Home சிறப்புப் பார்வை எதிர்க்கட்சிகள் இல்லாத ஆட்சியமைப்பைஉருவாக்குவதுதான் இறுதி இலக்கா? பனங்காட்டான்

எதிர்க்கட்சிகள் இல்லாத ஆட்சியமைப்பைஉருவாக்குவதுதான் இறுதி இலக்கா? பனங்காட்டான்

by ilankai

1971லும் 1987லும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட புரட்சியில் தோல்வி கண்டு, தேர்தல்கள் ஊடாக நாடாளுமன்றம் சென்று அமைச்சர் பதவிகளை வகித்தும் வெறுப்புக் கண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று அரியாசனம் ஏறியிருக்கும் தேசிய மக்கள் சக்தி எனும் ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கும் முன்னாள் அரசியல் தலைமைகள் மீதான விசாரணைகளின் உள்நோக்கம் பல மட்டங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அது திருவிழாக் கோலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இப்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காலம் அவ்வாறாக அன்றி சோபை இழந்து காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்வதானால் தங்கள் வேட்பாளர்கள் யார், எந்தெந்த சபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது வாக்காளர்களுக்குத் தெரியாதது போன்று நிலைமை காணப்படுகிறது. 

இதனைவிட, யார் எந்தச் சபைக்கு போட்டியிடுகிறார் என்பது தெரியாது வாக்காளர்கள் தடுமாறுகின்றனர். இதே தடுமாற்றம் தேர்தல் திணைக்களத்திலும் காணப்படுகிறது. இடைநிறுத்தப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் எந்தெந்த சபைகளை உள்ளடக்கியுள்ளது என்பது புரியாத திண்டாட்டம் தேர்தல் திணைக்களத்துக்கு. 

இந்தக் காரணங்களால், திட்டமிட்டவாறு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா என்றவாறு சில ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. புதிய தேர்தல் நடைமுறைகளே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் குற்றம் சாட்டுகின்றன. நிலைமையை உற்று நோக்கின் இப்போது தேர்தல் இடம்பெறுவதை எவருமே விரும்பவில்லை போல் தெரிகிறது. 

இது தொடர்பாக தமிழ்க் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்த தகவல்கள் களநிலைமையை அப்பட்டமாகத் தெரியத்தந்தது. தங்கள் கட்சிக்கு அபேட்சகர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருந்ததாகவும், ஒரு சிலர் இரண்டு மூன்று அணிகளில் தங்கள் பெயர்களை வழங்கியதாகவும் சொன்னதுடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. இம்முறை தங்கள் கட்சி எந்தச் சபையையும் கைப்பற்றும் என தாம் நினைக்கவில்லை என்றும், எல்லாம் இயற்கையின் நியதியாகவே இடம்பெறும் என்றும் இயற்கையின் மேல் பாரத்தைச் சுமத்திவிட்டு அமைதி கொண்டார். இவரது கருத்தை பார்க்கையில் நிலைமை மிகப் பரிதாபமாக இருப்பது புரிகிறது. 

தெற்கில் தேர்தல் பரபரப்பைவிட ஊழல், மோசடி, மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்டவர்கள் எனப்படுவோர் மீதான விசாரணைகளும் கருத்துப் பரிமாறல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மையப்படுத்திய பட்டலந்த வதைமுகாம் சமாசாரம் எதிர்பார்த்ததைவிட மேலும் விரிவடைவது தெரிகிறது. அநுர குமர அரசாங்கம் இவ்விடயத்தை இயலுமானவரை விசாலமாக்கி ரணிலுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புவது போல அசைவுகள் காணப்படுகின்றன. இதற்கான ஓர் ஆயுதமாக இது தொடர்பான முன்னைய விசாரணைக் கமி~ன் அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரை பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஊடாக கேள்விக்குறியில் நிறுத்தியுள்ள அநுர குமர தரப்பு, இப்போது ரணிலையும் இன்னொரு குற்றச்சாட்டில் கூண்டில் நிறுத்தும் வேலையை ஆரம்பித்துள்ளது. மகிந்த தரப்பும் ரணில் தரப்பும் முன்னொரு காலத்தில் ஜே.வி.பி. அணியினருடன் தங்கள் தங்கள் தேவைகளுக்காக நெருங்கிய நட்பில் இருந்தவர்கள் என்பதை இப்போது பலரும் மறந்திருக்கலாம். அதேபோன்று அநுரவின் ஜே.வி.பி.யினர் இந்தியாவுடன் பரம விரோதிகளாக இருந்ததையும் மறந்துவிட முடியாது. 

