Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கீரிமலை சடையம்மா மடம், ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்து நிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நீண்டகாலமாக சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் இவற்றை விடுவிப்பதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு ஜனாதிபதியிடம் வேண்டுகிறோம்.
மேலும் பொதுமக்களின் காணிகளில் வடக்கு கிழக்கில் படையினர் தொடர்ந்து தங்கி உள்ளனர். தாங்கள் அவ்விடயத்தில் அக்கறை கொண்டு பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும். பாடல் பெற்ற தலமாகிய திருக்கோணேஸ்வரர் திருத்தலத்திற்கு அருகாமையில் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலுக்குச் செல்லும் பாதையில் பெட்டிக்கடைகள் அமைக்கப்பட்டு கோயில் புனிதத்தை தொடர்ந்து கெடுத்து வருகிறார்கள். இவ்விடயம் தொடர்பாக சென்ற வருடம் நல்லை ஆதீனத்துக்கு தாங்கள் வருகை தந்தபோது எடுத்துரைத்தோம்.
தயவுசெய்து வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வர திருத்தல சுற்றாடலை பேணுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில் வேண்டுகிறோம். தாங்கள் பதவி ஏற்றதும் நீண்டகாலமாக உள்ள தமிழர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்து வைப்பேன் என கூறி வந்துள்ளீர்கள். நிரந்தரமான பூரண உரிமைகள் உள்ளடக்கிய தீர்வை வழங்கி எம்மினத்தின் நீண்ட காலப் பிரச்சினையை தீர்த்து வைக்க முன்வாருங்கள் என்றுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி வருகை தரவுள்ள நிலையில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது