Home யாழ்ப்பாணம் ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்

ஆலய நெறிமுறைகளை மீறிய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர்

by ilankai

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு பிரதமரின் பாதுகாப்புக்காக சென்ற பாதுகாப்பு பிரிவினர் , ஆலய வளாகத்தினுள் சப்பாத்துக்களுடன் நடமாடியமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. அதன் போது ஆலய வழிபாட்டிற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியர் ஆலயத்திற்கு சென்று இருந்தார். 

அதன் போது, பிரதமரின் பாதுகாப்புக்காக ஆலய சூழலில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சப்பாத்துகளுடன் ஆலய வளாகத்தினுள் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

அதேவேளை , ஆலயத்தினுள் பிரதமர் வழிப்பாட்டிற்காக சென்ற வேளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்கள் மேலங்கிகளுடன் ஆலயத்தினுள் பிரவேசித்தனர். 

பிரதமருடன் சென்றிருந்த கடற்தொழில் அமைச்சர் இரா சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் மேலங்கிகளை கழட்டி விட்டு சென்ற போதிலும் , பிரதமரின் பணிக்குழாமை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பிரிவினரும் மேலங்கியுடன் சென்று இருந்தனர். 

பிரதமரின் வருகைக்காக அதிகாலை வேளை குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவினர் ஆலயத்திற்கு சென்ற பக்தர்களை உடற்சோதனைக்கு உட்படுத்தி , கெடுபிடிகளை அதிகரித்தமையால் , பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கி இருந்தனர். அது தொடர்பில் ஆலய பிரதம குருக்களால் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles