்புரைக்கு இங்கு வந்தபோது, தமிழர் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாது போகுமானால் பிரச்சனையை தீர்க்க முடியுமென்று கூறியுள்ளார். இதனைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் உள்ள ஜனாதிபதியே அரசியலை உள்ளிழுப்பது அதிலிருந்து தப்புவதற்கான ஆயுதம்.
குருந்தூர் மலையிலும், வெடுக்குநாறி மலையிலும், திருமலை வெருகல்மலையிலும் தமிழர் வழிபாட்டுத் தலங்களுக்கு முன்னைய ஆட்சிகளில் என்ன நடைபெற்றதோ அதுவே தையிட்டி விகாரையில் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. காணிச் சொந்தக்காரர்கள் அரசியல்வாதிகள் தலையீடு வேண்டாமென்று கூறினால் தாங்கள் விலகிக் கொள்ள தயாரென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளமைக்கு அநுர குமர என்ன பதிலளிக்கப் போகிறார்?
முப்பது வருடங்களுக்கு மேலாக இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி ஊடான வீதி உள்;ராட்சித் தேர்தலை முன்னிட்டு அவசரமாக சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையில் கடுமையான நிபந்தனைகள் எழுதப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட இந்தப் பாதையால் எவரும் நடந்து செல்லக்கூடாது. சைக்கிளில் செல்ல முடியாது. இரவு நேரங்களில் போக்குவரத்துக்குத் தடை என்று பல நிபந்தனைகள்.
பொதுவாக நீதிமன்றங்களில் ஒருவரை பிணையில் விடும்போது கடுமையான நிபந்தனைகள் விதிப்பது சட்ட வழக்கம். ஆனால், திறக்கப்பட்டுள்ள வீதியில் செல்வதற்கு கடும் நிபந்தனைகள். இதற்கு எந்தச் சட்டம் இடமளிக்கிறது என்று நியாயமான கேள்வி கேட்டுள்ளார் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன்.
இவை எல்லாவற்றையும் தாண்டி உச்ச சர்வ அதிகார அறிவிப்பை அநுர குமர ஒவ்வொரு கூட்டங்களிலும் வெளியிட்டு வருகிறார். தமது கட்சி வெற்றி பெறும் உள்;ராட்சிச் சபைகளுக்கு வேண்டிய நிதி எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக வழங்கப்படுமென்றும், மாற்றுக் கட்சிகள் வெற்றி பெறும் சபைகள் நிதிக்கு விண்ணப்பித்தால் பத்துத் தடவை ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் பகிரங்கமாகவே கூறி வருகிறார். இதனை ஒரு வரியில் கூறுவதானால், தாங்கள் வெற்றி பெறாத சபைகளுக்கு நிதி வசதி கிடையாது என்பதுவே. இதனை லஞ்சக் குற்றச்சாட்டுக்குள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம், தேர்தலுக்கு முரணான செயற்பாடு என முறையிடலாம் என சொல்லப்படுகிறது. பூனைக்கு மணி கட்டப்போவது யார்?
அநுரவின் பிரதமர் ஹரிணியின் தேர்தல் பிரச்சாரம் வேறு வகையானது. புதிய அரசியலமைப்பு வரும், அதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும், மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும், தமிழர்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என்றவாறு யாழ்ப்பாணத்திலுள்ள சைவ ஆலயங்களின் வீதிகளில் கூட்டங்கள் வைத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்றும் சூழ்ச்சிப் போக்கு இவருடையது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அநுர குமர பங்குபற்றிய கூட்டம் கடந்த வாரம் நல்லூரில் இடம்பெற்றது. இதற்கான முற்கூட்டிய அறிவிப்பில் கிட்டு பூங்காவில் கூட்டம் இடம்பெறுமென இருந்தது. பின்னர் வந்த அறிவிப்புகளில் இடப் பெயரை சங்கிலியன் பூங்கா என மாற்றி விட்டார்கள். கிட்டு என்ற பெயரை பயன்படுத்தினால் அது விடுதலைப் புலிகளின் நிலம் என்று தங்களைப் பாதித்து விடலாமென ஏற்பட்ட அச்சமே இதற்குக் காரணம்.
யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க (ஜே.வி.பி.யின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு கண் வைத்திருப்பவர்), தாங்கள் ஒருபோதும் தமிழரைக் கைவிட மாட்டோம் என்று தம் பங்குக்கு சொல்லியுள்ளார். இவர்களுக்கு ஒட்டுமொத்தமாக பதிலளி;ப்பது போல் தமிழரசுக் கட்சியின் நிகழ்காலத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்து வெளியிடுகையில், சிங்கள தேசியத்தில் தமிழரைக் கரைக்க ஜே.வி.பி. முயற்சிக்கிறது என்று சாடியுள்ளார்.
இந்தக் கருத்தை தமிழ் மக்கள், முக்கியமாக தமிழ் வாக்காளர்கள் தங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கையாக கவனத்தில் எடுக்க வேண்டிய நேரம் இது.
தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அண்மையில் வெளியிட்ட ஒரு கருத்து இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. அது இதுவே: கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் பத்து வீதமானவர்கள் வாக்களிக்கவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு 25 சதவீத வாக்குகள் கிடைத்தன. தமிழரசு கட்சிக்கு 20 சதவீதம் கிடைத்தது, ஏனைய தரப்பினருக்கு இதனிலும் குறைவான வாக்குகள் கிடைத்தன. இதன்படி பார்க்கையில் தமிழ் கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கூட்டினால், அது தேசிய மக்கள் கட்சிக்குக் கிடைத்ததைவிட கூடுதலானது என்று கூறியுள்ளார் சுமந்திரன்.
இந்தக் கணக்கு உண்மையானது. இதன்படி பார்க்கின், தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளைவிட அதற்கு எதிராகக் கிடைத்த வாக்குகளே கூடுதலானவை. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. இதனை நன்கு தெரிந்து கொண்ட பின்னரும் தமிழ் தேசிய கட்சிகள் எதற்காகப் பிரிந்து நின்று தங்கள் வாக்குகளை சிதறடிக்க வேண்டும்? இதனை நன்கு தெரிந்து கொண்டதால்தான் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் என்ற வேண்டுகோளை கஜேந்திரகுமார் விடுத்தார் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அப்போது இதற்குப் பதிலளித்த தமிழரசு கட்சி, தேர்தலின் பின்னர் தேவைப்பட்டால் நாம் ஒன்றிணைந்து உள்;ராட்சிச் சபைகளை கைப்பற்றுவோம் என்று கூறியது புத்திசாலித்தனமானதா?
வெற்றி பெறுவதற்குச் சாதகமாக தேர்தலுக்கு முன்னர் கூட்டுச் சேர்ந்து சகல சபைகளையும் இலகுவாக கைப்பற்றுவதைத் தவிர்த்து, தோல்வி அடைந்த பின்னர் கூட்டுச் சேரலாமென அந்தத் தோல்விக்காக காத்திருப்பதென்பது அறப்படித்த பல்லியின் கதையை நினைவுபடுத்துகிறது.
தமிழரசு கட்சிக்குள் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் சுமந்திரனும் சிறீதரனும் எப்போது ஒன்றாக இத்தேர்தல் மேடையில் நின்று வாக்கு கேட்கப் போகிறார்கள்?