பல விடயங்களில் இந்தியாவுக்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும், இந்தியா அதனை மறந்து தற்போது தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இதனால் தாங்கள் இன்று இந்தியாவுக்கு பூரண ஆதரவு என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இந்தியாவா அல்லது ஜே.வி.பி.யா மாபெரும் நடிகர் என்பது தெரியவில்லை. அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்று இதனைப் பார்ப்பதா என்றும் புரியவில்லை. 

இலங்கை வரலாற்றில் ஆயுதப்புரட்சி என்பது 1971 ஏப்ரல் 5ம் திகதி சேகுவேர என அழைக்கப்பட்ட ஜே.வி.பி.யினரால் நடத்தப்பட்டது. ஒரே இரவில் 76 பொலிஸ் நிலையங்களை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றிய இவர்கள் அன்றைய சிறீமாவோ பண்டாரநாயக்கவை உயிருடன் அல்லது உயிரற்று பிடித்து ஆட்சியைக் கைப்பற்றுவதை முனைப்பாகக் கொண்டு இயங்கினர். ஆனால், அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சிறீமாவோவின் வேண்டுகோளை ஏற்று ஒரு டசின் வரையான இராணுவ ஹெலிகொப்டர்களை அனுப்பி நாற்பதினாயிரம் வரையான ஜே.வி.பி.யினரை தென்னிலங்கைக் காடுகளில் கொன்றொழித்ததாக வரலாறு பதிவு செய்துள்ளது. 

அன்றிலிருந்து ஜே.வி.பி. இந்திய எதிர்ப்புக் கொள்கையை தனது நிரந்தர கொள்கையாக அமைத்துக் கொண்டது. அப்போது ஜே.வி.பி.யின் தலைவராக இருந்த றோகண விஜேவீரா உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்த சிறீமாவோ அரசு குற்ற விசாரணை கமி~ன் ஊடாக நீண்டகால சிறைக்கு அனுப்பியது. 1977 தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜே.வி.பி.யினருக்கு மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்தார். அதேசமயம், சிறீமாவே பண்டாரநாயக்கவின் குடியுரிமையை இரத்துச் செய்து அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தார்.  

1982ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்துப் போட்டியிட்ட றோகண விஜேவீரவுக்கு 4.6 வீதமான வாக்குகள் கிடைத்தது. கிளர்ச்சிக் குழுவாக இருந்த ஜே.வி.பி., ஜே.ஆரின் ஆசிர்வாதத்தோடு அரசியல் களத்துக்கு வந்தது. ஆனால், 1987ல் ராஜிவ் காந்தியுடன் ஜே.ஆர். ஒப்பந்தம் செய்தபோது, தேசபக்தர்கள் என்ற பெயரில் இந்திய எதிர்ப்பை ஜே.வி.பி. பகிரங்கமாக வெளிப்படுத்தியது. ஜே.வி.பி.யின் வன்செயலால் பெருமளவு அழிவு தெற்கில் இடம்பெற்றது. அவ்வேளை ஜே.வி.பி.யை அடக்குவதற்கு ஜே.ஆர். இராணுவ பலத்தை பயன்படுத்தினார். இக்காலத்தில் ஜே.ஆரின் அமைச்சரவையில் முக்கியமான ஒருவராக அவரது பெறாமகனான ரணில் விக்கிரமசிங்க இருந்தமை குறிப்பிடப்பட வேண்டியது. 

1989ல் ஜனாதிபதியாகிய ஆர்.பிரேமதாச ஜே.வி.பி.யினரை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு உண்டு. இதற்கென ரணிலின் பியகம தொகுதியில் அமைந்திருந்த பட்டலந்த வதைமுகாம் எண்ணுக்கணக்கற்ற ஜே.வி.பி.யினரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தமை அப்போதே தெரியவந்திருந்தது. இது தொடர்பாக விசாரணைக் கமி~ன் நியமிக்கப்பட்டு அறிக்கை கையளிக்கப்பட்டதாயினும் அது இதுவரை குளிர்சாதன பெட்டிக்குள் புதைக்கப்பட்டிருந்தது. 

