சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிஸாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (17) பி.ப 4.25 மணிக்கு அவரது வீட்டுக்குச் சென்ற மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸார் இருவரினால் நாளை 19 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அன்னை பூபதியின் நினைவு தினம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு காத்தான்குடி மற்றும் கொக்குவில் பொலிஸாரினால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதமானது சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதன்மூலம் தனது மொழி உரிமை மீறப் பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரான ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 19 ஆம் திகதி அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் மேற்படி விசாரணைகள் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.