இத்தாலியின் தெற்கு நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று வியாழக்கிழமை நடந்த கேபிள் கார் விபத்தில் நான்கு பேர் இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். மற்றொருவர் காணாமல் போனதாக உள்ளூர் மீட்பு சேவைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காஸ்டெல்லம்மரே டி ஸ்டேபியா நகரில் உள்ள மான்டே ஃபைட்டோவில் நடந்தது.
வாகனம் செங்குத்தான சரிவில் இருந்தபோது, கேபினைத் தாங்கி நின்ற கேபிள்களில் ஒன்று அறுந்து விழுந்ததாக பல இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
மீட்புப் பணிகள் மூடுபனி மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த நேரத்தில் மற்றொரு கேபிள் கார் அதே வழியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது, ஆனால் அது நகரத்திற்கு அருகில் இருந்தது. அதனால் 16 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மான்டே ஃபைட்டோ கேபிள் கார் ஒரு கொடிய விபத்தை சந்திப்பது இது முதல் முறை அல்ல. 1952 இல் இந்த பாதை திறக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு கேபிள் விழுந்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவூட்டத்தக்கது.
பயணிகள் வெசுவியஸ் மலையையும் நேபிள்ஸ் விரிகுடாவையும் கண்டு ரசிக்கக்கூடிய கேபிள் கார் ஒரு வாரத்திற்கு முன்புதான் சுற்றுலாப் பருவத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது.
1,100 மீட்டர் உயரமுள்ள (3,600 அடி) மலையை அடைய பொதுவாக சுமார் 10 நிமிடங்கள் எடுக்கின்றது.