அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு மாத்திரமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களின் பின்னர் நாம் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே அரசாங்கம் இதனை ஒரு அவசர நிலைமையாக அறிவித்து, நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
ட்ரம்பின் புதிய வரி கொள்கையை நடைமுறைப்படுத்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 3 மாதங்களின் பின்னர் இந்த வரி முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேர்தலின் போது அமெரிக்க ஜனாதிபதி கூறிய விடயங்களை தற்போது நடைமுறைப்படுத்தாமலிருக்க முடியாது. இந்நிலையில் எமக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும். 25 – 30 சதவீத வரி செலுத்தப்பட்டாலும் அது எமக்கு பாரிய பிரச்சினையாகும்.
எமது வர்த்தகங்களில் இலாபத்துடன் ஒப்பிடுகையில் அந்தளவுக்கு வரி செலுத்த முடியாது. அது நஷ்டமாகவே காணப்படுகிறது. வரி அதிகரிக்கும் போது பொருட்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும்.
எனவே இந்த பிரச்சினை முடிந்து விட்டதாக எம்மால் கருத முடியாது. எனவே இந்த 3 மாதங்களில் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இதனை எம்மால் நிறுத்த முடியாது. இதனால் ஏற்படக் கூடிய சவால்களில் ஒன்று தொழில் இழக்கப்படுதலாகும். இலட்சக்கணக்கானோர் இந்த ஏற்றுமதி தொழில் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இலட்சமாகக் காணப்பட்டாலும் அதனை விடக் குறைவானாலும் தொழில் இழப்பு என்பது பாரிய பிரச்சினையாகும்.
இது எமது பொருளாதாரத்தின் மீது நேரடி தாக்கத்தைச் செலுத்தும். எமக்கு கிடைக்கும் வருமானத்துக்கும் செலவுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படும்.
வருமானம் குறைவடைவதால் நாம் கடன் பெறும் தொகையும் அதிகரிக்கும். இந்தக் காலாண்டில் 300 மில்லியன் டொலர்களை மீள செலுத்த வேண்டியுள்ளது. மத்திய வங்கியிலிருந்து இந்த தொகையைப் பெற்றாலும் கடன் பெற்றாலும் அது ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சியையே ஏற்படுத்தும். இப்போதும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தே காணப்படுகிறது. இந்த பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2028இல் மீள செலுத்தப்பட வேண்டிய கடனை செலுத்த முடியுமா என்பது குறித்து மீள சிந்திக்க வேண்டும். கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வேகத்தை 5 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்தது. எவ்வாறிருப்பினும் தற்போது இந்த பிரச்சினை காரணமாக இந்த பொருளாதார வளர்ச்சி வேகமானது வீழ்ச்சியடையக் கூடும்.
இவ்வாறு எமக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே ஒருபுறம் இது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் அதேவேளை, தேசிய ரீதியில் இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
எனவே இதனை அவசர நிலைமையாகக் கவனத்தில் கொண்டு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
இந்த நிலைமை தொடர்பில் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் வேறு பிரச்சினைகளும் ஏற்படும். எனவே அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.