2004ம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் இலங்கை அரசாட்சி மாறிய வேளையில் ஜே.வி.பி. நாடாளுமன்ற அரசியல் ஊடாக அவரோடு இணைந்து இயங்கியது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த அநுர குமர திஸ்ஸநாயக்க சந்திரிகா அரசில் அமைச்சராகவும் இருந்தார். 1988ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான நடிகர் விஜய குமாரதுங்க அவரது இல்லத்தின் முன்னால் படுகொலை செய்யப்பட்டதற்கு ஜே.வி.பி.யினரே காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பெர்னாண்டோ என்பவர் இக்கொலையை ஜே.வி.பி.யினரின் உத்தரவின் பேரில் தாமே செய்ததாகவும் ஒப்புதல் அளித்திருந்தார். 

ஆனால், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகிய பின்னர் இக்கொலை தொடர்பாக நியமித்த விசாரணைக் கமி~ன் முன்னர் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசவும் அவரது இரண்டு அமைச்சர்களும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனால் ஜே.வி.பி.யினரை தமது அரசில் சேர்த்துக் கொள்வதில் சந்திரிகாவுக்கு இடைஞ்சல் இருக்கவில்லை. தமிழர் தரப்புடன் போர் நடத்திய சந்திரிகா குமாரதுங்கவுக்கு முழு ஆதரவும் வழங்கிய ஜே.வி.பி., சந்திரிகா சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை கண்டித்து அரசிலிருந்து வெளியேறியது இன்றைய சூழ்நிலையில் நினைவுபடுத்தப்பட வேண்டியது. 

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி சார்பாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டபோது அவருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கியதையும் இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆக, கடந்த காலங்களில் இப்போது தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) என அழைக்கப்படும் ஜே.வி.பி., சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்துடனும் உடன்பட்டும் முரண்பட்டும் தனது இடத்தை ஸ்திரப்படுத்தி வந்ததை அரசியல் வரலாற்றாளர்கள் உன்னிப்பாகப் பதிவு செய்துள்ளனர். 

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் பெருவெற்றி கண்ட அநுர குமர தரப்பிலான தேசிய மக்கள் சக்தி, ஏற்கனவே ஆட்சிக் கட்டிலில் இருந்த சிங்களத் தலைமைகளை ஏதோ ஒருவகையில் குற்றக்கூண்டில் ஏற்றும் வேலையை ஆரம்பித்துள்ளது. இப்படிக் கூறுவதால் குறிப்பிட்ட சிங்களத் தலைமைகள் குற்றமற்றவர்கள் என்று அர்த்தமில்லை. 

ஊழல் ஒழிப்பு, மோசடிகாரர்களுக்கு தண்டனை, தூய நாட்டைக் கட்டியெழுப்புவது என்பவைகளை தங்கள் கொள்கையாக பிரகடனம் செய்து ஆட்சிக்கு வந்த அநுர குமர தரப்பு சொன்னவைகளை செய்யாது தயக்கம் காட்டுவதாக குற்றஞ் சுமத்தப்பட்ட நிலையை மாற்ற தனது நடவடிக்கைகளை திட்டமிட்டவாறு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனை, எதிர்க்கட்சிகளை அழிப்பதாகவும், ஜனநாயக ஒழிப்பின் ஊடாக சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முனைவதாகவும் குற்றஞ்சாட்டுவோரும் உண்டு. 

அநுர குமர அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பினும் அவை பகிரங்கமாக சட்டத்துக்கும் நீதிக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டுமென மக்கள் விரும்புவதை புறக்கணிக்கக் கூடாது என்பதே பலரதும் விருப்பம். ஆனால், வேகம் கொள்ளும் அரச தரப்பின் செயற்பாடுகள் எதிர்கட்சிகளே இல்லாத அரசாட்சி முறைமை ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதே இறுதி இலக்காகலாம் என்னும் சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளது போல இவ்விடயத்திலும் இந்தியாவின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு இருக்குமா? 

Related Articles