தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாக உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்போவதில்லையென்ற அனுர திசநாயக்கவின் கருத்து கடுமையாக சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
எந்தக் கட்சி உள்ளுராட்சிசபையை கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே நிதி ஒதுக்கீடு என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி, “நிதி ஒதுக்குவதற்கு முன், யார் திட்டத்தை அனுப்புகிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியுடன் இருந்தால், நாங்கள் கண்களை மூடிக்கொண்டு நிதியை ஒதுக்குவோம். இருப்பினும், அது வேறொரு கட்சியுடன் இருந்தால், நாங்கள் திட்டத்தை குறைந்தது 10 முறையாவது படிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நபர்கள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை” என இன்றைய தினம் மன்னாரில் பிரச்சாரக்கூட்டத்தில் அனுர தெரிவித்திருந்தார்.
சஜித் பிரேமதாச அனுரவின் கருத்தைக் கண்டித்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் மற்றொரு முயற்சி என்றும், அதுபோன்ற “மலிவான அரசியல் தந்திரங்களுக்கு” எதிர்காலம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தனது கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சபைகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாது என்று கூறி ஜனாதிபதி மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார், அதுபோன்ற அற்பமான அரசியல் மிரட்டல்களால் சோர்வடைய வேண்டாம்.
ஜனாதிபதி என்பவர் இன,மத பேதங்களைக் கடந்து சேவையாற்ற வேண்டும். மக்களில் எத்தனை பேர் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் எத்தனை பேர் ஐக்கிய மக்கள் சக்தியினர் என்று பாரபட்சம் பார்த்து கடமையாற்றக் கூடாது” என்றும் சஜித் பிறேமதாசா தெரிவித்துள்ளார்.